

பேங்காக் நகரில் இருக்கும் ஒரு பெரிய உணவக நிறுவனத்தில் செஃப் ஆகவும், கூடுதல் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறான் தமிழ்நாட்டு இளைஞன் முருகன் என்பவன். கூடவே ஒரு பெரிய இடத்துப் பெண்ணைக் காதலும் செய்கிறான். எதிர்பாராத விதமாக, தந்தை இறந்ததால் அவன் தன் கிராமத்துக்கு திரும்ப நேர்கிறது. அங்கு அவன் சந்திக்கும் போராட்டங்கள் என்னென்ன? மீண்டும் அவன் பேங்காக் திரும்பினானா என்பதையெல்லாம் விவரிக்கிறது இட்லிக்கடை!
வலுவான கதையோ, அல்லது நூலிழையான கதையோ எதுவாக இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம், மற்றும் திரைக்கதைக் கட்டுமானம்தான் ஒரு ரசிகனைக் கட்டிப்போடுகிறது. இங்கே இந்தக் கதையின் அடிப்படை நோக்கத்திலேயே ஒரு தவறு இருப்பதால், நம்மால் படத்தோடு ஒன்ற முடியாமல் போகிறது.
முருகனின் அப்பா சிவநேசன், கிராமத்தில் உள்ளூரில் புகழ்பெற்ற ஓர் இட்லிக்கடையை வைத்திருந்தவர். முழு ஈடுபாட்டோடு இட்லி அவித்து விற்றவர், அதனாலேயே ஊர்க்காரர்களின் மதிப்புக்கும், அன்புக்கும் ஆளானவர். அவரின் மேல் கொண்ட பாசம், அந்தத் தொழிலில் இருக்கும் ஈடுபாடு ஆகிய காரணங்களால்தான் முருகனும் படித்து தொழில்முறை செஃப் ஆகவே உருவெடுக்கிறான். அப்படி இருக்கும் ஒரு மனிதன், கையால் ஆட்டிய மாவு, விறகடுப்பில் சமைத்த இட்லி என ‘பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்’க்குத் திரும்பச் சொல்லுவதைப் போல பிற்போக்குத்தனத்தை நோக்கிப் பயணிப்பதுதான் படத்தை பின்னோக்கி இழுக்கிறது.
கிரைண்டரும், மிக்சியும், ஃப்ரிட்ஜும் பெண்களை அடுக்களையிலிருக்கும் நேரத்தைக் குறைத்து, படிப்பையும் தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் நோக்கிப் பயணப்பட வைத்த மிக முக்கியமான சமூகப்புரட்சியை விளைவித்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள். இப்போது வந்து கையில் அரைத்தால்தான் மாவு பதமாக இருக்கும், விறகடுப்பில் சமைத்தால்தான் சுவையாக இருக்கும் என பூமர்த்தனமாக நூற்றாண்டுக்கு பின்னோக்கி நம்மை இழுப்பது நியாயமே இல்லை. மேலும் அதில்தான் சுவை கிடைக்கிறது என்பதெல்லாம் புளுகுமூட்டையே அன்றி வேறில்லை!
சமையற்கலையைப் படித்துவிட்டு, உலகளாவிய அளவில் புகழ்பெற்ற ஹோட்டலில் பணிபுரியும் செஃப்புக்கு ஓர் இட்லி, சாம்பாரின் சுவையைக் கொண்டு வர இயலவில்லை என்பதெல்லாம் டூ மச்தான்! மற்றபடி, இதிலேயே ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதற்காக இடைவேளைக்குப் பிறகு, அருண்விஜயை அநியாயத்துக்கு போங்கு வில்லனாக்கி, அஹிம்சை தத்துவமெல்லாம் பேசிவிட்டு ஒரு முக்கால் மணி நேரத்தை இழுத்தடித்துவிட்டு மீண்டும் கிளைமாக்ஸில் இட்லிக் கடைக்கு வருகிறார்கள். மொத்தத்தில் படம் சுமாராக இருக்கிறது.
நித்யாமேனன் மட்டும், சமீபத்தில் தலைவன் தலைவி எனும் படத்தில்,அநியாய மேக்கப்பில் ஒரு தலைவலியான கேரக்டரில் வந்தது போலில்லாமல் நல்லதொரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் வருகிறார். குறையின்றி, அவரது நடிப்பும் கனமாக இருக்கிறது. தனுஷ் கேட்கவே வேண்டாம், எல்லா விதமான கதாபாத்திரத்துக்கும் பொருந்திப்போகும் முக அமைப்பு, உடல்வாகு! சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அருண்விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், ஷாலினி பாண்டே அனைவரும் அவரவர் பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார்கள். இயக்குநராகச் சரியாகப் பயணிக்கும் தனுஷ், கதாசிரியர் தனுஷிடம், இன்னும் பொருத்தமான, சுவாரசியமான கதைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்!