

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் முடிந்ததும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அதாவது, இந்திய வீரர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக , போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்து விட்டனர். டாஸ் போடும் போதும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலிலி ஆகாவுடன் கை குலுக்கவில்லை . இதனால், போட்டி நடுவராக பணியாற்றிய ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆன்டி பைகிரப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாய்ந்தது.
'ஆன்டி பைகிராப்ட் ஐ.சி.சி விதிமுறைகளை மைதானத்தில் அமல்படுத்தத் தவறி விட்டார். எனவே, அவரை ஆசியத் தொடரில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் யு.ஏ.ஈ அணியுடனான அடுத்த ஆட்டத்தில் நாங்கள் ஆட மாட்டோம் 'என்று பி.சி.பி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் ஐ.சி.சி.க்கும் கடிதம் எழுதியதாக சொல்லப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் கோரிக்கையை இரு அமைப்புகளுமே ஏற்க மறுத்து விட்டன. இதனால், பாகிஸ்தான், யு.ஏ.ஈ அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் ஆன்டி பைகிராப்ட்தான் போட்டி நடுவராக பணியாற்றினார். அவரின் முன்னிலையில்தான் இரு அணியின் கேப்டன்களும் டாஸ் போட்டனர்.
பாகிஸ்தான், தொடரை விட்டு வெளியே போவதாக மிரட்டியதையடுத்து, ஐ.சி .சி தரப்பில் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லப்பட்டாம். நீங்கள் தொடரை விட்டு வெளியேறினால் 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 140 கோடி) அபராதம் கட்ட வேண்டும் என்று பி.சி.பிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். இதையடுத்து, சத்தமில்லாமல் பாகிஸ்தான் அணி நேற்று யு.ஏ.ஈ அணியுடன் களமிறங்கி விளையாடியுள்ளது. போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி விட்டது.
இந்த நிலையில், ஆன்டி பைகிராப்டை நீக்கக் கோரி பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை ஐ.சி.சி ஏற்க மறுத்த விவகாரம் தொடர்பாக இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர், 'பாகிஸ்தானை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் சரி... ஐ.சி.சியும் சரி ஒரு போதும் சீரியசாக எடுத்துக் கொள்வதித்லை ' என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ஆன்டி பைகிராப்டின் புகைப்படத்தை பதிவிட்டு,' ஆட்டவும் முடியாது அசைக்க முடியாது. அவ்வளவு ஏன் அவரின் தலை முடியைக் கூட தொட முடியாது' என்று காமெடியாக பதிவிட்டுள்ளார்.
'மற்றொருமுறை பாகிஸ்தான் சரண் அடைந்து விட்டது. ஆன்டி பைகிராப்ட்டை நீக்க பாகிஸ்தான் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோற்று விட்டன. ஒரு முறை ஜோக்கர் எப்போதும் ஜோக்கர்தான்' என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.சி.சி தலைவர் ஜெய்ஷாவின் உறுதியான தலைமையை இது காட்டுகிறது என்று மற்றொரு நெட்டிசன் பாராட்டியுள்ளார்.
மைதானத்தில் சிங்கம் போல நடந்து வராரு ஆன்டி பைகிராப்ட் என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
நடுவரின் தலையை பதம் பார்த்த த்ரோ
இதற்கிடையே, நேற்றைய போட்டியின் போது, மைதானத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் வீசிய ஒரு த்ரோ, எதிர்பாராத விதமாக கள நடுவரான ருசிரா பள்ளியகுருகேவின் தலையை பலமாகத் தாக்கியது. நடுவர் வலியால் துடித்தார். காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் நடுவராகப் பணியாற்ற முடியாத நிலையில் வெளியேறினார். நெட்டிசன்கள் இந்தச் சம்பவம் குறித்தும் விவாதங்களை கிளப்பியுள்ளனர். ஒரு தரப்பினர் இதை ஒரு வேடிக்கையான சம்பவமாக மாற்றி, மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர். இந்தியாவுடனான போட்டியில் சர்ச்சையில் சிக்கிய போட்டி நடுவர் ஆண்டி பைக்ராப்ட்டை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டனர்.