

அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் சீனர்களை பணிக்கு அமர்த்த வேண்டுமென்றால் நிறுவனங்கள் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர்களை (88 லட்சம்) கட்டணமாக செலுத்த வேண்டுமென்று டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைப் பிடித்து தாய்நாட்டுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். தற்போது, இந்தியர்கள் அதிகம் வைத்திருக்கும் H-1B விசா மீது கை வைக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஹெச் 1பி விசா வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டுமென்றால் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டணமாகச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வணிகத்துறை செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், "அமெரிக்க நிறுவனங்கள் யாருக்காவது பயிற்சி அல்லது வேலை வழங்க விரும்பினால், நமது நாட்டிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து திறமையான பணியாளர்களுக்கு வழங்குங்கள். நமது வேலை வாய்ப்பை அந்நியர்களுக்கு ஏன் வழங்குகிறீர்கள்? அமெரிக்கர்களுக்கு பணி வழங்குங்கள். அத்தகைய பணிகளை அமெரிக்கர்களும் எளிதாகச் செய்வார்கள்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் டெக்னாலஜி துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை இந்தியா, சீனா நாடுகளில் இருந்துதான் ஊழியர்களை கொண்டு நிரப்பி வருகின்றன. இதனால், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை டெக்னாலஜி, கணக்கு, அறிவியல் துறைகளில் பணி புரிய 25 லட்சம் பேருக்கு ஹெச்1 பி விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வளவு ஏன்? டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான்மஸ்க்கே தென்னாப்ரிக்காவை சேர்ந்தவர்தான். பிறகு, அமெரிக்க குடிமகனுக்குரிய H-1B விசாவை பெற்றார். டிரம்பின் இந்த கட்டண உயர்வு காரணமாக அமெரிக்காவில் டெக்னாலஜி துறையில் பல இடையூறுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியர்கள்தான் அதிகளவில் ஹெச் 1 பி விசா வைத்துள்ளனர். கடந்த வருடத்தில் மட்டும் வழங்கப்பட்ட ஹெச் 1 பி விசாக்களில் 71 சதவிகிதத்தை இந்தியர்களே பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் 11.7 சதவிகிதத்துடன் சீனர்கள் உள்ளனர். அமெரிக்காவில் பணிபுரிய ஆண்டுக்கு 65 ஆயிரம் ஹெச் 1பி விசா வழங்கப்படுகின்றன. இது தவிர அட்வான்ஸ் டிகிரி பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பொதுவாக 3 ஆண்டு முதல் 6 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும். இதற்கான, கட்டணங்களை பணி வழங்கும் நிறுவனங்களே கட்டுகின்றன. இதுவரை இந்த விசாவுக்கு 1,700 டாலர்கள் முதல் 4,500 டாலர்கள் வரை கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. தற்போது 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் எடுத்து முடிவு குறித்து அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ, இன்போசிஸ் , கூகுள் , ஐ.பி.எம் உள்ளிட்ட எந்த நிறுவனங்களும் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அமெரிக்காவிலுள்ள இந்திய, சீன தூதரகங்களும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
H-1B விசா கட்டணத்தை உயர்த்தும் ஆணையில் கையொப்பமிட்ட டொனால்ட் டிரம்ப், நேற்று மற்றொரு முக்கிய ஆணையிலும் கையொப்பபமிட்டார். அதன்படி 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தி நிரந்தர அமெரிக்கக் குடிமகனுக்கான 'கோல்டன் கார்டு ' விசாவையும் பெறலாம்.