தமிழ்த் திரையுலகில் கமல்- ரஜினி நட்பு ஒரு வியப்பான விசயம்தான். ஒரே துறையின் உச்சத்திலிருக்கும் இருவருக்குடையே ஓர் உன்னதமான நட்பு நிலவுகிறது என்பதை நம்புவதற்கு நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஆனாலும், இவர்களுக்கு இடையே இருப்பது உன்னதமான நட்புதான் என்று நாம் நம்பும் அளவுக்கு இந்த இரண்டு பேரும் இத்தனை ஆண்டுகளாக வெளியே நடந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான வியப்புக்குரிய விசயம்.
மனிதனின் ஆதார குணங்களில் ஒன்று, பொறாமை! இவர்களுக்கிடையேயும் அது இல்லாமலிருந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், அவர்களே ஒப்புக்கொண்டபடி போட்டி இருந்தது, அதனால்தான் இருவரும் சிறப்பாக இயங்க முடிந்தது என்பது மிக நிதர்சனமானஉண்மை. ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர் இந்த உயரத்துக்கு சென்றிருப்பார்களா என்பது கேள்விக்குறியே!
கமல்ஹாசனை எடுத்துக்கொண்டால், ‘நாங்கள் பேசி வைத்துக்கொண்டுதான் பிரிந்தோம், அதனால்தான் அவரால் இந்த உயரத்தைத் தொட முடிந்தது’ என்று பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். அதன் உள்ளர்த்தம், ‘நான் மட்டும் அப்படிச் செய்யாவிட்டால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே’ என்பதாக இருக்கலாம். சுய எள்ளல் செய்துகொள்வது இவரிடம் சற்றுக்குறைவு என்பதால், ரஜினியை சட்டென உயர்த்திப் பிடிப்பதில்லை . என்றாலும் முதலிடம், இரண்டாமிடம், சூப்பர்ஸ்டார், உலகநாயகன் எல்லாம் ரசிகர்கள் நீங்கள் விளையாட ஏற்படுத்திக்கொண்டதுதான், நாங்கள் கலைஞர்கள், அவ்வளவுதான் என்று பொதுவாக முடித்துக்கொள்வதோடு, அவரை வெளிப்படையாக பாராட்டுவதில் தயக்கம் காட்டியதுமில்லை, அவர் முதலிடத்தில்தான் இருக்கிறார் என்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டுதான் இருக்கிறார்.
இது மாதிரியான நம் கணிப்புகளையெல்லாம் தாண்டி, அவர்களுக்கிடையே நிஜமான நட்பு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. முள்ளும் மலரும் படம் முடிக்கப்படவும், வெளியாகவும் கமல்ஹாசன் பணம் உள்ளிட்ட பல உதவிகளைத் தீவிரமாக செய்திருக்கிறார் என்று அறிய வருகிறோம். படையப்பா உள்ளிட்ட இன்னும் பல படங்களுக்கு அக்கறையான ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார் கமல். போலவே ரஜினியும், ‘கொஞ்சம் சிவப்பானா சும்மா கமலஹாசன் மாதிரி இருப்பேன்’ என்று சினிமாக்களில் தொடர்ச்சியாக வசனங்கள் பேசுகிறார். அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் போன்ற படப்பிடிப்புக்கே சென்று கலந்துகொண்டு உற்சாகப்படுத்துவது, தளபதி போன்ற படங்களுக்கு வாலண்டியராக அவரிடம் ஆலோசனை கேட்பது என எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்கிறார். சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார்,லோகேஷ் கனகராஜ் போன்ற இணக்கமான இயக்குநர்களை எந்தத் தயக்கமின்றி பரிமாறிக்கொள்கிறார்கள். இன்னும், ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும், ஓடிப்போய் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்,பொது நிகழ்வுகளில் தவறாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இதெல்லாமும் அவர்களுக்கிடையே ஓர் உன்னதமான நட்பு இருக்கக்கூடுமோ என்பதற்கான சான்றுகள். ஒருவேளை உண்மை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு இடத்திலும் இருக்கலாம், போகட்டும்!
இருவரும் சேர்ந்து எப்போது நடிக்கப்போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்விக்குதான் இப்போது கிடைத்திருக்கிறது பதில்!
துபாய் விழாவில் கமல், 'நாங்கள் இணையப்போகிறோம்' என்று ஒத்துக்கொண்டதை அடுத்து, இப்போது ஏர்போர்ட் விடியோ பேட்டியில் ரஜினியும் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார். இதிலிருந்து,அந்தப் படம் RRR போலவோ, விக்ரம் வேதா போலவோ இரண்டு கேரக்டர்களுக்கும் சரி பாதி பங்களிப்பு இருக்கும்படியான கதையாக இருக்கும் என சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது. ரஜினி தெளிவாகவே சொல்லியிருக்கிறார், ‘ராஜ்கமலுக்குப் படம் பண்ணுகிறேன், கதையோ, இயக்குநரோ இன்னும் முடிவாகவில்லை’. அது கமல் தயாரிக்க ரஜினி மட்டும் நடிப்பதாகவோ, அல்லது கமல் கேமியோவில் தோன்றுவதாகவோ இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதைத் தாண்டி, இருவரும் சமவாய்ப்பு கதாபாத்திரங்களிலோ, எதிரெதிராகத் தோன்றி மோதிக்கொண்டாலோ அது தமிழின் முதல் ஆயிரம்கோடி படமாக இருக்கும் என்று வேண்டுமானால் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், அந்தச் செய்தி வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.