தேசிய வங்கிகளிடம் இருந்து பல ஆயிரம் கோடியை கடனாக பெற்றிருந்த கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா , பிரிட்டனுக்குத் தப்பி ஓடி விட்டார். தற்போது, அங்கேயே வாழ்ந்து வருகிறார். அதே போல, வைர நிறுவன அதிபரான நீரவ் மோடியும் 13,000 கோடிக்கு மேல் தேசிய வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று விட்டு, பிரிட்டனுக்குத் தப்பி விட்டார். தப்பி ஓடியவர்கள் லண்டனில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இவர்களைப் போலவே, ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் பண மோசடி வழக்கு காரணமாக இந்தியாவில் இருந்து தப்பியவர். இவரும், லண்டனில்தான் வசிக்கிறார். இந்த நிலையில், லண்டனில் லலித் மோடி ஒரு ஆடம்பரமான விருந்துடன் தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் மல்லையா கலந்து கொண்டார். இது தொடர்பான, பார்ட்டி வீடியோக்களை லலித் மோடி தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். லலித் மோடி பிறந்தநாளைக் கொண்டாடிய ஹோட்டல் மிகவும் ஆடம்பரமானது. இந்த ஹோட்டலில் ஒரு மேஜைக்கான குறைந்தபட்ச செலவு ரூ. 1.18 லட்சம் ஆகும். இந்தக் கொண்டாட்டத்தில், லலித் மோடியுடன் விஜய் மல்லையா இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையே, விஜய் மல்லையா யூடியூபர் ராஜ் ஷமானிக்கு அளித்த பேட்டியில், ''இந்திய வங்கிகளிடம் இருந்து நான் வாங்கிய அனைத்து லோன்களையும் அடைத்து விட்டேன். நான் வாங்கியது 6,200 கோடிதான். ஆனால், வங்கிகள் என்னிடத்தில் இருந்து 14,000 கோடியை வசூலித்து விட்டன . நான் திருப்பிச் செலுத்த வேண்டியதைவிட பல மடங்கு கூடுதலாக செலுத்தி விட்டேன் ' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
விஜய் மல்லையாவின் இந்த பேட்டியை பலரும் இணையத்தில் பரப்பி வந்தனர்.
இதையடுத்து, விஜய் மல்லையா கடனை அடைத்துவிட்டதாகக்ச் கூறியிருப்பது குறித்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தில் நேற்று விவாதம் எழுந்தது. நாடாளுமன்றத்தில் முராரி லால் மீனா எம்.பி பேசுகையில், 'கடந்த அக்டோபர் மாதம் வரை, இந்திய பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் 15 பேரை, பொருளாதாரக் குற்றவாளிகள் என்று தெரிவித்துள்ளது. அவர்களில் 9 பேர் அதிகளவில் வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்திருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சம் விளக்கமளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த துணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது, ''இந்திய வங்கிகளிடம் ரூ.58,082 கோடியை பல தொழிலதிபர்கள் மோசடி செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.10,462.79 வசூலிக்கப்பட்டுள்ளது. பல தொழிலதிபர்களுக்கு ரூ. 3,542 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா ரூ.10,462.79 கோடி கடனாகப் பெற்றார். அவரின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கடன் வாங்கினார். வாராக்கடன்கள் மீதான வட்டி மொத்தம் ரூ.16,632.62 கோடி. மத்திய அரசின் கணக்கின்படி, செலுத்த வேண்டிய வட்டி உட்பட, மல்லையா ரூ.15,094.93 கோடியைத் திருப்பிச் செலுத்தியுள்ளார், இன்னும் பல வங்கிகளுக்கு ரூ.12,000 கோடி பாக்கி வைத்துள்ளார்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் மல்லையா வங்கியில் வாங்கிய கடனை நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிய குவித்ததாகவும் வெளிநாடுகளுக்கு பணத்தை மடைமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.