அப்படி என்னத்தை பண்ணினாங்கன்னு தெரியல. டீலக்ஸ் ரூமுக்குள் காலங்காத்தால ரம்யாவும், சுபியும் ‘நேற்று இவங்களை டார்கெட் பண்ணியாச்சு, இன்னிக்கு வேற ஆளை டார்கெட் பண்ணிக்கலாம்’ என்று சீரியஸாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ தண்ணி பிரச்சினையில் குட்டி ஜெனிலியா வியானா, மொரட்டு பிரவீணிடமே இடம் தெரியாமல், மலையோடு போய் மோதும் முட்டை போல முட்டி மண்டையை உடைத்துக்கொண்டார். அவர், இவர் பேசுவதை காதில் வாங்காமல் இன்னொருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே கண்ணீர் பொங்க, பொங்கித்தள்ளினார்.
அடுத்து, தர்பூசணி நாயகனைப் பிடித்து, போர்வை மடித்து வைக்கச்சொல்லிக் கொண்டிருந்தார்கள் டீலக்ஸ் ஆட்களான ரம்யாவும், அரோராவும். அவர் ஒரு போர்வையை மடித்து வைத்துவிட்டு, ‘கண்ட்ரி ப்ரூட்ஸ்’ என்று ஓமக்குச்சி போல முனகிவிட்டுப் போனார். அதில் கொதித்த ரம்யா, அதை ஒரு குட்டி பஞ்சாயத்தாக்கினார். அதில் பூசணி ’படிச்சிருக்கியா, படிக்கலயா?’ என்று வாயை விடவும், அதில் கடுப்பான ரம்யா கத்திக்கூப்பாடு போட, ’அடப்பாவி படிப்பை இழுத்துட்டானா இந்த தர்பூசணி’ என்று எஃப்ஜே, கமருதீன் இருவரும் உள்ளே புகுந்தார்கள். கூட்டம் கூடியது. இருவரும் தர்பூசணி நாயகனின் முகத்துக்குக் கிட்டே போய், ‘என் எஜுகேசன் தெரியுமாடா உனக்கு?’ என்று கத்திக் கதறி பயமுறுத்திவிட்டார்கள்.
வாதாடுபவர்கள், சமாதானப்படுத்துபவர்கள் என யார் வாயிலயிருந்தும் ‘படிப்பு, சம்பளம், டபுள்கேம், வெட்டிருவேன், கைய நீட்டாத, ஒருமையில் பேசாத’ என்று என்ன வார்த்தை வந்தாலும், அதைப் பிடித்துக்கொண்டு இன்னொரு பஞ்சாயத்து ஆகிக்கொண்டிருந்தது. எது முதல் பஞ்சாயத்து என்பதே மறந்து போய் அடுத்தடுத்தக் கட்டத்துக்குள் போய்க்கொண்டிருந்தார்கள்.
இந்தக் கூத்துகளைப் பார்த்து அடப்பாவிகளா, வரக்கூடாத இடத்துக்கு வந்துவிட்டோம் போலயே என்றபடி அப்சரா விலகி ஓடினார். முழ நீளத்துக்கு பேசற நம்ம வாயிலயே மண்ணள்ளிப் போட்டிருவானுக போலயே என்ற கவலையில் தனிமையில் தண்ணீர் டேங்க் பக்கத்திலேயே செட்டிலாகியிருந்த சபரி மனதை தைரியப்படுத்திக்கொண்டு உள்ளே வந்து, ‘அமைதி என்பதையே இங்க சத்தமாகத்தானே சொல்ல வேண்டியிருக்கு’ என்பதைப்போல, ‘கத்தாதீங்கப்பா’ என்று வீடே அலறும்படி கத்திச் சொல்லி பஞ்சாயத்துக்குள்ளே வந்தார். ஆனாலும் பஞ்சாயத்து தீரவில்லை. தர்பூசணி நாயகனுக்கும், கமருதீனுக்கும் கைகலப்பாகும் போலிருந்தது. பின்னர் இருவரையும் இரு வேறு குழுக்கள் தள்ளிக்கொண்டு போயின.
ஊஹூம், இது எதுவும் நமக்கு நல்லதாப் படவில்லை, எல்லாவனும் சேர்ந்து தர்பூசணி நாயகனை - கண்டெண்ட் கொடுக்க வெச்சு - வலுவா பல வாரங்களுக்கு உள்ளே உக்கார வைச்சிருவாங்க போல!
‘கண்ணாடி போட்டு வேலை செய்யுங்கக்கா, பாருங்க எவ்வளவு அழுக்கு’ என்று, சுத்தம் செய்துகொண்டிருந்த பார்வதியை பார்த்துக் கேஷுவலாகச் சொன்ன சுபி, பார்வதியின் இன்னொரு முகத்தை வெளியே கொண்டுவந்தார். அந்த வார்த்தைக்கு டிரிக்கர் ஆன விஜேபாரு, 'இந்த மாதிரி நக்கலா பேசறதெல்லாம் என்னாண்ட வேணாம்' என்று தேவையில்லாமல் பொங்கினார். அது கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.
கனி, சமைக்கும் போது, குடிக்கிற தண்ணீரை கொஞ்சூண்டு ஊற்றியதற்காக, பிக்பாஸ் விதிமீறல் பிரச்சினைக் கிளப்பிவிட, கனிக்கு OCD பிரச்சினை இருக்கிறதா என்று அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோனார் பார்வதி. இந்தப் பிரச்சினையில் OCDன்னா என்னான்னு டாக்டர் தர்பூசணி நாயகன் கேட்டது இன்னுமொரு சிறப்பு.
இந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, ஒருவரை டீலக்ஸிலிருந்து, சாதாவுக்கு ஸ்விட்ச் செய்யச் சொன்னார் பிக்பாஸ். கதறக்கதற துஷாரை வெளியே பிடித்துத் தள்ளியது டீலக்ஸ் குரூப். இவரை வைச்சி நமக்கு ஒண்ணும் பிரயோஜனமில்லை என்று எந்த பிரச்சினையுமில்லாமல் எளிதாக வியானாவை டீலக்ஸுக்கு அனுப்பியது சாதா அணி.
அடுத்து வழக்கமா நாலைஞ்சு வாரத்துக்குப் பிறகு கேட்கப்படும், சொந்தக் கதை, சோகக்கதை டாஸ்க்கை முதல் வாரமே ஆரம்பிச்சு வைத்து பார்வையாளர்கள் நமக்கெல்லாம் அதிரடி கொடுத்தார் பிக்பாஸ்! ஆரம்ப வாரத்திலேயே ஆப்பு!
முதல் கதை சொல்லும் வாய்ப்பு நந்தினிக்கு! ஒரு வார்த்தை பேசறதுக்கு முன்னாலேயே சேர்த்துவைத்த சோகத்தையெல்லாம் அழுதுத் தீர்த்துவிட்டுதான் ஆரம்பித்தார். பெற்றோர் இருவரையும் இழந்து, தம்பியை தனியாளாக படித்து ஆளாக்கிய பெண் நந்தினி. நிச்சயமாக வலி நிறைந்த நாட்களைக் கடந்திருப்பார். சரியாகவும், விரைவாகவும் சொல்லி முடித்தார்.
அடுத்து கெமி! அப்பாவின் இறப்பு, பாலியல் தொந்தரவு, ஆண் போன்ற தோற்றம், குரல் குறித்த விமர்சனங்களைத் தாண்டி வந்திருக்கிறார்.
அடுத்து தர்பூசணி நாயகன் திவாகர்! இவர் பேசினாலே 'நான் பெருமைக்காக சொல்லல' என்று ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பித்துச் சொல்வதெல்லாம் வெறும் பெருமை பீத்தக்களைத்தான். இதில் கதைகேட்டால் சொல்லவா வேண்டும்! தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர், திடுக்கென அவரது விடியோக்கள் சில பிரபலமாகி, ட்ரோலுக்கு ஆளாகியிருக்கிறார். ட்ரோல்களை புரிந்துகொள்ளுதல், மற்றும் ட்ரோல்களை எதிர்கொள்ளுதல் இவற்றைப் பார்க்கும் போது, தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்று இவர் அடிக்கடி பேசுவதையும், நம்புவதையும் கூட சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அடுத்து இவரைப் பாராட்ட வந்த விக்ரம், எஃப்ஜே, ப்ரவீன் மூவரையுமே பேச விடாமல் போட்டுப் புரட்டி எடுத்ததில், இது ஆவுறதில்ல என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.
இந்தச் சோகக்கதை எபிசோடுகள் கொஞ்சம் சீக்கிரம் முடிந்தால் தேவலை!
இன்றைய காமெடி: கலையரசன் விஜே பார்வதி, தர்பூசணி நாயகன் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருந்தார்: "நான், நீங்க ரெண்டு பேரு அப்பறம் ரம்யா நம்ம நாலு பேருதான் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தெரிஞ்ச முகம்."
முடியல!