கோலாகலமாகத் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 9!
வீடு வழக்கம் போல அழகாகவும், பிரமாண்டமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புதிய மனிதர்களோடு வாழப்போகும் சிக்கல்கள், பிரச்சினைகளை உருவாக்குவதற்கெனவே தரப்படப்போகும் டாஸ்க்குகள் போதாதென வீட்டின் உள்ளலங்கார அமைப்புகளும் போட்டியாளர்களை மனரீதியாகப் பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிகிறது. முதல் நாள் போட்டியாளர்கள் உள்ளிருந்து பார்ப்பதற்கும், வெளியிலிருந்து பார்வையாளர்கள் பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும் இந்த உள்ளலங்கார வேலைகள், உள்ளே தங்கப்போகும் போட்டியாளர்களின் மனோநிலையைக் குழப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஓர் இடத்திலாவது ஒற்றை நிறமோ, வெண்மை போன்ற அமைதியைத் தரும் நிறமோ இல்லை. விதவிதமான வண்ணங்கள், கண்ணைப் பறிக்கும் விளக்குகள், சுவரின் பதிக்கப்பட்டிருக்கும் விதவிதமான உருவங்கள் என எல்லாமே போட்டியாளர்களை எந்நேரமும், அவர்களின் இயல்புக்கு மாறான ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கும் வண்ணம் பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பார்க்கலாம், இந்த சீசனை இந்தப் போட்டியாளர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என!
முதல் நாளே 20 போட்டியாளர்களை களமிறக்கியிருக்கிறார்கள். இம்முறை நிறைய தெரிந்த முகங்கள் இருக்கின்றன. விளையாட்டு, கானா, நடிப்பு, மாடலிங் என பல்வேறு அடையாளங்கள் இவர்களுக்கெல்லாம் இருந்தாலும், டிவி அல்லது சினிமா ஆர்வம் என்ற ஒரே புள்ளியில் அனைவரும் இணைகிறார்கள். முதலில் எல்லோரையும் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு முன்கணிப்பையும் ஏற்படுத்திக்கொள்வோம். இந்த நமது முன்கணிப்புகளை எத்தனைப் போட்டியாளர்கள், தங்கள் விளையாட்டின் மூலமாக தகர்த்தெறிந்து சிறப்பாகவோ, மோசமாகவோ தங்களை வெளிப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இந்த விளையாட்டின் சுவாரசியமே..! இல்லையா?
1. திவாகர்
முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்! யாரும் கேட்காமலேயே அவரே தன்னை டாக்டர் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறார். அவர் BPT (பிசியோதெரபி) படித்தவராகச் சொல்லப்படுகிறது. BPT படித்தவர்கள் டாக்டர் என்ற அடைமொழியைப் பயன்படுத்தக்கூடாது. அதனால்தான் அவரது விடியோ மற்றும் குறிப்புகளில் திவாகர் என்று மட்டுமே விஜய் டிவி குறிக்கிறது. ஆனாலும், விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவருமே டாக்டர் என்று அவரை விளிக்கிறார்கள். முதல் முறையாக இவரது அறிமுகத்தில்தான் விசே,போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பலகட்ட நடவடிக்கைகளையும், அவர்களது மனநிலை மற்றும் பணியாற்றும் துறை சார்ந்த கேள்விகளையும் கேட்டுத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் வெளிப்படுத்துகிறார். இவர் மனநிலை சரியாகத்தான் இருக்கிறார், பிசியோதெரபி குறித்த கேள்விகளுக்கு சரியாகத்தான் பதிலளித்தார் என்றும் வலுவில் சொல்கிறார். இப்படி அழுத்தமாகச் சொல்வதிலிருந்து, லூசுத்தனமாக நடந்துகொள்வதால் மட்டுமே நாங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று நிறுவ முயல்கிறது பிக்பாஸ் தரப்பு.
ஒவ்வொருர் சீசனிலும் முதியவர்கள், பாடகர்கள், டான்ஸர்கள், வெள்ளந்திகள் என இப்படி வகைக்கு ஒன்றிரண்டாக ஆட்களை போடுவது வழக்கம். திவாகரைப் பொறுத்தவரை, ஆன்லைன் வெள்ளந்திகள் லிஸ்ட்டில் உள்ளே சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால், அவர் வெள்ளந்தி மட்டுமேயல்ல, கொஞ்சம் டாக்சிக்கான ஆளும் கூட என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அறிமுக நாளிலேயே தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசுவது, கேனைத்தனமாக நடித்துக் காண்பிப்பது என்று ஆரம்பித்துவிட்டார். பெண்களிடம் ஏதாவது உளறிவைத்து மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் பிகாசமாகத் தெரிகிறது. பார்ப்போம்!
2. அரோரா
இளம் கவர்ச்சிப் பதுமை லிஸ்ட்டில் உள்ளே வந்திருக்கும் அரோரா ஒரு மாடல்! அழகாக இருக்கிறார். அரோரா, ஓர் இன்ஸ்டா நபர். இன்ஸ்டாவில் சில மட்டமான ரசிகர்கள் கேட்கும் - அல்லது விமர்சிக்கும் - தகாத சொற்களுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அரோரா தன் மார்பகங்களைத் தொட்டுப் பதில் சொன்ன காரணத்தால், ஒரு தகாத அடைமொழியால் அடையாளப்படுத்தப்படுகிறார். அரோரா அப்படி அடையாளப் படுத்தப்படக்கூடாது, அவரது நிஜ பெர்சனாலிடியால் அடையாளப் படுத்தப்பட வேண்டும், அதற்கு இந்த நிகழ்ச்சி உதவும் என்கிறார் அவரது தோழி ரியா. நல்ல நட்பு, அக்கறையான கருத்து! இந்த ரியாதான் சென்ற சீசனில் வாய் ஓயாது பேசியே நம்மை சாகடித்தவர் என்று நினைவுகூர்கிறேன். அரோரா, பார்ப்பதற்கு மிக போல்டான ஆளாகத் தெரிகிறார். சரியான போட்டியாளராக இருப்பார் என்று கணிக்கலாம்
3. எஃப்ஜே (Fj)
ராப் பாடகர் வகையைச் சேர்ந்தவர். சுழல் எனும் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஓவர் துறுதுறுப்பாகத் தெரிகிறார். காதல், கத்தரிக்காய் சமாச்சாரங்களில் மாட்டுவார் என கணிக்கலாம்.
4. விஜே பார்வதி
வாய் ஓயாமல் பேசுவதிலும், அதிகப்பிரசங்கித் தனத்திலும் வல்லவர். இவர் பார்வையாளர்களை இரிட்டேட் செய்வதில், வாட்டர்மெலனை விடவும் முக்கியப் பங்காற்றுவார் என்று தோன்றுகிறது. ’சர்வைவர்’ நிகழ்ச்சியில் பார்த்ததை வைத்துச் சொல்வதானால், தன் பேச்சால் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார், அந்தச் சிக்கல்களுக்கு தன்னை ஒழித்துக்கட்ட நினைக்கும் அடுத்தவர்கள்தான் காரணம் என்று முழு முற்றாக நம்புவார், அதையே நிரூபிக்கப் போராடுவார். வம்படியாக அடுத்தவர் பிரச்சினையில் மூக்கை நுழைப்பதில் கைதேர்ந்தவர். இவர் பார்வையாளர்களை மட்டுமின்றி, போட்டியாளர்களை இரிடேட் செய்வதிலும் முதலிடம் வகிப்பார் என்று தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமானவர்.
5. துஷார்
இன்னொரு மாடல்! நடிக்கும் ஆசையில் தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக்கொள்ள வந்திருக்கிறார். தமிழராக இருந்தாலும் இவருக்கு சற்றே சீன முகச்சாயல். ஆச்சரியமாகிக் காரணம் கேட்டால், அதில் ஆச்சரியம் தேவையில்லை என்பதாக இருக்கிறது பதில், அவரது அப்பா வழி பாட்டி ஒரு சிங்கப்பூர்க் காரராம்! பிக்பாஸ் சுழலில் காணாமல் போவார் என்று தோன்றுகிறது.
6. கனி
அடிக்கடி டிவி நிகழ்ச்சிகளில் பார்த்த முகம். குறிப்பாக குக்கு வித் கோமாளியில் பிரபலமானவர். இயக்குநர் அகத்தியனின் மகள். கொஞ்சம் சென்ஸ் உள்ள நபராகத் தெரிகிறார். வீட்டுக்குள்ளே நடக்கும் பிரச்சினைகளில் நியாயத்தைச் சரியாகவும், துணிவாகவும் பேசுவார் என்று கணிக்கலாம். அதிக நாட்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!
7. சபரிநாதன்
டிவி சீரியல் நடிகர். வழியனுப்புகையில் அவரது அம்மா, சின்னதாக அழுதார். அதைப்பார்த்துவிட்டு, ‘அம்மா அழாதீங்கம்மா, எங்க டிவியில அதையே திரும்பத் திரும்பப் போட்டுக்காமிப்பானுக’ என்று விஜய் டிவியில் இருந்துகொண்டு, விஜய் டிவியையே கலாய்த்ததிலிருந்து கொஞ்சம் விஷமத்தனமும், துணிவும், நகைச்சுவை உணர்வும் கொண்டவராகத் தெரிகிறார். இயல்பான ஆளாகத் தெரிகிறது. பொறுப்பெடுத்துக்கொள்ளும் ஆளாக இருக்கிறார். சுவாரசியமான ஆட்டக்காரராக இருக்கக்கூடும்.
8. பிரவீன்காந்தி
இயக்குநர் பிரவீன்காந்தி. சீனியர் லிஸ்ட்டில் உள்ளே வந்திருப்பார் போலிருக்கிறது. இவர் 2000 வாக்கில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் என சில படங்களை இயக்கியவர். ரஜினிகாந்த், விஜய் என எந்த நடிகர் அரசியலுக்கு வரப்போவதாக சொன்னாலும், வந்தாலும் அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்களோ இல்லையோ வாலண்டியராக இவராக முந்திக்கொண்டு போய் அவர்களுக்கு முரட்டு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார். இவரை உள்ளே கொண்டு வந்ததன் மூலமாக, தமிழ்நாட்டின் ஆன்லைன் சமுதாயத்துக்கு கொஞ்ச நாட்களுக்காவது ஒரு விடுதலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது விஜய் டிவி. அதற்காக நாம் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும். இரிட்டேடிங் செய்யும் நபர்களில் யார் பெரியவர் என்பதில் விஜே பார்வதி, இவர், திவாகர் என மும்முனைப் போட்டி நடக்கலாம்.
9. வைஷாலி (கெமி)
அடுத்த குக்கு வித் கோமாளி நபர். துணிச்சலாகப் பேசக்கூடியவர், கலகலப்பான ஆள் என்று பார்த்தாலே தெரிகிறது. தான் ஒரு தேசிய அளவிலான பாஸ்கெட் பால் பிளேயர் என்று குறிப்பிட்டது புதிய செய்தியாக இருந்தது. அதனால், தான் டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடுவேன், என்று சொன்னதுதான் இந்த நிகழ்ச்சியைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
10. ஆதிரை
அடுத்த இளம் கவர்ச்சிப் பதுமை லிஸ்ட் ஆட்டக்காரர். பிகில் படத்தில் புட்பால் பிளேயர்களில் ஒருவராக நடித்திருக்கிறாராம். தொடர்ந்து டிவி நடிகராகியிருக்கிறார். ஹாஸ்டல் லைஃப் அனுபவமிருப்பதால் பிக்பாஸிலும் எளிதாக இருந்துவிடுவேன் என்கிறார். இதுவரை வந்ததில் வீக்கான போட்டியாளராகத் தெரிகிறார்.
11. ரம்யா
விழாக்களில் மேடை நடனம் ஆடும் கலைஞர். எல்லோரிடமும் சோகக்கதைகள் இருக்கும். குறிப்பாக தனித்துவமான சோகக்கதைகள் இருப்போரைத் தேர்ந்தெடுத்து செண்டிமெண்டைப் பிழிவதும் பிக்பாஸின் வழக்கம்தான். அதற்கென ஒரு வாரத்தையே ஒதுக்கி ஒப்பேற்றுவார்கள். இவர் அறிமுகத்திலேயே சோகக்கதையோடு அறிமுகமாகியுள்ளார். காதல் திருமணம் செய்த இவரது பெற்றோர், பின்னர் பிள்ளைகளைப் பற்றி கவலை கொள்ளாது பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. சகோதரிகளோடு அனாதை ஆசிரமங்களில் வளர்ந்திருக்கிறார். மன உறுதி மிக்க ஆளாகத் தெரிகிறார். அதிக நாட்கள் உள்ளே இருக்க வாய்ப்புகள் அதிகம்!
12. வினோத்
கானாப் பாடகர் கோட்டாவில் உள்ளே வந்திருப்பவர்! கருத்தாகப் பாடுகிறார். ஆனால், பேச்சில் நிறையத் தயக்கம் தெரிகிறது. நெகிழ்ச்சியான ஆளாக இருக்கிறார். உள்ளே தாங்குவது சிரமம்தான்!
13. வியானா
ஒவ்வொரு சீசனிலும் சின்ன வயது அல்லது குழந்தைத் தனமான ’ஜெனிலியா’ டைப்பில் ஒரு ஆளைப் பிடித்துப் போடுவார்கள். இவர் அந்த லிஸ்டில் வருவார் போலிருக்கிறது. குழந்தைத்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கை! அது நிசமானதா அல்லது போலித்தனமானதா என்று சில நாட்களில் தெரிந்துவிடும்.
14. பிரவீன்
இன்னொரு டிவி நடிகர். சினிமாக்கனவுகள் நிறைய இருக்கிறது. முயற்சியும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. சற்று முரட்டுத்தனமாகத் தெரிகிறார். குறிப்பிடத்தகுந்த நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடும்!
15. சுபிக்ஷா
தூத்துக்குடியிலிருந்து ஒரு மீனவப்பெண். கடலுக்குள்ளிருந்து விளாக் செய்யும் பெண் போலிருக்கிறது. மீனவர்களின் அடையாளமாக இருக்க வேண்டும், இந்தப் போட்டியில் ஜெயிப்பதை விட கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார். நல்ல நோக்கம்தான், ஆனால், இங்கே இவர் ரொம்ப நாள் தாக்குப்பிடிப்பது சிரமம்.
16. அப்சரா
நமீதா மாரிமுத்து, ஷிவின் போன்ற போட்டியாளர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் அப்சரா ஒரு திருநங்கை! நம் சமூகத்தில் திருநங்கையர் மிகப்பெரும் சவால்களைச் சந்தித்து வளர்வதால், இயல்பிலேயே மன உறுதியும், முதிர்ச்சியும் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அப்சராவும் அப்படியான உறுதியான, தெளிவான, போல்டான ஆளாக இருக்கிறார். சிறந்த போட்டியாளாராக இருப்பார் என்று கருதலாம்.
17. நந்தினி
ஃபிட்னெஸ் மற்றும் யோகா ஆர்வலர். இன்னொரு முதிர்ந்த மன உறுதி மிக்க போட்டியாளாராகத் தெரிகிறார்.
18. 'விக்கல்ஸ்' விக்ரம்
இன்னொரு சோஷியல் மீடியா பிரபலம்! நிச்சயமாக இந்த சீசனின் நகைச்சுவைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று தோன்றுகிறது. அவரைப் பற்றிய அறிமுக வீடியோவே கலகலப்பாக இருந்தது. அவரது குழுவேதான் ஐடியா கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் மற்றதெல்லாம் நார்மலான ஆடியோ விஷுவலாகவே இருந்தது. இருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதிச் செய்வதற்கும், ஸ்பாண்டேனிடிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. விக்ரம் என்ன செய்ய இருக்கிறார், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
19. கமருதீன்
மற்றுமொரு டிவி சீரியல் நடிகர். கொஞ்சம் வம்பு, கொஞ்சம் தெம்பு, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ் என இருப்பார் போலத் தெரிகிறது. நாட்கள் போனால்தான் கணிக்க முடியும் டைப் ஆளாக இருக்கிறார்.
20. கலையரசன்
அருள்வாக்கு சொல்லும் அகோரி கலை என்றால் மீடியாவாசிகளுக்குத் தெரியும்! கொஞ்ச நாட்களாக செய்திகளிலும் ட்ரோல்களிலும் அடிபட்டவர். இப்படிப்பட்ட ஒருவரையும் உள்ளே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒழுங்காக முடிவெட்டி, நல்ல ஆடைகளைக் கொடுத்து ஆளைப் பார்க்கும் படி மாற்றியிருக்கிறார்கள். முன்னதாக தனது டுபாக்கூர் வேலைகளைப் பார்த்துப் பிரிந்து சென்ற மனைவி, குழந்தைகளும் கூட இந்த சாமியார் வேலையையெல்லாம் விட்டுவிட்டு நார்மலான பின்னர்தான் சேர்த்துக்கொண்டார்கள், இப்போது சரியாக இருக்கிறேன் என்கிறார். ஆனால், அகோரி கலை என்ற பெயர் மாறி பிக்பாஸ் கலை என்று தன் பெயர் மாறவேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்கு அந்த மகாக்காளிதான் உதவ வேண்டும் என்கிறார். பார்ப்போம், இவரை பிக்பாஸ் என்ன செய்யவிருக்கிறது என!
இவர்கள் 20 பேர் போக, இன்னும் ஒரு சிலரை எப்படியும் அடுத்த 2 வாரத்துக்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அனுப்பிவைப்பார்கள் என நம்பலாம்.
முதல் நாளே, ’கக்கூஸில் தண்ணி வருமா, வராதா’ எனும் ஒரு நாஸ்டியான டாஸ்க்கோடு ஆரம்பித்து வைத்திருக்கிறார் பிக்பாஸ்! அரைகுறையான டாஸ்க் தகவல், அதில் போட்டியாளர்களின் பாதி புரிதல், சொன்னதைச் செய்யாமை, சொல்லாததைச் செய்தல் என கசகசவென ஆரம்பித்திருக்கிறார்கள்.
தண்ணீர் பிடிக்கும் இடத்திலேயே கைகளால் விட்டு உழப்பிய வாளித் தண்ணீரை தூர ஊற்றிவிட்டு, நல்ல தண்ணீர் பிடித்துவைத்துக் கொள்வோம் என்ற கனியை, ‘எதற்காக இதை வீணாக்கச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் பார்வதி. அவரை விநோதமாக, ‘அட பக்கியே, நீ உட்பட எல்லோரும் கையை வைத்து உழப்பிய தண்ணீரை எல்லோரும் குடிக்க வேண்டுமா’ என்ற அர்த்தத்தில் பார்த்தார்.
திவாகர், பிரவீன்காந்தியைப் பிடித்து வைத்துக்கொண்டு, ‘இங்கு வந்த எல்லோரும் பல வருடங்கள் நடித்து மிகப்பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். நான் ஒரே வருடத்தில் என் நடிப்புத் திறமையால் எல்லோரையும் தாண்டி இங்கு வந்துவிட்டேன். இது எப்படின்னு கேட்டீங்கன்னா..’ என்று பிளேடு போடத் தொடங்கியதும், இரண்டு வாக்கியங்களுக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் பிரவீன்காந்தி, ‘சரி சரி, ஆள விடுய்யா’ என்பதாகத் தெறித்து ஓடினார். தானும் அதே வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பது அவருக்கு எப்போது புரியப்போகிறதோ தெரியவில்லை. திவாகர் அதை அவருக்குப் புரியவைப்பார் என நம்பலாம்.