நேற்று விக்ரமுக்குப் படம் காண்பிக்கப்பட்டதைப் போலவே, இன்று அரோரா, சபரி, திவ்யா ஆகிய மற்ற மூவருக்கும் வரிசையாகப் அவர்களின் நூறு நாட்கள் வாழ்வின் தொகுப்புப் படம் காண்பிக்கப்பட்டது. வழக்கம் போலவே இது நெகிழ்ச்சியான தருணம்தான். விக்ரம், திவ்யா, சபரி ஆகிய மூவரும் இந்த ரீகேப்பிங் மற்றும் பிக்பாஸுடனான செண்டிமெண்ட் உறவு குறித்த தனி உரையாடலுக்கு அழைக்கப்படும்போதே, நெகிழத் தயாராக வந்தனர். போலவே, கண்ணீர் வழிய வழிய அழுதுவிட்டும் போனார்கள்.
ஆனால், சற்றே ஜாலியான பெண்ணான அரோராவுக்கு இதை அழுது கடக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. உற்சாகமாக, சிரித்தபடி வந்தார். போலவே, பிக்பாஸின் செண்டிமெண்ட் வசனங்களையும் சிரித்தபடியேதான் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், யாரை எங்கே தட்டினால் கண்டெண்ட் கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியாததா என்ன?
’ஒரு வீடு உங்களை உதாசீனப்படுத்தி உதறித் தள்ளியிருக்கலாம். ஆனால், இன்று லட்சக்கணக்கான தாய்மார்கள் உங்களை அவர்கள் வீட்டுப் பெண்ணாக வரவேற்கக் காத்திருக்கிறார்கள்’ என்ற வெடிகுண்டைத் தூக்கி வீசியதும், அரோரா தாங்கமுடியாமல் சட்டென உடைந்து அழுததைப் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
மறுநாள் விடிந்ததுமே தர்பூசணியின் முகத்தைத்தான் கேமரா காண்பித்தது. எங்கே போய் முட்டிக் கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை.
அடுத்து இறுதிப் போட்டியாளர்களுக்கு, முடி வெட்டி, நகம் வெட்டி, குளிப்பாட்டி, அழகு படுத்தி அனுப்பினார்கள். அவர்களைத் தவிர மற்ற அத்தனை பேரையும் வெளியே அனுப்பவேண்டிய நேரம் வந்தது. வினோத்தை ஒரு பாடல் பாடச் சொல்ல, அவரும் பாடினார். நகைச்சுவை, சண்டைக் காட்சி, நட்பு என்று ஏற்கனவே காட்டிய படத்தொகுப்புகளின் வரிசையில் கடைசியாக செண்டிமெண்ட் காட்சிகளின் தொகுப்புக் காண்பிக்கப்பட்டது. விடியோவில் அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சூழலிலும் அழுததைப் பார்த்த போட்டியாளர்கள், இப்போதும் கதறியழ ஆரம்பித்தார்கள். விடியோ முடிந்த பின்பும் பிரவீனும், கனியும் அழுகையை அடக்க முடியாமல் வெடித்து அழுது கொண்டிருந்தார்கள். நூறு நாட்கள் அவர்கள் வாழ்ந்த வீடு, அழுது, சிரித்து, கோபப்பட்டு, உணர்ச்சிக் குவியல்களாக வாழ்ந்த வீடு. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், புரிந்துகொள்ள முடிந்தது.
விடியோ முடிந்ததும், அனைவரும் ஒன்றாக கும்பலாக சூழ்ந்து நின்று அணைத்துக்கொண்டு, வேற்றுமைகளை மறந்து பாரு, கமரு, நந்தினியையும் நினைவு கூர்ந்தது, இதுவரை இந்த சீசனில் அவர்கள் செய்த பாவங்களைக் கழுவிக்கொண்டது போலிருந்தது. பின்னர் இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.
ஒருவழியாக இந்த சீசன் இன்றோடு நிறைவுக்கு வருகிறது. நாளை இறுதி மேடை நிகழ்வு! வெற்றியாளர் யாரென்பது நாளை தெரிந்துவிடும்!
போட்டியாளர்களின் அழிச்சாட்டியங்கள், விஜய் சேதுபதியின் போதாமைகள், பிக்பாஸின் தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் கடந்து, முந்தைய எட்டு சீசன்களாக இல்லாத அளவுக்கு வன்மம் மிக அதிகமாக வழிந்தோடியது இந்த சீசனில்தான். பார்வையாளர்களைக் கூச வைக்கும் நிகழ்வுகளும், ம்யூட் போட வேண்டிய தேவைகளும் இந்த சீசனில் அதிகமாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் மீறி, நாமும் நம்மை எடை போட்டுக்கொள்ள கொஞ்சம் விசயங்களும் கிடைத்தன என்று சொல்லலாம்!
செயற்கையாக உருவாக்கப்பட்ட, அத்தனை அழுத்தங்களையும் தாக்குப் பிடித்து, விக்ரம், அரோரா, சபரி, திவ்யா ஆகிய நால்வர் இந்த இறுதி மேடைக்கு வந்திருக்கிறார்கள். நால்வருமே, ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக இந்த மேடையைப் பகிர்ந்துகொள்வதற்குத் தகுதியானவர்கள்தான் என்று தோன்றுகிறது. அவர்களுடன் கூடவே ஒருநாள் கூடத் தடைபடாமல், 105 நாட்களாக நாமுமே அவர்களைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். ஒருவகையில், இது பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்துப் புறணி பேசும் மகிழ்ச்சியை ஒத்ததுதான், ஆயினும் இது வரையறுக்கப்பட்ட, கன்செர்ண்ட் நிகழ்வுதான் என்பதால், அது ஏற்புடையதே! அதைத்தாண்டியும், இதிலிருக்கும் நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து நமது முதிர்ச்சியை சற்றே உயர்த்திக் கொள்வோமேயானால் அது சிறப்பு.
பக்கச்சார்புகள், விருப்பு, வெறுப்புகள் தாண்டி, இறுதிப் போட்டியாளர்கள் நால்வரையுமே நாம் மனதார வாழ்த்துகிறோம்!