இன்றைய எபிசோடுக்கு போவதற்கு முன்னால், நேற்று 24*7 காட்சிகளில் பார்க்க நேர்ந்த சில விசயங்களைப் பற்றிப் பேச வேண்டியதிருக்கிறது. இதெல்லாம் நேற்றோ, முந்தின நாளோ எபிசோடுகளில் வரவேயில்லை. எல்லாமே சாண்ட்ராவின் திருவிளையாடல்கள்தான்! இப்படி ஒரு பெண்ணை நாம் எங்கேயுமே பார்க்க முடியாது என்று நிரூபிப்பதான காட்சிகள் அவை.
சென்ற வாரம் ஆட்டத்தில் இருந்து வெளியேறிய சாண்ட்ரா, வீட்டுக்குப் போனதுமே, பல எபிஸோடுகளையும் பார்த்திருக்கக்கூடும், கூடவே பிரஜினோ அல்லது நண்பர்களோ அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கவும் கூடும். அவ்வளவு சொதப்பல்கள் அவரால் உள்ளே நடந்திருக்கின்றன. சாண்ட்ரா, தான் காரிலிருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தை இத்தனைப் பெரிதாக்கியதால்தான் பாரு, கமருதீன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்கள், அதில் மக்களிடம் தமக்கு ஒரு பெரிய ரீச்சும், சிம்பதியும் கிடைத்திருக்கும். கூடவே, விஜய் சேதுபதியின் மறைமுகமான ஒத்துழைப்பும் நமக்கு இருக்கிறது. அதனால், நாம் ஃபினாலே மேடை வரைக்கும் போய்விடலாம், டைட்டில் அடிப்பதும் உறுதி என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சாண்ட்ராவுக்கு இருந்திருக்கிறது. அதனால்தான், சென்ற வாரம் வெளியேறியபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அந்தப் பணப்பெட்டியையாவது எடுத்துக் கொண்டு போய் இருக்கலாமே என்று இத்தனை நாட்களான பிறகும், அவரது கண்களில் தெரிந்த ஆதங்கத்தை அவரால் மறைக்கவே முடியவில்லை.
கார் டாஸ்க்குக்குப் பிறகு, பாரு மற்றும் கமருதின் மன்னிப்புக் கேட்க வந்தபோது, தான் நடந்து கொண்ட விதம், நடிப்பு என்பதும் அப்பட்டமாக வெளியாகிவிட்டது, அது தம் மீதான சிம்பதிக்குப் பதிலாக மக்களிடம் பெரும் எதிர்ப்பைத்தான் உருவாக்கியிருக்கிறது என்பதும் புரிந்துவிட்டது. ஆகவே, அதைச் சரி செய்தாக வேண்டும். அதோடு கூட பாரு, கனி மீது கொட்டி வைத்திருக்கும் வன்மம் மட்டுமல்லாது, கூடவே, அமித், திவ்யா, ரம்யா என யாரெல்லாம் நம்மோடு உண்மையாக, நேர்மையாகப் பழகிக் கொண்டிருந்தார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் கூட புறம் பேசி வைத்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் சரி செய்தாக வேண்டும்! இதற்கெல்லாம் 3 நாட்கள் போதாதே எனும் மனநிலையில்தான் டைம் டேபிள் போட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா! அதனால்தான் உள்ளே வந்ததிலிருந்து அவரது முகத்தில் உற்சாகம், புன்னகை என அவருக்குச் சம்பந்தமில்லாத விசயங்களை ஒட்டி வைத்துக்கொண்டு, எல்லோரிடமும் தேடித் தேடிப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார். அத்தனை டேமேஜ்ளையும் முடிந்த அளவுக்குப் பேட்ச்சப் செய்து விட வேண்டும் என்ற நோக்கம்!
உள்ளே வந்ததுமே, ’என் புருசன் பெரிய பெரிய பிராஜக்ட்ஸில் கமிட் ஆகியிருக்கிறார், இதென்ன 18 லட்சம், அவர் எனக்கு 18 கோடியே சம்பாதித்துக் கொடுத்துடுவார். அந்தப் பணம் வினோத்துக்குப் போனது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம்!’ என்று வாய்கிழிய தற்பெருமை பேசினார். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே, பிரஜினுடன் தனியே பேசிக்கொண்டிருந்த போது, ‘நல்ல வாயன் சம்பாதிக்கிறதை, நாற வாயன் தின்கிறான் என்று திவ்யா என்னைப் பார்த்து பாடினாள் பிரஜின். அதனால்தான் நான் அந்தப் பெட்டியை எடுக்கவில்லை. இல்லையென்றால், நிச்சயம் எடுத்திருப்பேன். குறிப்பாக வினோத்தை எடுக்கவே விட்டிருக்கமாட்டேன்’ என்று பெட்டி போன ஆதங்கத்தை ஒரு வாரமான பின்பும் வெளிப்படுத்தினார். ஆனால், வீட்டில் பெட்டியை எடுப்பத்தைப் பற்றிய எந்த யோசனையுமே இல்லாமலிருந்தது இவர் மட்டும்தான். அந்தளவுக்கு இவருக்கு டைட்டில் மீது நம்பிக்கை இருந்தது! எத்தனை முரண்பாடுகள் பாருங்கள்!
கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், திவ்யாவிடம், ‘நீ எப்படி நான் உன்னை ’நட்பைத் தொடரப்போகும் ஆள்’ என்ற கேட்டகிரியில் சொல்ல மாட்டேன் என்று நினைத்தாய்? நம் நட்பு என்ன அத்தனைச் சாதாரணமாகப் போய்விட்டதா?’ என்று பிரஜின் அன்பைக் கொட்டியதையும், அதற்கு சாண்ட்ராவும் எழுந்து வந்து திவ்யாவைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்ததையும் பார்த்தோமல்லவா? ஆனால் இங்கே புருசனும், பொண்டாட்டியும், அதே திவ்யாவைப் பற்றிப் புறம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாடிக்கேற்ற மூடி! அதாவது, சாண்ட்ராவுக்கு பிரஜின், திவ்யா மீது நட்பு வைத்திருந்ததில் எந்தப் பொறாமையுமே இல்லையாம், இந்த வியானா வந்துதான் திவ்யாவிடம், இல்லாத ஒன்றைச் சொல்லி அப்படிப் பற்ற வைத்துவிட்டாளாம். ‘அவள் அப்படிச் சொன்னாலும், திவ்யாவுக்கு எங்கே போச்சு அறிவு? நான் அவளை அப்படி நினைப்பேனா?’ -இது சாண்ட்ரா. ஆஹா, இவர்களுக்கு அல்சைமர் மாதிரி ஏதாவது மறதி நோய் இருக்கிறதா? அல்லது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களான நமக்கெல்லாம் அல்சைமர் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
’எப்போது பார்த்தாலும் என் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்களே சாண்ட்ரா… தன்னுடைய அம்மா இன்னொரு பெண்ணைப் பார்த்துக் கிழவி என்றும், சைகோ என்றும், ’அந்த லேடி’ என்றும் சொல்வதையும் பார்ப்பார்கள் அல்லவா? அது பரவாயில்லையா? சரி, என்னைக் கிழவி என்று சொன்னீர்களே, உங்களுக்கு என்ன 20 வயதுதான் ஆகிறதா?’ என்று கனியிடம் சமாதானம் பேசப்போன சாண்ட்ராவை உட்கார வைத்துக் கொண்டு நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கனி. பதில் பேச முடியாமல் திணறினாலும், சாண்ட்ராவின் வாயிலிருந்து ‘ஸாரி’ என்று ஒரு வார்த்தை வரவில்லை.
’லூஸ்டாக் செய்துவிட்டேன், அதற்கு நான் வருந்தினேன் கனி’
’என்னிடம் வந்து சொல்லவே இல்லையே?’
’அந்த அளவுக்கு வருத்தம் இல்லை கனி. எனக்குள் நானே வருந்திக்கொண்டேன். எனக்குப் பொதுவா சண்டை போடுறதே பிடிக்காது கனி, அதனால் அப்படிப் பின்னால் பேசிவிட்டேன்’
‘இப்படிப் புறம் பேசுவதற்குப் பதிலாக, முகத்துக்கு நேராக சண்டை போடுவதுதான் நேர்மை!’
அதெல்லாம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை! பேட்ச்சப் லிஸ்ட்டில் அடுத்து யாரென்று சோதித்தார். ரம்யாவுக்கும், அமித்துக்கும் விபூதி அடித்துவிட்டதை நேற்றே பார்த்தோம். மிச்சமிருந்தது பாரு, கமருதீன்! ஒரு கேமராவின் முன்னால் போய் வசதியாக நின்றுகொண்டு, கண்ணீர் விட்டுக் கதறியபடியே பேச ஆரம்பித்தார்.
‘பாரு, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாரு, உன்னை என் தங்கை மாதிரி நினைத்தேன். அன்றைக்கு எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா? நான் ஏதாவது பேசினால், உங்கள் மனசு ஏதும் கஷ்டப்பட்டுவிடுமோ என்று நினைத்துதான் பயந்தேன். வெளியே போகும் போது வந்து கட்டிப் பிடிக்கவேண்டும் என்று எனக்கு அவ்வளவு ஆசை! உங்க கூட இருந்த அழகான, ஃபன் மொமண்ட்ஸை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன் பாரு, கமருதீன்’
அடங்கப்பா!! இப்படி ஒரு உருட்டை நாம் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டோம்! பாரு, தர்பூசணியாவது முதிர்ச்சியற்றவர்கள், அவசரப் புத்திக்காரர்கள், தமக்கு நடப்பதை முழுதுமாக ஆய்ந்தறிந்து உணரத் தெரியாதவர்கள், எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று அறியாதவர்கள், வன்மத்தை வெளிப்படுத்துபவர்கள், அவ்வளவுதான்! ஆனால், இதெல்லாவற்றையும் விட பெரிதான ஒன்று போலித்தனம்! எப்போது வேண்டுமானாலும், தம் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் போலித்தனம்!
‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும் அன்னார் அழுத கண்ணீரும் அனைத்து’’ என்று அய்யன் வள்ளுவன் குறிப்பது சாண்ட்ராவின் இந்தக் குணத்தைத்தான்! நாமாவது இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோமாக!
இன்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல, வினோத் உள்ளிட்ட பலரும், தர்பூசணியைப் போட்டுக் கலாய்க்க, அந்தாள் அதை எதிர்கொள்ளத் தெரியாமல், கெட்டவார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். இவனெல்லாம் விருந்தினர் வாரம் என்றும் பார்க்காமல் ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிடப்பட வேண்டியவன். ஒரு கட்டத்தில், தர்பூசணி, சீரியஸாகவே வினோத்தை அடிக்கப்போனதுதெல்லாம் செம காமெடி! ‘ஒரு அடி தாங்க மாட்டாய்’ என்ற பில்டப் வசனத்துடன், தன்னை ஹீரோ என்று நினைத்தபடி, முஷ்டியை மடக்கிக்கொண்டு போன போது அங்கிருந்த பெண்கள் உட்பட எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வினோத்தும், பிரவீனும் ஒரு எறும்பைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வினோத், ஒரு அரை விட்டால், நாலு பல்லு பெயர்ந்து வந்துவிடும் தர்பூசணிக்கு! அது அந்தாளுக்கு உறைக்கிறதா என்றே நமக்குப் புரியவில்லை.
அடுத்து, சாண்டியும், கவினும் அவர்களது பட புரமோஷனுக்காக உள்ளே வந்து போனார்கள். பழைய பாசத்தில் சாண்டியோடு, கொஞ்ச நேரம் அளவளாவினார் பிக்பாஸ்! ஒவ்வொரு சீசனிலும் கெஸ்ட்டாகக் கூப்பிட்டும், அந்தாள் வருவதில்லை போலிருக்கிறது. இனி வருகிறேன் என்று சொன்னார்.
அடுத்து, விக்ரமைத் தனியே கூப்பிட்டு, அவரின் விடியோத் தொகுப்பை எல்லாம் போட்டுக் காண்பித்து, செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் பேசி, நெகிழ்ச்சியைப் பிழிந்துகொண்டிருந்தார் பிக்பாஸ்! நாளை மற்ற மூவருக்கும் இதே வைபவம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்!