காலையிலேயே இந்த தர்பூசணி, ‘குளிக்கப் போகிறேன்’ என்ற சாக்கில் சட்டையை கழற்றிவிட்டு அநாகரீகமாக சுற்றிக் கொண்டிருந்தது, அதன்பின் தனியாளாக ஸ்விம்மிங் பூலில் சோப் போட்டுக் குளித்தது, இதெல்லாம் அட்டென்சன் சீக்கிங் மட்டுமல்ல, அநாகரீகத்தின் உச்சம்கூட! ஸ்விம்மிங் பூலில் எவனாவது சோப் போட்டுக் குளிப்பானா? இந்த ஆள் சோப் போட்டு குளித்ததோடு மட்டுமல்லாது, உடல் முழுவதும் சோப் நுரையோடு எழுந்து வந்து கேமரா முன்னால் டான்ஸ் ஆடியபடி ரீல்ஸ் பண்ணிக் கொண்டிருந்தான். இந்தாள் இப்படித்தான் செய்வான் என்று தெரிந்தும் இவனையெல்லாம், மீண்டும் உள்ளே விட்ட பிக்பாஸ் டீமைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்!
இந்த லட்சணத்தில், ’பேண்டை சரியாகப் போடு’ என்று சொன்ன வினோத்துடன் மியூட் செய்யும் அளவுக்கான வார்த்தைகளோடு, சண்டைக்கு வேறு போனான் இந்தாள். ’ஒரு ஹீரோ ஆகப்போகிற என்னைப் போய் கடல் ஆமை என்று சொல்கிறார் வினோத்’ என்று வினோத் ஒரு தடவை சொன்னதை பல தடவைகள் சொல்லிக் காண்பித்து வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
அடுத்து, போட்டியாளர்கள் ஆறு பேரையும் கன்ஃபெஷன் அறைக்குள் அழைத்து, ’என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. கொடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், நீங்கள்தான் பணத்தை சேகரிப்பதாகத் தெரியவில்லை. சரி, ஒரு எளிமையான டாஸ்க் கொடுக்கிறேன். அதைச் செய்தால் மூன்று லட்சம் தருகிறேன். இப்போது வீட்டுக்குள் கெமி வருவார். அவரை மற்ற விருந்தினர்களின் கண்ணில் படாமல் எவ்வளவு நேரம் நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்று பார்ப்போம்’ என்று ஒரு டாஸ்க் கொடுத்தார்.
போட்டியாளர்கள், விருந்தினர்களின் கவனத்தை மிக எளிதாகத் திசை திருப்பிவிட்டு கெமியை வீட்டுக்குள் மறைத்து வைத்தனர். பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வது, அவருக்கு உணவு கொடுப்பது உட்பட அனைத்தையும் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு மிகச்சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார் கெமி. 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரை மறைத்து வைப்பதில் வெற்றி பெற்றதால் பணப்பெட்டியில் 3 லட்சம் கூடியது. கெமி இடத்தில் பாருவோ, வியானாவோ இருந்திருந்தால் கத்திக் கூச்சல்போட்டு போட்டியாளர்கள் பெட்டியில் பணம் சேராமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று நமக்குத் தோன்றியது என்னமோ உண்மைதான்!
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரச்சினையைத் தூக்கிக் கொண்டு அலைவது போல, சாண்ட்ரா, ரம்யாவை பாம்பு என்று குறிப்பிட்டதை மறக்க முடியாமல், ரம்யா அதையே திரும்பத் திரும்ப எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். இதன் பிறகுதான் சாண்ட்ராவுக்கு இந்த விளையாட்டில் இருக்கும் சிக்கலே புரிந்திருக்கும்.
ரம்யாவை தனியாக அழைத்துக் கொண்டு போய் சமாதானப்படுத்த முயற்சி செய்தார் சாண்ட்ரா. ஒருவரைக் கட்டிப்பிடித்து அழுது, ஆறுதல் பெற்றுக் கொண்டு, அடுத்த ஐந்து நிமிடத்திலேயே முதுகுக்குப் பின்னால் போய், ’அவளை நம்பவே கூடாது அவள் ஒரு பாம்பு மாதிரி’ என்று சொன்னதற்கு எப்படி முட்டுக் கொடுக்க முடியும்? ஏதேதோ முயற்சித்தார். ஆனாலும், ரம்யா ’உன்னை மாதிரி ஒரு நடிப்புக்காரியை நான் பார்த்ததே இல்லை. இப்போதும் அதைத்தான் செய்கிறாய்’ என்று திட்டி விட்டு எழுந்து போய்விட்டார்.
நொந்து போன சாண்ட்ராவிடம், விக்ரம் வந்து என்னவாயிற்று என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் விழித்தார் சாண்ட்ரா. ’கவலைப்படாதே, உள்ளே வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரை டார்கெட் செய்து மனதை உடைக்கப் பார்க்கிறார்கள். உனக்கும் அது நடக்கும். தைரியமாக இரு!’ என்று ஆறுதல் சொன்னார் விக்ரம். இந்த ஆறுதல் எல்லாம் சாண்ட்ராவுக்குப் பொருந்தாது என்று பாவம், விக்ரமுக்கு தெரியவில்லை!
ரம்யாவும், வியானாவும் சேர்ந்து திவ்யாவை அழைத்து உட்கார வைத்துக் கொண்டு, திவ்யாவுடன் கூடவே இருந்துகொண்டு சாண்ட்ரா அவருக்குச் செய்த திருவிளையாடல்களை விளக்கினார்கள். வெளியுலக விஷயங்களை சொல்லக் கூடாது என்ற விதி இருந்ததால், பாதியை விழுங்கியபடி திக்கித் திணறித்தான் சில விஷயங்களை சொன்னார்கள். குறிப்பாக, பிரஜினோடு திவ்யா பழகியதால், சாண்ட்ராவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் அரைகுறையாகப் புரிய வைத்து விட்டார்கள். இதில், செம கடுப்பானார் திவ்யா. அடுத்து வரும் நாட்களில் அதை மனதில் வைத்துக்கொண்டு விளையாடப் போகிறாரா அல்லது போனது போகட்டும் என்று விடப் போகிறாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
வியானாவால் விக்ரம் மற்றும் அரோரா, ரம்யாவால் சாண்ட்ரா, பிரவீனால் வினோத், இப்போது இந்த விசயத்தில் திவ்யா என பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் எல்லாமே ஓரளவுக்கு சரிதான் என்றாலும், இந்த நிலை வரை வந்துவிட்டவர்களின் ஸ்ட்ரெஸ்ஸை கருத்தில் கொண்டு, தவறுகளை மன்னித்து, அதையெல்லாம் வெளியே வந்து பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு, இன்னும் மேடை வரை அவர்கள் செல்ல ஊக்கப்படுத்துவதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பாக இருக்க முடியும்! அதை, இந்த சீசனில் யாரும் செய்வதாகக் காணோம்! எல்லோரும் வன்மத்தோடுதான் திரிகிறார்கள்.
அடுத்து, எல்பிடபிள்யூ எனும் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் விளம்பரத்திற்காக அந்த தொடரின் ஹீரோ விக்ராந்த், அந்தக் குழுவோடு உள்ளே வந்துவிட்டுப் போனார். அவரும் பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டிக்கான, கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மொத்தமாக பணப்பெட்டியில் 18 லட்சத்து 500 ரூபாய் இதுவரை சேர்ந்திருந்தது.
இதோடு, இன்றைய எபிசோடு முடிந்து விட்டாலும், 24*7 காட்சிகளில் வேறு சில விஷயங்களும் நடந்திருப்பதைக் காண முடிந்தது. ஒன்று, வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்ற தகவல்! அடுத்து, அதற்கு அவரின் மனதைத் தயார் செய்தது அரோரா என்று சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் தகவல்! வினோத்துக்கு, சமூக வலைத்தளங்களில் அதிக ஆதரவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நூறு நாட்கள், கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றன. ஆனால், எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், தன் தலைக்கனம், பொறுமையின்மை போன்ற குணங்களில் எந்த மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் போகும் ஒரே நபர் வினோத்துதான். அந்த வகையில், அவர் கோப்பைக்குத் தகுதியானவர் இல்லை என்றுதான் நாம் கருத வழியுண்டு. அதனால், பணப்பெட்டியை அவர் எடுத்துக்கொண்டு போனது புத்திசாலித்தனமான முடிவாகத்தான் தோன்றுகிறது. அவர் இதைச் செய்ய அரோராதான் காரணமா என்பதை இன்றைய எபிஸோடைப் பார்த்துவிட்டுப் பேசுவோம்!