ரஜினி, கமலையும் விட்டுவைக்காத வன்முறை - தமிழ் சினிமா டிரெண்ட்

சமீப காலமாக, தமிழ் கமர்ஷியல் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
கூலி - விக்ரம்
கூலி - விக்ரம்
Published on

ஒரு காலத்தில் குடும்பக் கதைகள், காதல் திரைப்படங்கள், சமூகக் கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகைக் கதைகளைத் தந்துகொண்டிருந்த தமிழ் சினிமா, தற்போது இரத்தம் தெறிக்கும், கொடூரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப் படுகிறது. இந்த மாற்றம், ஒரு குறிப்பிட்ட வகை ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சினிமாவின் படைப்புத்திறன் மற்றும் பார்வையாளர்கள் மீது அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தான கவலையை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

ஓ.டி.டி (OTT) தளங்கள்
ஓ.டி.டி (OTT) தளங்கள் AI GENRATED

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய சூழலும், ஓ.டி.டி (OTT)  தளங்களின் எழுச்சியும் இந்த மாற்றத்திற்குக் காரணங்களாக இருக்கலாம். உலகளாவிய சினிமாக்களின் அறிமுகம் இந்தக் காலகட்டத்தில்தான் நமக்கு அதிகமாயிற்று. வன்முறை அழகியல் என்றெல்லாம் புதிய வார்த்தைகள் நமக்கு அறிமுகமாகின. பல்வேறு மொழிகளின் வன்முறைக் கதைகளைக் கண்ட பார்வையாளர்கள், அது தரும் போதைக்கு சற்றே தங்களை ஒப்புக் கொடுத்துவிட்டார்களோ என்று எண்ண வேண்டியதிருக்கிறது. ஆனால், நிஜத்தில் பார்வையாளர்களை விடவும் அதிகமாக நம் படைப்பாளிகள்தான் அந்த மாயையில் சிக்கிவிட்டார்கள் என்றும் கொள்ளலாம். அத்தகைய வெளிநாட்டு சினிமாக்களைப் போலவே வன்முறைப் படங்களை இங்கும் உருவாக்கிட ஆர்வம் காட்டும் நம் இயக்குநர்கள், அதன் ஆதாரத் தேவையான காரண காரியங்களை உருவாக்குவதில் தோல்வியடைகிறார்களோ என்று தோன்றுகிறது. அதனால், நேரடியான உணர்ச்சியற்ற வன்முறைக் கதைகள்தான் நமக்குக் கிடைக்கின்றன.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் Instagram

லோகேஷ் கனகராஜ் படம் வந்தா… திரை முழுக்க ஆக்‌ஷன் தான்

லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், அவை முழுக்கவும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கின்றன. அவரது இரண்டாவது படமான ‘கைதி’ 2019ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. ஆனால், அந்தப் படம் வன்முறைக் காட்சிகளால் மட்டுமே வெற்றிபெறவில்லை. பாடல்கள் இல்லாத தன்மை, கிளைக்கதைகள் இல்லாத ஒரே இழையைக் கொண்ட தீவிரவகைமை (True Genre) கதையமைப்பு, வித்தியாசமான களம் என ‘கைதி’ நமக்கு ஒரு புது அனுபவத்தைத் தந்ததை மறுக்க முடியாது. தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என வன்முறைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். அதுவே தொடர்கையில் நமக்கு ஏதோ ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ’விக்ரம்’ படத்தில் போதைப் பொருளுக்கு எதிரான ஹீரோ கதாபாத்திரத்தின் எழுச்சியை, இன்னொருவர் எழுதியிருந்தால் இப்படி இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால், எக்கச்சக்கமான கொலைகள், இறுதியில் பெரும் துப்பாக்கியால் கமல் மனிதர்களைத் துளைத்துச் சல்லடையாக்கும் காட்சி இருந்திருக்க வாய்ப்புக் குறைவுதான். பார்வையாளர்களுக்குள் இருக்கும் வன்முறையை தூண்டிவிட்டதில் அந்தப் படம் பெரும் வெற்றியடைந்தது. கைதி தொடங்கி வைத்த டிரெண்டை அந்தப் படம் பின்பற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

அப்படியானால், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ இன்னும் பன்மடங்கு வெற்றியடைந்திருக்க வேண்டுமல்லவா? இங்குதான் ஆடியன்ஸ் ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். கூலி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. திரைக்கதையின் போதாமை, ஏராளமான தர்க்கப் பிழைகள், ஆதாரமான கதையிலிருந்த சிக்கல் என அந்தப் படத்தின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், ’போதும்ப்பா அடிதடி, ரத்தம், கொலைகள்’ என ஆடியன்ஸ் சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள், குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக வந்து காண்கின்ற ரஜினிகாந்தின் படங்களில் பொதுவாக வன்முறை குறைவாகவே இருக்கும். சண்டைக் காட்சிகள் இருந்தாலும், அவை ஜாக்கிசான் படங்களைப் போன்ற சைல்ட் ஃபிரண்ட்லி உணர்வைத் தருமே தவிர, ஜெயிலர் போல தலையை வெட்டி வீழ்த்தும் காட்சிகள் இருந்ததில்லை. அவருமே இந்த டிரெண்டிங்கிற்குத் தப்பவில்லை.

இன்னுமே பீஸ்ட், தர்பார், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்,  கங்குவா, ரெட்ரோ, வீரதீரசூரன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இதில் மகாராஜாவை நாம் சேர்த்துவிட முடியாது. அது வன்முறைப் படமானாலும், ‘கைதி’யைப் போல அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு 'எக்சைட்மெண்டை' நம்மிடம் உருவாக்கியது. காரணம், நாம் இதுவரைக் கண்டிராத திரைக்கதை!

வன்முறைப் படங்களாகவே இருந்தாலும் அவை கைதி, மகாராஜா போன்ற புதிய அனுபவங்களைத் தர வேண்டுமே தவிர உள்ளீடற்ற, புதுமையற்ற படங்கள் தக்லைஃப், கூலி போல ஏமாற்றத்தையே தரும். கேட்டால், இயக்குநர்கள் பார்வையாளர்களின் தீவிரமான ஆக்‌ஷன் மீதான விருப்பத்தை பூர்த்தி செய்கிறார்கள் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், ஆடியன்சுக்குத் தேவையானது எல்லாம் புதிய அனுபவங்கள்தானே தவிர, வன்முறை மட்டுமே அல்ல. கைதி, மகாராஜா, லப்பர் பந்து, மெய்யழகன் போன்ற படங்கள் அதைத்தான் செய்தன.

Puthuyugam
www.puthuyugam.com