பிக்பாஸும் வினோதிற்கு எக்ஸ்ட்ரா பாராட்டு மழையை பொழிந்தார் #Biggboss Day 96

'நீயெல்லாம் கோப்பையை வெல்லக்கூடியவன்’ என்று அவரது முடிவைத் தவறு என்றும், அவர் செய்தது சரிதான் என்று சிலரும் புலம்பித் தள்ளி, செண்டிமெண்டைக் கிளப்பி அவரை அழ வைத்தனர்.
Vikkals Vikram and Kemy
Vikkals Vikram and Kemy@jiohotstar
Published on

தினசரி டாஸ்க் என்ற பெயரில், ‘வெளியே போனபிறகு இங்கிருக்கும் யாருடன் காண்டாக்ட் வைத்துக் கொள்வீர்கள்? யாருடன் வைத்துக்கொள்ள மாட்டீர்கள்?’ என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. எல்லோரும் ஆளாளுக்கு ஒவ்வொருவரைச் சொன்னார்கள். இதில், சாண்ட்ரா, சபரியை அண்ணன் என்று சொல்லி, வாழ்நாள் முழுதும் தொடர்பில் இருப்பேன் என்று செண்டிமெண்டைக் கிளப்பியது, நடிப்பு அரக்கி வெளியே வந்தது போலிருந்தது.


’புலம்பினால் பணம்’ என்று ஒரு பணப்பெட்டி டாஸ்க் நடந்தது. முதலில் புலம்பிய விக்ரம் ஃபார்மில் இல்லாத மாதிரி இருந்தது. கொஞ்சம் பணமும், இரண்டு பாகற்காய் ஜூஸும் கிடைத்தது. அடுத்து வந்த அரோரா புலம்பத் தெரியாமல் சொதப்ப, 6 ஜூஸ் குடிக்க முடியாமல் குடித்துவிட்டுப் போனார். சாண்ட்ரா புலம்புவதற்காகவே வந்தவர் போல புலம்பித் தள்ளி ஒரு ஜூஸோடு தப்பினார். வினோத், எதிர்பாராத வகையில் ஓரளவுக்குப் புலம்பினார். அவருக்கு ஒரு ஜூஸ் கிடைத்தது. அடுத்து வந்த சபரி, சிறப்பாகப் புலம்பியதில், சொன்ன தொகையை விட ரூபாய் அதிகமாகக் கொடுத்தனுப்பினார் பிக்பாஸ்! ஒரு ஜூஸ் கூட கிடைக்கவில்லை! கடைசியாக வந்த திவ்யாவும், சிறப்பாகப் புலம்பி ஜூஸ் குடிக்காமல் தப்பினார்.

Watermelon Star
Watermelon Star@jiohotstar

கொஞ்ச நேரம் பணப்பெட்டியை எடுப்பது போல, பாவனை செய்து காமெடி செய்துகொண்டிருந்தார் அரோரா. உண்மையில், அவருக்குக் கொஞ்சம் விருப்பமிருந்தது போலத்தான் தோன்றியது. அவர் எடுத்திருக்க வாய்ப்பு அதிகம். அவரைப் பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு ஃரீலான்ஸிங் வேலை வாய்ப்பைப் போலவே கருதுகிறார் என்பது பல சமயங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த கானா வினோத், சட்டென பணப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ’எடுத்துக்கொள்கிறேன்’ என்று டிக்ளேர் செய்துவிட்டார்! பெட்டியில் இருந்தது 18 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்! நாம் ஏற்கனவே, நேற்றே சொன்னதைப்போல இது சரியான முடிவுதான்!

வழக்கம் போல சிலர், ‘என்ன இது? நீயெல்லாம் கோப்பையை வெல்லக்கூடியவன்’ என்று அவரது முடிவைத் தவறு என்றும், அவர் செய்தது சரிதான் என்று சிலரும் புலம்பித் தள்ளி, செண்டிமெண்டைக் கிளப்பி அவரை அழ வைத்தனர். ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து அழுதுகொண்டார்கள். கொஞ்சம் முன்னாடி, ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க மாட்டோம் என்று பேசிக்கொண்ட தர்பூசணியும், வினோத்தும் கட்டியணைத்து அழுது கொண்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில், தர்பூசணிக்கு தனியே பாராட்டுப் பத்திரம் வாசித்து பிரவீன் காந்தி, தான் ஒரு பூமர் என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்!

Vinoth with Cashbox
Vinoth with Cashbox@jiohotstar

ஏதேதோ செய்யக்கூடாததை வினோத் செய்துவிட்டது போல, ரம்யாவும், வியானாவும் சேர்ந்து அரோராவும், விக்ரமும் சேர்ந்துதான் வினோத்தின் மண்டையைக் கழுவிவிட்டார்கள் என்று பழி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக, பிக்பாஸும் வழக்கம் போல டாப் 6க்கு வழங்கும் எக்ஸ்ட்ரா பாராட்டு மழையைப் பொழிந்து அனுப்பிவைத்தார்.

பிரவீன், பெரிய புத்திசாலி போல, வினோத் பணப்பெட்டியை எடுத்ததும் மற்ற ஐந்து போட்டியாளர்களின் முகத்தில், மகிழ்ச்சியைப் பார்த்தேன், சிரிப்பைப் பார்த்தேன், கண்ணைப் பார்த்தேன் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தார். உண்மையில், அந்தச் சூழலில் யாராலும், அவர்களின் முகபாவனைக்கு அர்த்தம் சொல்லிவிட முடியாது. மகிழ்ந்தாலும், அது உண்மையாக இருக்கலாம், வருத்தப்பட்டால் அதிலும் உண்மை இருக்கலாம்! இதையும், விக்ரம், அரோரா, சபரி மூவரும் பேசி மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

பிரவீனும், ரம்யாவும், "வினோத் போனதால், இனிமேல் நீதான் வின்னர்" என்று ‘திவ்யாவுக்கு’ விபூதி அடித்துக் கொண்டிருந்ததுதான் இன்றைய காமெடி!

Puthuyugam
www.puthuyugam.com