தமிழ்நாட்டின் மொழிப்போர் என்பது இந்திய சுதந்திரத்துக்கும் முன்பாக, 1930களிலேயே தொடங்கி இன்று வரை நூறாண்டுகளாக நடக்கும் அநீதிக்கு எதிரான போராட்டம். 1937ல் ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெட்ராஸ் மாகாணத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்தது. அப்போது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம், இந்தித் திணிப்புக்கு எதிராக களமிறங்கியது. பெண்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் பெருமளவில் போராடினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட தாளமுத்து, நடராசன் இருவரும் உணவு, மருத்துவ வசதிகள் தரப்படாமல் சிறையிலேயே கொல்லப்பட்டனர். அதன் பின்னர்தான் தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்தனர். அதன் விளைவாக, 1940ல் இந்தி திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின், 1950ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போதே, அடுத்த 15 ஆண்டுகளுக்கு, இந்தியோடு, ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும் என்றும், 1965க்குப் பின்னர் ஆங்கிலம் நீக்கப்பட்டு, இந்தி மட்டுமே நாடு முழுதும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும் என்று சட்டமியற்றப்பட்டது.
ஆனால், ஏன் இந்தத் திணிப்பும், அதற்கெதிரான எதிர்ப்பும்?
ஒரு நாட்டுக்கு ஒரே மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டுமா? அதனாலென்ன லாபம்? ஒரு நாட்டில், நாடு முழுவதும் ஒரே மொழி தேசிய மொழியாக இருப்பதால், அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே நிகழும் எளிமையான கருத்துப் பரிமாற்றம்தான் இந்தத் திணிப்புக்கு ஆதரவாக இன்று வரை காரணமாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இதில் நியாயம் இருக்கிறதுதானே என்று நம் மக்களுமே கூட தோன்றலாம். நம்மவர் சிலரே, அதற்கு ஆதரவாகப் பேசுவதையும் அவ்வப்போது நாம் பார்க்கிறோம்.
இதுதான் சிந்திக்க வேண்டிய இடமாகிறது! ஒரு மொழி என்பது வெறுமனே தொடர்புகளுக்கானது மட்டுமல்ல, அதில்தான் ஒரு இனத்தின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. மொழி அழிக்கப்பட்டால், அந்த இனத்தின் வரலாறும், பண்பாடும் மெல்ல மெல்லச் சிதையும். அவ்வினமே அதன் சுய ஆதாரத்தை இழந்து, இன்னொன்றைப் பற்றி வாழும் ஒரு பாராசைட்டாக மாறிப்போகும் கொடுமை நிகழும்!
அப்படியானால், தேசத்துக்கான பொது தொடர்பு மொழி வேண்டாமா? வேண்டும்தான். அதற்காகத்தான் எல்லா வகையிலும், நவீன வடிவம் கொண்டிருக்கும், அறிவியல் மொழியான ஆங்கிலமே இந்தியைக் காட்டிலும் மிகச் சிறந்த மொழியென நாம் முன்மொழிகிறோம், முன்னெடுக்கிறோம். எனக்கும் ஆங்கிலம் அந்நியமானதுதான், ஆனால் அது அறிவைக் கொண்டிருக்கிறது, எல்லோருக்குமான வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது. ஆகவே, தொடர்பு மொழியாக நானும் அதைக் கற்றுக்கொள்கிறேன், அதுவே உனக்கும் நலம் பயக்கும், நீயும் கற்றுக்கொள் என்பதே நமது சிந்தனை. மாறாக, இந்தியைக் கற்றுக்கொள் என வடக்கு நம்மை நோக்கிச் சொல்லுமானால், அது அப்பட்டமான சுயநலம்!
முதலில், இந்தியா என்பது ஒரே நாடல்ல, 1947க்கு முன்பாக இப்படி ஒரு நாடு இருந்ததுமில்லை. இந்தியா பல்வேறு நாடுகளின், பல்வேறு தேசிய இனங்களின் சங்கமம்!
ஐரோப்பா ஏன் ஒரே நாடாக இல்லை? கூட்டமைப்பு என்பது ஒரு பெரும் பலம்தானே? இங்கிலாந்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தம் கூட, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து போன்ற நாடுகளெல்லாம் ஒரே குடைக்குள்ளிருந்தால் இன்று உலகின் மிகப்பெரும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வல்லமை பொருந்திய நாடாக இருந்திருக்கும் அல்லவா? அருகருகே இருந்தாலும், அவர்களைத் தனித்தனியே இயங்க வைப்பது எது? பாரம்பரியமான, பண்பாடுகளையும், தனித்துவத்தையும் கொண்ட அவர்களது மொழி! நம்மைப் போலவே அந்த உணர்வு அவர்களுக்கும் இருந்தது, இருக்கிறது! அதுதான் காரணம்! ஆனால், Unity in Diversity என்ற உயரிய தத்துவமொன்றிருப்பதை அவர்கள் அறியவில்லை.
போலவே, ரஷ்யாவுக்கு என்னவாயிற்று? ரஷ்யா 1991ல் சிதைவுற்று வீழ்ந்ததற்கு என்ன காரணம்? அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் முதன்மையானதாகச் சொல்லப்பட்டாலும், மொழிகள்தான் அதன் ஊற்றுக்கண்! ரஷ்யா உடைவதற்கு முன்னால், இந்தியாவைப் போல ரஷ்யாவும் ஒரு பன்மொழிகளின் கூட்டுக் கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு அற்புதமான நாடாக இருந்தது! உக்ரைனியன், பெலாரஸியன், எஸ்தோனியன், லாட்வியன், கஸாக், உஸ்பெக், கிர்கிஸ் போன்ற பன்மொழி மக்கள் ஒன்றாக வாழ்ந்த தேசம் அது! 1990களுக்கு முன்பாக, பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு ஊடாக ஒரே தொடர்பு மொழியாக ரஷ்யனை அனைவரும் கற்க வேண்டும் என்ற திணிப்பு நடவடிக்கையும் அங்கே நடந்தது. அதற்கெதிராக அத்தனை மொழி மக்களும் வெகுண்டெழுந்தனர். அதுவும் ரஷ்யா சிதறுண்டு போக முக்கியமான காரணமாக இருந்தது. ஐரோப்பா, Unity in Diversity என்ற தத்துவத்தையே தெரிந்து கொண்டிருக்கவில்லை. ரஷ்ய அரசியல்வாதிகள் அதைத் தெரிந்து கொண்டிருந்தும், புரிந்துகொண்டிருக்கவில்லை!
இந்தியாவிலும் அதே நிலைதான்! வடக்கின் எந்தத் தலைவருக்கும் அதன் அருமை தெரியவில்லை. உன் ஊருக்கு நான் எப்போதாவது வருவேன், உன் பஸ்களிலும், ரயில்களிலும், அஞ்சல், வங்கி அலுவலகப் படிவங்களிலும் இந்தி எனக்காகக் காத்திருக்க வேண்டும் என்று சொல்வது எப்பேர்ப்பட்ட சுயநலம்? நான் என் தாய் மொழியான இந்தியை மட்டும்தான் கற்பேன். இந்தியா முழுமைக்கும் அதுவேதான் இருக்க வேண்டும். கல்வியையும், அரசுத் தேர்வுகளையும் அதிலேயே எழுதிக்கொள்வேன். நீ எனக்கிணையாக என் மொழியைக் கற்றுக்கொண்டு வா என்று சொல்வது எப்படி நியாயமாக முடியும்? ஒரு பொதுத்தேர்வில், ஒரு இங்கிலாந்துக்காரனை நம்மால் ஆங்கிலத்தில் வெல்ல முடியுமா? அது சாத்தியமா? அதற்குப் பின்னால் இருக்கும் அநீதி எப்பேர்ப்பட்டது?
நாம் ஒருவருக்கொருவர் இணையானவனாக வேண்டுமானால், இந்தி அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டு, நீயும் ஆங்கிலம் கற்றுக்கொள், நானும் கற்றுக்கொள்கிறேன். இருவருமே அந்தப் பொதுமொழியில் போட்டியிட்டுக் கொள்வோம்! அதுதானே சமநீதியாக இருக்க முடியும்? இந்தியை விடவும் எல்லா வகையிலும் சிறந்த முன்னோடி மொழியான தமிழை இந்தியர்கள் எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள் என்று நாம் அவர்களுக்குச் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படிச் சொன்னால், அது நியாயமா? ஆனால், அப்படி நம்மை நோக்கி ஆணையிடும் திமிர்த்தனம் எங்கிருந்து வந்தது அவர்களுக்கு? அது அவர்களுக்குத்தான் புரியவில்லை என்றால், அவர்கள் அப்படிச் சொல்வதை எப்படி நம்மில் சிலரால் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது? இது எப்பேர்ப்பட்ட அடிமை மனநிலை?
ஆனால், ஐரோப்பாவில் இல்லாத, ரஷ்யாவில் இல்லாத, இந்தியாவில் இல்லாத பொதுச் சிந்தனையான Unity in Diversity எனும் தத்துவத்தை முழுதும் உணர்ந்த தலைவர்கள் நமக்கு வாய்த்தார்கள். இதே தமிழகத்தில் தோன்றினார்கள்!
உலக மாந்தரனைவரையும் ஒரே குடையின் கீழ் வைத்துப் பார்த்த மாவீரன் பெரியாரும், இனம் காக்க வந்த தலைமகன் அண்ணாதுரையும் நமக்குக் கிடைத்தார்கள்! மொழியால் நாம் வேறுபட்டிருந்தாலும், தேசத்தால் ஒன்றுபட்டு வாழமுடியும் என்பதை வடக்காருக்கு நிரூபிக்கப் போராடினார்கள். நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கல்விதான், ஒவ்வொரு காலகட்டத்திலும் வடக்கின் இந்தித்திணிப்பு எனும் அநீதியுடன் தீரமாகப் போராடும் வல்லமையை நமக்குத் தந்திருக்கிறது.
இந்தியை ஏற்றுக்கொண்டதால், ஐம்பதே வருடங்களில் காணாமல் போன குசராத்திய, மராட்டிய, ராசஸ்தானிய, ஒடிய, பீகாரிய மொழிகளைப் போலல்லாது, அதைத் தவிர்த்ததால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வலிமை கொண்ட தமிழ் இன்றும் பெருவலிமையோடு நிற்கிறது! நமது அறிவின் வாசம் வீசியதால், ஆபத்தைக் குறைவாக எதிர்கொண்ட மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியன பிழைத்துக்கொண்டன, இன்று விழித்துக் கொண்டு, ஏற்பட்ட சேதாரங்களைக் கணக்கெடுத்தும் கொண்டிருக்கின்றன.
சட்டம் கெடு வைத்த 1965, நெருங்கநெருங்கவே, அந்த ஆபத்தை பல்லாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து கொண்ட தமிழ்நாடு மீண்டும் போராடத் தொடங்கியது. அண்ணாவும், கலைஞரும் கள முன்னோடிகளாக நின்றனர்.
1959 காலகட்டத்தில், நம் தலைவர்களின் வாயிலாக, நம் மாணவர்களின் போராட்டங்களின் வாயிலாக அந்த வலியைப் புரிந்துகொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியா முழுமைக்குமாக ஒரு வாக்களிக்கிறார். கவனியுங்கள் சட்டத்தை அல்ல, வாக்கைத்தான் தருகிறார்!
‘1965க்குப் பின்னரும், இந்தியும், ஆங்கிலமுமே இரட்டை அலுவல் மொழிகளாகத் தொடரும்! இன்னொரு மொழி பேசும் கடைசிக் குடிமகன் ஒப்புக் கொள்ளும் வரை இந்தி மட்டுமே எனும் கொள்கை திணிக்கப்படாது’- இதுவே நேருவின் வாக்கு.
ஆனால், 1965 வந்த போது, ஜவஹர்லால் நேரு நம்மிடையே இல்லை. போலவே, நேருவின் வாக்கும் யாருடைய நினைவிலுமில்லை! தமிழ்நாடு தொடர்ந்து போராடியது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தாலும், தந்தையின் வாக்கை தமிழ்நாடு, அவர்தம் மகள் இந்திராவுக்குப் புரியவைத்தது. தமிழ்நாடு வென்றது. இது நமது மொழிப்போர் வரலாறு. இந்த நீண்ட நெடும் போரில் தன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளாக வரலாறு, 1939ல் தாளமுத்து, நடராசன், 1965ல் கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி, சிதம்பரம் ராசேந்திரன் ஆகியோரைக் குறித்து வைத்திருக்கிறது. ஆனால், உண்மையில் உயிரீந்தத் தியாகிகள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம் என்பது தெளிவு. இதில் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட ராசேந்திரன் என்பார், ஒரு மாணவர். சிதம்பரத்தில் அமைதி வழியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் முதல்வரான, பக்தவத்சலனாரின் நடவடிக்கையில், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
அப்படியொரு மாணவரின் கதையை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கிறது இந்தப் படம்! ரத்தமும், சதையுமாக மொழிப்போரின் சில பகுதிகள் இதில் காட்சிகளாகப் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அது ஒரு கமர்ஷியல் கதையான அண்ணன் தம்பி பாசம், காதல், ஒரு பர்சனல் பழிவாங்கலுக்காக ஹீரோவைத் தொடர்ந்து வரும் வில்லன், பாடல்கள், உற்சாகம், சண்டைக்காட்சிகள் என அத்தனை விசயங்களுக்கும் ஊடாக மெல்லிய இழையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை சினிமாக் கதையை ஊடாகப் பின்னினாலும், உண்மை எனும் பெருநெருப்பு, படம் முழுதும் பரவித் தகிக்கிறது.
இப்படி ஒரு படம், இப்போது இங்கே சாத்தியமானது ஆச்சரியமான விசயம்தான்! இது, இனி இன்னும் நம் வரலாறுகளில் தூங்கிக் கொண்டிருக்கும் உன்னதமான பக்கங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் உத்வேகத்தை நம் படைப்பாளிகளுக்குக் கொடுக்கும்! அதனால், சமூகமாக, தமிழ்சினிமாவும் வெற்று ஜிகினாக்களைப் புறக்கணித்துவிட்டு, பொறுப்புடன் நம்மோடு கரம் கோர்க்கும் நிலை வரும்!
பராசக்தியின் கிரியேட்டரான சுதா கொங்கராவுக்கு நம் மனமார்ந்த முதல் பாராட்டுகள்!
திரைக்கதையை எழுதியிருப்பது, சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன், கணேசா எனும் மூவர் கூட்டணி! அற்புதமாக எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக இப்படி ஒரு கதைக்கு இறுதிப்பகுதியை அமைப்பது மிகச் சவாலான விசயம், அதை இயன்ற வரை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
வசனம், சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி ஆகியோரின் கூட்டு முயற்சியாக இருக்கிறது! மிகச்சிறப்பு. பல இடங்களில் தீப்பிடிக்கின்றன வசனங்கள். ‘டெல்லிதான் இந்தியாவா?’ என அதர்வா முழங்கும் இடம், ‘பெருஞ்சேனை ஒன்று தேவை’ என சிகா முழங்கும் இடம் என பல இடங்களில் கூஸ்பம்ப்ஸைக் கிளப்பின!
ஜிவி. பிரகாஷின் நூறாவது படம் இது! இந்தப் படத்துக்கான தகிக்கும் இசையைக் கச்சிதமாக தந்திருக்கிறார் அவர். முதல் 10 நிமிடங்களில் நடக்கும், பரபரப்பான காட்சியில் நம்மைப் படபடக்க வைத்தது ஜிவிபி என்றால் அதில் மிகையில்லை! படம் முழுதும் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.
ரவி.கே.சந்திரன் எனும் மாஸ்டரின் ஒளிப்பதிவு, கலை இயக்குநரோடு இணைந்து பராசக்தியை 1965 தமிழ்நாட்டுக்கே கொண்டு சென்றிருக்கிறது. படத்தின் பெரும்பலமாக நின்றிருக்கிறார் ரவிகே! எடிட்டர், சதீஷ் சூர்யாவின் பணியும் குறிப்பிடப்பட வேண்டியது.
சிவகார்த்திகேயன் தன்னாலியன்ற மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தக் கதையைக் கோட்டை விட்டது சூர்யாவின் வாழ்நாள் தவறாகிறது! படம் முழுதும் வரும் கதாபாத்திரங்களை விடவும், கொஞ்சம் பகுதிகளே வந்தாலும் நெஞ்சில் தங்கிவிடும் கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதர்வாவுக்கு அப்படியொரு வாழ்நாள் வாய்ப்பு! அவரது தோற்றமும், நடிப்பும் அத்தனைச் சிறப்பு. நீண்ட நாட்கள் நம் மனதிலிருந்து அழிக்க முடியாத கதாபாத்திரமாக நிற்பார். ரவி மோகன், வில்லனாக முதல் முறையாக திரையில் தோன்றியிருக்கிறார். ஹீரோ எனும் மாயையில் சிக்கிக் கொள்வதை உடைத்து கேரக்டர்கள் என்ற விசயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும், விஜய் சேதுபதி, ரவி மோகன் போன்றவர்களை நாம் அரவணைத்துப் பாராட்டவேண்டும். அதனால், ஸ்டார்கள் எனும் மோகம் ஒழியும்! ரவி மோகன் இறுதி வரை, வன்மம் குறையாத பாத்திரத்தில் ஒரு ஐபி அலுவலராகவே வாழ்ந்திருக்கிறார்.’1955 பராசக்தி’ தமிழ்சினிமாவை, தமிழ்ச்சமூகத்தை மாற்றியமைத்த சினிமா. அதன் பெயருக்குக் களங்கம் தந்துவிடுமோ எனும் தயக்கமும், பயமும் நம்மில் சிலருக்கு இருந்திருக்கலாம். ஆனால், அந்த பராசக்தியின் பெயரை வைத்ததன் மூலமாக அந்தப் படத்துக்கு ஒரு ஆகச்சிறந்த டிரிபியூட்டை, நினைவுகூறலை, நன்றியை இந்த ’2026 பராசக்தி’ செய்திருக்கிறது. தமிழின் அரிதான படங்களின் வரிசையில், இடம்பெறுகிறது பராசக்தி. பேரறிஞர் பெருந்தகையும், 1952 பராசக்தியை நமக்களித்த கலைஞரும் இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள். அவர்தம் வசனங்களும், ஒரு சில இடங்களும் வெட்டியெறியப்பட்டிருக்கின்றனவாம். அநியாயத்தைப் பாருங்கள்,
இப்போதும் நம் சினிமாவை, வடக்குதான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இதுவே ஒரு பெருமுரண்தான்! நாம் இன்னும் ஒன்றுமையையும், Unity in Diversity எனும் அருங்கோட்பாட்டையும் நம்பி நிற்கிறோம்!
நம் வரலாறு நமக்குத் தெரியவில்லை என்றாலோ, அதன் அருமை புரியாதிருந்தாலோ, வரலாறு மீண்டும் நிகழும்! இன்றைய தலைமுறை இளைஞர்கள் புத்தகங்களில் மறைந்திருக்கும் நம் வரலாற்றைத் தவறவிடக்கூடும், அதனால் இப்படியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும்! தவெக, நாம் தமிழர், பிசேபி போன்ற கட்சிகளில் சுயலாபத்துக்காகக் கூடுவோர் கூடட்டும். ஆனால், அறியாமையால் கூடியிருக்கும் தம்பி, தங்கைகள், இப்படியான படங்களைப் பார்த்தால், அது நேரடியாக அவர்தம் மனங்களில் தைக்கும்! திராவிட அரசியலின் உன்னதத்தைக் கற்பிக்கும்!
இதை இன்னுமே, கமர்சியலைக் குறைத்து தீவிரமான வரலாற்றுப் பதிவாகச் செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும் என்றொரு கருத்தும் உலவுகிறது. நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அது நம் இளைஞர்களைச் சென்றடைந்திருக்காது. மாற்றமும், அறிவும் மெல்ல மெல்லத்தான் ஏற்படும், ஏற்பட வேண்டும். டாக்குமெண்டரிகள் அந்நியப்பட்டுப் போய்விடலாம்!
ஆகவே, கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாகச் சென்று திரையரங்குகளில் இந்தப் படத்தைக் காணுங்கள். நம் வரலாறு இன்னும் எப்படி தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும்! வாழ்த்துகள்!