சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 6 சிங்கங்கள் உள்ளன. தனித்தனி கூண்டுகளில் இந்த சிங்கங்கள் வசிக்கின்றன. பார்வையாளர்கள் வேனில் வந்து பார்க்கும் வகையில், இரண்டு சிங்கங்கள் மட்டும் தினமும் சஃபாரி பகுதியில் உலவ விடப்படும்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் சஃபாரி செல்வதற்கென 50 ஏக்கர் நிலம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு, செடிகளும் புதர்களும் அடர்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதைத் தாண்டி சிங்கம் வெளியே சென்று விட முடியாது. சஃபாரி பகுதியானது ட்ரோன்களால் கண்காணிக்கப்படுகிறது. இரவு நேரத்திலும் தெர்மல் இமேஜிங் ட்ரோன்களின் கண்காணிப்பில்தான் அந்தப் பகுதி இருக்கும். தவிரவும் பத்து கேமராக்களும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. சிங்கத்துக்கு காட்டில் இருப்பது போன்று இயற்கையான சூழலை உருவாக்கவே இப்படி செய்யப்பட்டுள்ளது. வேனில் சென்று பார்வையாளர்கள் இங்கு உலவும் சிங்கங்களை பார்வையிடலாம்.
இந்த நிலையில், கடந்த 3ம்தேதி காலை 9 மணி அளவில் வழக்கம்போல் இரண்டு சிங்கங்கள் கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டன. திறந்து விடப்பட்ட சிங்கத்தில் ஒன்று கூண்டுக்கு திரும்பி விட்டது . ஆனால் 2023ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பன்னர்கெட்டா தேசிய பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷேர்யார் என்ற ஆறு வயதான ஆண் சிங்கம் மட்டும் கூண்டுக்குத் திரும்பவில்லை.
ஷேர்யார் சிங்கம் மீண்டும் வராததால் ஊழியர்கள், அலுவலர்கள் , அதிகாரிகள் அதிர்ச்சடைந்தனர். சிங்கத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை மருத்துவ குழுவினரும் சஃபாரி பகுதியில் ஆய்வு செய்தனர். சஃபாரி பகுதி முழுவதும் ட்ரோன் கொண்டும் கண்காணிக்கப்பட்டது. 5 குழுக்கள் சஃபாரி பகுதிக்குள் சோதனையிடுட்டும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சிங்கம் வெளியே சென்றுவிடவில்லை என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். அத்தனை கண்காணிப்புகளும் வேலிகளும் இருந்ததால், வெளியே நடமாட வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
பசி எடுத்தவுடன் சிங்கம் மீண்டும் கூண்டுக்கு வரலாம் என்று ஊழியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு, நேற்று ஷேர்யார் சிங்கம் தானாகவே கூண்டுக்குள் வந்தது. பசி எடுத்த காரணத்தினால் மீண்டும் கூண்டுக்குத் திரும்பிய சிங்கத்தை கண்ட பின்னரே, பூங்கா ஊழியர்கள், மருத்துவக் குழுவினர் நிம்மதியடைந்தனர்.
அதுவும், அந்தச் சிங்கம் மின்னல்வேகத்தில் ஓடி வந்ததும் ஒரு வித சிரிப்பை ஏற்படுத்தியது. சிங்கங்கள் நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 கிலோ இறைச்சியை சாப்பிடும் வழக்கம் கொண்டவை. உணவு இல்லாவிட்டாலும், 3 நாட்கள் வரை பசியைத் தாங்க கூடியது. 3 நாளையும் தாண்டி விட்டதால், வயிற்றில் பசி ஏற்பட்டு விட்டதால் மீண்டும் சிங்கம் கூண்டுக்குள் வந்தது.
கடந்த 3 நாட்களாக திகிலை ஏற்படுத்திய ஷேர்யார் சிங்கத்துக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு பந்தம் உண்டு. வண்டலூர் பூங்காவில், விலங்குகளைத் தத்தெடுக்க நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பலரும் விலங்குகளை தத்தெடுத்தனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஷேர்யார் சிங்கத்தைத் தத்தெடுத்தார். சிங்கத்துக்கு உணவு வழங்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் பல முறை விலங்குகளை தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே மற்றொரு சிங்கத்தையும் , யானையையும் அவர் தத்தெடுத்துள்ளார்.
வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா பூங்கா 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் மிகப் பெரிய இந்த பூங்காவில் 2,400 விலங்குகள் , பறவைகள் உள்ளன. சிங்கம், யானை, புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளும் பராமரிக்கப்படுகின்றன.