கமல்ஹாசன் - ஒரு நடிகர் மட்டுமேயல்ல, ஒரு கலைஞர். கமல்ஹாசன் கலை மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டவர். அவர் தனது கலை ஆர்வம் மற்றும் தனிப்பட்ட தாகத்தால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி
வந்திருப்பவர். அதே நேரத்தில், வணிகரீதியாகவும் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டவர்.
இப்படியான ஓர் ஆர்டிஸ்ட், அவர் சார்ந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு என்ன செய்கிறார்? அவரால் திரைத்துறைக்கு என்ன லாபம்? அவருக்கு என்னவெல்லாம்
சிக்கல்கள் இருக்கலாம்? அதை மீறி, அவர் சிறப்பாக எப்படியெல்லாம் செயல்பட
வேண்டும்? அவர் ஏன் நமக்கு முக்கியம்? சற்றே யோசித்துப் பார்க்கலாம்.
பங்களிப்பு:
90க்குப் பிறகான கமல்ஹாசனின் புதிய முயற்சிகளைப் பரவலாகப் பேசுகிறார்கள். ஆனால், அவர் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே, புதிய முயற்சிகளை நோக்கிச்செல்பவராகவே இருந்திருக்கிறார். வளர்ந்துவரும் நடிகராக யாரும் செய்யத்தயங்கும் கதாபாத்திரங்களான முத்து (உணர்ச்சிகள்), சப்பாணி (16 வயதினிலே), தம்பான் (வயநாடன் தம்பான் - மலையாளம்) திலீப் (சிகப்பு ரோஜாக்கள்) போன்ற பலவற்றை முயற்சித்திருக்கிறார்.
'அன்பே சிவம்', 'குணா', ‘மகாநதி’, ‘ஹேராம்’ போன்ற படங்கள் புதிய கதைக்களங்களை, ஆழ்ந்த கதை சொல்லும் முறையை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தின. எப்போதுமே சினிமாவை கலை முயற்சியாகப் பார்த்தார். அதற்காக தனி மனிதனாக ஒரு படைப்பாளியாக மட்டுமே அதில் ஒதுங்கிவிடாமல், ரசிகர்களையும் அதை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இருந்திருக்கிறார்.
சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களை சினிமாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். பாலுமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளர்களையும், மணிரத்னம்
போன்ற இயக்குநர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வந்திருக்கிறார்.பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் புதிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்.
தொழில்நுட்பங்களை தமிழுக்கு அள்ளிவந்ததில் கமல்ஹாசனோடு யாரும் இணையாகமுடியாது. ’விக்ரம்- 1986' படத்தில் இந்தியாவின் முதல் ப்ளூமேட் காட்சி பயன்படுத்தப்பட்டிருந்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில், கமல்
உருவாக்கியிருந்த அப்பு கதாபாத்திரத்துக்கு முன்னோடியே இல்லை. 1996ல் இந்தியாவில் முதல்முறையாக இந்தியன் படத்தில் பிராஸ்தடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. 1997ல் ஹாலிவுட் படமான டைட்டானிக்கில் அகேலா ஷாட்ஸ் பயன்படுத்தப்பட்ட அதே ஆண்டு தொடங்கப்பட்ட மருதநாயகம் படத்திலும் அகேலா ஷாட்ஸ் வைக்கப்பட்டிருந்தன. 1999ல் ஸ்டார்வார்ஸில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்சர் நுட்பம் அதே ஆண்டு தொடங்கப்பட்ட ’ஆளவந்தான்' படத்தில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது, உலகத் தரத்தில் தமிழிலும் சினிமா எடுக்க முடியும் என்பதை 'ஹேராம்','மருதநாயகம்', ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் அவர் நிரூபிக்க முயன்றார். நடிப்பின் புதிய பரிணாமங்களை மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களில் வெளிப்படுத்தி தமிழ் சினிமாவை இந்திய அரங்கில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் வைத்துக்கொண்டே இருந்தார். அதே நேரம், தொடர்ந்து வணிக ரீதியிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
சவால்கள்:
புதிய களங்கள், புதிய கதைகள் என்ற தொடர் முயற்சியில், வணிக ரீதியான தோல்வி தவிர்க்க இயலாதது. அதை ஈடுசெய்ய தமது கலையார்வத்துக்கும், வியாபார எதிர்பார்ப்புக்குமிடையே சமநிலையை அவர் காக்க வேண்டியிருந்தது.
ஒரு கலைஞராக அவர் எடுக்கும் முயற்சிகள், சில சமயங்களில் அவரின் அனைத்து வகையான ரசிகர்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவில் அவரைப் பார்க்க விரும்புவதால், அவரது பரிசோதனை முயற்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
ஒரு படைப்பாளி என்ற முறையில், அவர் தனது படைப்பு சுதந்திரத்தைக் காக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. ’விருமாண்டி’, 'விஸ்வரூபம்'
திரைப்படங்களின் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடலாம்.
கமல்ஹாசன் போன்ற ஒரு திரைக்கலைஞர், தமிழ் சினிமாவுக்கு வணிக ரீதியான வெற்றியை மட்டும் வழங்கவில்லை. மாறாக, அதன் கலை, தொழில்நுட்பம் மற்றும் கதை சொல்லும் முறையை வளப்படுத்தினார். தமிழ் சினிமாவை பொழுதுபோக்குத் தளத்திலிருந்து, கலை மற்றும் தொழில்நுட்பத்தின் அங்கமாக மாற்றியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. இன்று ஒரு அரசியல்வாதியாக மக்கள் பணியாற்ற அவர் விரும்பினாலும், இணையாக சினிமாவிலும் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
அவரது பயணம் இன்னும் பல்லாண்டுகள் சிறப்புறத் தொடர நம் வாழ்த்துகள்!