அநாகரீகத்தின் உச்சமாகத் தர்பூசணி, திவ்யாவிடம் வந்து, ’உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?’, என்று கேட்பது, ‘உன் வாசம் சூப்பராக இருக்கிறது’ என்று கமெண்ட் அடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறான் போலிருக்கிறது. இவையெல்லாம் எபிஸோடில் வராமலிருந்திருக்கலாம். அதற்கு ‘மரியாதை கெட்டுவிடும்’ என்று திவ்யா எப்படி, எத்தனை முறை கோபத்தை வெளிப்படுத்தினாலும், கொஞ்சமும் மானமில்லாமல் மீண்டும் மீண்டும் அவரை இடைஞ்சல் செய்துகொண்டே இருக்கிறான் என்று தெரிகிறது. அந்தக் கடுப்பை திவ்யா, ஆதிரையிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட தர்பூசணி வந்து, ‘அவள் மட்டும் என்னை பர்மா பொம்மை என்று சொல்லலாமா, அதே உரிமையோடுதான் நானும் பேசினேன்’ என்றான். அதாவதி பதிலடி தருகிறானாம். அதாவது, ’பர்மா பொம்மை’ என்று கேலி செய்வதும், ‘மடியில் படுக்கட்டுமா?’ என்று கேட்பதும் ஒன்றாம், பெண்கள் அதைப் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம். திவ்யாவுக்காக, பலரும் அவனைக் கண்டித்தனர். ஆனால், அத்தனை பேரையும் தனியாளாக சமாளித்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே வந்த பிறகு கூட சீக்கிரமே, இவன் மாமியார் வீட்டுக்குள் போவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.
அடுத்து, ’போகியை முன்னிட்டு எந்த பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று எல்லோரிடமும் ஒரு நேரப்போக்குக் கேள்வி கேட்கப்பட்டது. வழக்கம்போல எல்லோரும் எதையெதையோ சொல்லிவிட்டுப் போனார்கள். இங்கும் திவ்யா ஏதோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டுதான் இருந்தார். திவாகர் மீது காண்டு இருந்தால் அதைக் காட்ட வேண்டிய இடம் இதுவல்ல. அவர் பேசும்போது மட்டும் எல்லோரும் உற்சாகமாகக் கவனிக்க வேண்டுமாம். மற்றவர்கள் பேசும் போது, இவர் அதில் ஈடுபாடு காண்பிக்காமல், கவனிக்காமல் கம்மென்று இருப்பாராம்.
அடுத்து, நடிப்பு அரக்கி சாண்ட்ரா உள்ளே வந்தார். வந்ததுமே ஒரு பெரிய டிராமாவை நடித்துக் காண்பித்தார். அதாவது புருசன் பிரஜினை 20 நாட்களாகப் பிரிந்திருந்தது அவருக்கு 20 யுகங்கள் பிரிந்திருந்தது போலிருந்ததாம். அதனால், பிரஜினுக்கு முன்னால், மண்டியிட்டு அமர்ந்து, ரோஜாப்பூ கொடுத்து கண்ணீரும், கம்பலையுமாக அவரது காதலை வெளிப்படுத்தினார். இதெல்லாம் என்னது? நம்மையெல்லாம் பார்த்தால் எப்படித் தெரிகிறது இவர்களுக்கு?
சாண்ட்ரா, ரம்யாவிடம் வந்து, ‘என் குழந்தைகள் மீது சத்தியமாகச் சொல்கிறேன். நீ நிகழ்ச்சியை தப்பா பார்த்திருக்கே, ரம்யா’ என்று ஆரம்பித்தார். அதாவது, ரம்யாவின் முதுகுக்குப் பின்னால், அவரை ‘பாம்பு’ என்று சொன்ன விசயத்தைத்தான் சொல்கிறார் போலிருக்கிறது. ஆனால், அவர் பாம்பு என்று சொன்னது உண்மை, எபிசோடிலேயே நாம் பார்த்த விசயம் அது! அதில் போய் குழந்தைகள் மீதெல்லாம் சத்தியம் செய்கிறார் சாண்ட்ரா. என்னத்தைச் சொல்வது? இங்கே, ரம்யாவே அதைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, பரவாயில்லை என்று விட்டுவிட்ட பின்பும், இப்படி அதை மீண்டும் பேசியே ஆகவேண்டுமென்பதும் இல்லை.
ரம்யா பிடிகொடுக்காமல் சமாளித்ததும், அடுத்து அமித்திடம் வந்தார். செம காண்டில் இருந்த அவரிடம், ’நான் அந்த அர்த்தத்தில் சொல்லவே இல்லை அமித், நீதான் என்னுடைய ஆருயிர் நண்பன். என்னிடம் பேசும் வரை நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருப்பேன், ஸாரி, ஸாரி. இந்த வீட்டிலிருந்து ஒரே ஒரு நண்பனுடன் நட்பை நீட்டிக்க வேண்டுமென்றால் அது நீதான்’ என்று டயலாக் பேசி, அமித்தை கிளீன் போல்ட் ஆக்கினார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், சபரிதான் என் ஆயுளுக்கும் மறக்க முடியாத நபர், என் அண்ணன் மாதிரி என்று சொல்லிவிட்டு இப்போது இப்படி! கடைசியில், வாயே திறக்கக்கூடாது என்று வலுக்கட்டாயமாக இருந்த அமித்தையே ஒவ்வொரு வார்த்தையாகப் பிடுங்கிப் பேச வைத்து, ’ஓகே, பரவாயில்லை’ என்று சொல்ல வைத்துவிட்டார்.
அடுத்து பாக்கியிருந்த வினோத் உள்ளே வந்தார். எல்லோரும் குதூகலமாக இருந்தார்கள். அரோரா மட்டும், ‘அவர் போனதற்கு தானும் ஒரு காரணமாக இருப்போமோ?’ எனும் வருத்தத்தில், அழுதுகொண்டிருந்தார். வீக்கெண்ட் உட்பட பல தடவைகள், அது விளக்கப்பட்ட பிறகும் இது அரோராவுக்கு தேவையில்லாத வேலை. அவரை சமாதானப்படுத்தினார் வினோத்!
அடுத்து, இந்த மொத்த சீசனின் நல்ல தருணங்களையும், நட்பை முன்னிறுத்தி ஒரு லாங் விடியோவாகப் போட்டுக் காண்பித்தார்கள். எல்லோரும் நெகிழ்ச்சியாக இருந்தார்கள். இங்கேயும் சாண்ட்ரா மட்டுமே போலியாகத் தெரிந்தார். எல்லோரும் ஆளாளுக்கு ஒவ்வொரு நட்பைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். திவ்யா மட்டும் எனக்கு ஒரு நட்பு கூட கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சரிதான், அது அவரது பிரச்சினைதான் என்று உணர்ந்தால், அவருக்கு நல்லது!