மலையாளத் திரையுலகில் வெளிவந்த 'லோகா: சாப்டர் 1: சந்திரா' திரைப்படம் தற்போது இந்திய அளவில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்த படம் ரூ.298 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லீன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடித்துள்ள இந்த ஃபேண்டஸி, அட்வென்ச்சர் வகைத் திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடினர். கல்யாணி பிரியதர்ஷன் “சந்திரா” எனும் அமானுஷ்ய சக்தி கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இயக்குனர் டொமினிக் அருண், வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பால் மிரள வைத்திருநதார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் வழங்கிய பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பான் இந்தியா படமாகவே இது பார்க்கப்படுகிறது. விரைவில், இந்தப் படம் 300 கோடி வசூலை எட்டி விடும்.
இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர் என்று சொல்லும்விதத்தில் இருந்தது. அறைக்குள் நடக்கும் பார்ட்டி, அண்டர்க்ரவுண்டில் நடக்கும் சண்டைகள், ப்ளாஷ்பேக் காட்சிகள் என்று சில காட்சிகளின் ஒளிப்பதிவைக் குறிப்பிட்டு நிமிஷ் ரவியை விமர்சகர்கள் கொண்டாடினர். படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. இந்தக் படம் கல்யாணி பிரியதர்ஷனை சூப்பர் ஹீரோயின் என்கிற நிலைக்கு உயர்த்தியுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திளைத்த கல்யாணி, நிமிஷ் ரவிக்கு 9.8 லட்சம் மதிப்புள்ள ஓமேகா ஸ்பீட் மாஸ்டர் வாட்ச்சை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த வாட்ச்சின் பின்னணியில் கல்யாணி சிரித்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸடா பக்கத்தில் பதிவிட்டுள்ள நிமிஷ் ரவி, 'நிலையான கடும் உழைப்பு எப்போதும் நம்மை நல்ல இடத்துக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் என் வாழ்க்கையில் முக்கியமானது. கல்யாணியின் பெருந்தன்மைக்கு நன்றி' என்று கூறியுள்ளார். அவரின் பதிவுக்கு கல்யாணி, "நீங்கள் ஆகச் சிறந்தவர்" என்று பதிலளித்துள்ளார். இந்தப் பதிவில் படத்தின் இயக்குநர் டொவினோ தாமஸ் லவ் எமோஜி பதிவிட்டுள்ளார். முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மானும் நிமிஷ் ரவிக்கு விலையுயர்ந்த வாட்ச்சை பரிசாக வழங்கினார். இதையடுத்து, சில ரசிகர்கள் "விரைவில் நிமிஷ் ரவி, வாட்ச் ஷோரூம் தொடங்கலாம் "என்று காமெடியாக பதிவிட்டுள்ளனர்.
கேரளாவில் மட்டும் 50 ஆயிரம் காட்சிகளை தாண்டி 'லோகா - சாப்டர் 1: சந்திரா' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. Book my showவில் மட்டும் 4.51 லட்சம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். Book my show-வில் அதிக டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் லோகா சாப்டர் 1 சந்திரா படைத்துள்ளது. உலகம் முழுவதும் 1.18 கோடி பேர் இந்தப் படத்தை பார்த்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்த 7வது படம் இதுவாகும். இந்தப் படத்தின் பட்ஜெட்டுக்கு முதலில் துல்கரின் தந்தை மம்முட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், துல்கர் சல்மான் தந்தையை சமாதானப்படுத்தி 30 கோடி வரை செலவு செய்து படத்தை எடுத்து வெளியிட்டார். தற்போது, 10 மடங்கு லாபத்தை இந்த படம் கொடுத்துள்ளது.