முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எழுந்து, ’இப்போதைய போட்டியாளர்களில் யார் உங்களுக்குப் பிடித்தவர்? யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்?’ என்று அவர்களுடைய விருப்பத்தைச் சொல்லச் சொன்னார் விஜய் சேதுபதி. ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு நபரைச் சொல்லிவிட்டு அமர்ந்தனர். எல்லோரும் தலா ஓர் ஆதரவை வாங்கினார்கள், சபரிக்கு கூடுதலாக இரண்டு ஆதரவுகள் கிடைத்தன. அதற்குக் காரணம் சாண்ட்ரா காரிலிருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் சபரியின் நடவடிக்கைதான் என்பது தெளிவு. பூமர் பிரவீன் காந்தி எழுந்து சாண்ட்ராவை சொன்னது கூட பரவாயில்லை, ஆனால் அதற்குக் காரணம் என்று ஒன்றைச் சொன்னார் பாருங்கள்… ‘சாண்ட்ரா காரிலிருந்து தள்ளப்பட்ட போது, மல்லாக்க விழுந்து வானத்தைப் பார்த்தார், அதனால் அவர் வெற்றியையும் பார்க்க வேண்டும்’. அடாடா, கவிதை மாதிரி என்னே ஒரு கருத்து!
அடுத்து, நேற்று அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் பிரவீனுக்கும், வியானாவுக்கும் அவர்களின் தவறு புரியவேயில்லை என்று பேசியிருந்தோம். அதே விசயத்தின் இன்னொரு வடிவமான ‘வினோத், பணப்பெட்டியை எடுத்தபோது’ நடந்த கூத்துகளையும் ஒரு குறும்படமாகவே போட்டுக் காட்டினார் விஜய் சேதுபதி. இதிலும் இந்த இருவர்தான், தேவையற்ற விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இந்தப் பிரச்சனையில், வியானாவின் கூற்று என்னவென்றால், ’விக்ரமும், அரோராவும் திட்டமிட்டு வினோத்தின் மண்டையைக் குழப்பி, அவரைப் பெட்டியை எடுக்க வைத்தார்கள். அவர்களின் செயல் திட்டம் நிறைவேறியவுடன், அவ்வளவு உள்நோக்கத்தோடு அவர்கள் சிரிப்பதை நான் பார்த்தேன்’ என்பது!
என்ன சதித் திட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள்? அல்லது ஒட்டுக்கேட்டீர்கள்? அவ்வளவு உறுதியாக எப்படி அவர்கள் இருவர் மீதும் பழி போடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, ‘எனக்கு அப்படித் தோன்றியது, அவ்வளவுதான்’ என்று மட்டுமே அலட்சியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் வியானா. அதுதான் எங்களை ஏற்கனவே வெளியே தள்ளிவிட்டீர்களே, இனி எங்களை என்ன செய்ய முடியும் என்ற தெனாவெட்டுதான் அவரது குரலில் இருந்தது. அது தெரிந்தும் விசேவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
அதேதான் பிரவீனுக்கும்! அவர் சொன்னது, ‘பணப்பெட்டியை வினோத் எடுத்ததும், சபரியின் கண்களின் ஒரு நிம்மதி தெரிந்தது’. ‘கண்களைப் பார்த்து எப்படி நீங்கள் கதை எழுத முடியும்?’ என்று விசே கேட்டதற்கு அவரும், ‘எனக்கு அப்படித் தோன்றியது’ என்ற அதே பல்லவியைத்தான் பாடிக்கொண்டிருந்தார், அவரது பாடி லேங்குவேஜும் நிச்சயம் மரியாதையானதாக இல்லை! இதிலும் விஜய் சேதுபதிக்குக் கடுப்புதான்.
அதோடு பிரவீன், ‘ஏன் ஒரு காம்பெடிடர் வெளியேறியதால், இன்னொரு போட்டியாளாருக்கு நிம்மதி ஏற்படக்கூடாதா? அது அவர்களின் கண்களில் தெரியாதா? அதை என்னால் பார்க்க முடியாதா? நான் அதைப் பார்த்தேன் என்று சொன்னதில் என்னண்ணே தப்பு?’ என்று விசேவுடன் மல்லுக்கு நின்றார்.
‘நான் இவ்வளவு சொல்லியும், இவர் யார் நமக்கு அறிவுரை சொல்வதற்கு என்று அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத பிடிவாதம்தான் உங்கள் கண்களில் எனக்குத் தெரிகிறது’ என்று விசே வசமாக மடக்கிப் பிடித்ததும், ‘அய்யய்யோ, அண்ணே’ என்று பிரவீன் பதறி சரண்டரானார். அதன்பின்,
‘உனக்கே அடுத்தவரின் கண்களைப் பார்த்துப் படிக்கத்தெரியும் போது, இத்தனை வருசமா இங்க குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன், எனக்குத் தெரியாதா? எனக்கும் கண்களைப் படிக்கத் தெரியும்! இன்னும் உன் கண்ணில் என்னவெல்லாம் தெரிகிறது என்று சொல்லட்டுமா?’ என்ற பயம் காட்டி, பதிலடி கொடுத்து உட்கார வைத்தார். பிரவீனுக்கு இது தேவைதான்.
அடுத்து எலிமினேஷனுக்கு வந்தார் விசே. சர்ப்ரைஸ் வைக்காமல், சட்டென சாண்ட்ராவின் கார்டைக் காண்பித்ததும், பார்வையாளர்கள் குதூகலித்தார்கள். சாண்ட்ரா இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவரது அத்தனை ஏமாற்றத்தையும் சிரிப்புக்குள் ஒளித்துவைத்து நடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார் நடிப்பு அரக்கி. தன் மீது சாண்ட்ரா வைத்த பழியையும் மீறி, வழியனுப்பும் போது திவ்யா அவரை அணைத்துக்கொள்ள முயன்றபோது, அதைத் தவிர்த்து, வன்மத்தையும் காண்பித்தார். உள்ளேயும், மேடைக்கு வந்த பிறகும் கூட அவரது சிரிப்பும், பேச்சும் போலித்தனமாக இருந்தன. சாண்ட்ராவை வெளியேற்றிவிட்டு, விஜய் சேதுபதி கிளம்பிவிட்டார்.
உள்ளே, ஒவ்வொருவரும் ‘இத்தனை நாள் ஆட்டத்தில், யாருக்கு ஸாரி, யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்களோ, சொல்லுங்கள்’ என்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. வளவளவென்று ஏதேதோ சொன்னார்கள். விக்ரம், வியானாவுக்கும், திவ்யாவுக்கும் ஸாரி சொன்னார். இதெல்லாம் தேவையே இல்லாத வேலை. இத்தனை தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்வதால், அதில் தவறென்னவோ விக்ரம் பக்கம் என்ற அர்த்தமாகிவிடும். ஆனால், நிஜமோ அதற்கு மாறாக இருக்கிறது. அடுத்து வெளியே போக வேண்டியது திவ்யா என்று நாம் நினைக்கிறோம், நடக்கப்போவது என்னவென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!