கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணியுடன் வரும் டிசம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு, முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அப்போது, கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் வெனிசூலா அணியுடன் நடந்த பிரெண்ட்லி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மோதியது.
தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா வருகை தரும் மெஸ்ஸி, தனது இன்ஸ்டா பக்கத்தில்" Very Special Country " என்று இந்தியா பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த முறை மெஸ்ஸி 3 நாட்கள் இந்தியாவில் தங்கவிருக்கிறார். கண்காட்சி கால்பந்து ஆட்டம், இந்திய கால்பந்து வீரர்கள், ரசிகர்களுடன் சந்திப்பு. செலிபிரிட்டிகளுடன் சந்திப்பு என்று டிசம்பர் மாதம் களை கட்டப் போகிறது.
மெஸ்ஸியின் நிகழ்ச்சிகள் என்ன ?
டிசம்பர் 13ம் தேதி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் 12 மணி முதல் 1.30மணி வரை கண்காட்சி ஆட்டம் நடைபெறுகிறது. அர்ஜெண்டினா அணியுடன் பாய்ச்சிங் பூட்டியா, சவுரவ் கங்குலி , லியாண்டர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் மோதவுள்ளனர். தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன, அன்றைய தினம் மாலை கொல்கத்தா ரசிகர்களுடன் மெஸ்ஸி உரையாடுகிறார்.
அன்றைய தினம் இரவு அகமதாபாத் செல்லும் மெஸ்ஸி அங்கு அதானி பவுன்டேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில், அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் விளையாட்டு துறை முன்னேற்றம், விளையாட்டு துறை தொடர்பான கல்வி குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. அகமதபாத் தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
டிசம்பர் 14ம் தேதி மாலை மும்பையே களைக்கட்ட போகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். ஷாருக்கான், தோனி, சச்சின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ. 3,500 முதல் 50 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியும் விட்டது.
டிசம்பர் 15ம் தேதி டெல்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை சந்தித்து உரையாடுகிறார். பின்னர், அங்குள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் விராட்கோலி, சப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்கிறார்.
இதற்கிடையே, நவம்பர் மாதத்தில் மெஸ்ஸியுடன் அர்ஜெண்டினா அணி கேரளா வருகிறது. கொச்சி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் அந்த அணி நட்பு ஆட்டத்தில் பங்கேற்கிறது. இதற்கான, கொச்சி மைதானத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். பாதுகாப்பு ஏற்பாடு முதல் பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மெஸ்ஸி இந்தியா வருவதால், கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் அதிகம். அந்த ரசிகர்கள் மெஸ்ஸி வருகையை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பையை அர்ஜெண்டினா கைப்பற்றியது. தொடர்ந்து, 2026ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. ஒருவேளை, இந்த தொடருக்கான அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸி இடம் பெற்றால், அவர் விளையாடும் கடைசி உலகக் கோப்பை இதுவாக இருக்கும். தற்போது, மெஸ்ஸிக்கு 38 வயதாகிறது.
பொதுவாக, கால்பந்து வீரர்கள் 36 வயதை தாண்டி விட்டால், ஓய்வு அறிவித்து விடுவார்கள். மெஸ்ஸி, ரொனால்டோ போன்றவர்கள் தங்களது பாடி பிட்னெஸ் காரணமாக தொடர்ந்து களத்தில் உள்ளனர்.