வியானா செய்த காரியத்தினால் இரண்டு நாட்களாக மூட் அவுட்டில் அலைந்து கொண்டிருந்த விக்ரம், இன்று சற்றுத் தெளிந்து, ’இந்தப் பெண்ணுக்குத் தமிழே சரியாகத் தெரியாது. எங்கேயோ யாரோ சொல்லிக் கொடுத்து இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்பதைக் கணித்தவுடன் கொஞ்சம் தைரியமாக உணர்ந்தார்.
அடுத்து, பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க் நடந்தது. கார்டனில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தின் மீது, பசை பூசப்பட்ட ஓர் கோட்டை அணிந்து கொண்டு உருண்டு புரண்டு பணத்தைச் சேகரிக்க வேண்டுமாம். ஆளாளுக்கு அவர்களால் முடிந்ததைச் சேகரித்துக் கொண்டார்கள்.
வியானா பேசிக் கொண்டிருக்கும்போது, வினோத்தை பெரியண்ணன் என்றும் திவாகரை சின்னண்ணன் என்றும் சொன்னதற்கு, வினோத் குறுக்கிட்டு, ‘இந்தாள் உங்க அம்மாவுக்கே அண்ணன் மாதிரி இருக்கிறான். அவனை விட நான் பெரியவன் மாதிரி தெரிகிறதா உனக்கு?’ என்று கேட்டதும். வியானா, சரி, வினோத் சின்னண்ணன் என்றும் தர்பூசணி பெரியண்ணன் என்றும் மாற்றிக் கொண்டார். வயதை வைத்து திவாகரை இப்படிக் கேலி செய்யும் இந்த வினோத்துதான், சற்று நேரத்துக்கு முன்னால், வினோத்துக்கு 45 வயதாகிறது என்ற விசயத்தை வெளிப்படுத்திய திவாகரை போட்டு வறுத்துக் கொண்டு இருந்தார். பெண்கள்தான் வயதை வெளியே காட்டிக் கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வினோத்துக்கு என்ன வந்தது? 45 வயது ஆவதை ஒப்புக்கொள்வதில் அப்படி என்ன அவமானமாம்?
கடந்த சில நாட்களாக தலைக்கனத்தோடு சுற்றிக் கொண்டிருக்கும் வினோத், இப்போது தர்பூசணி உள்ளே வந்ததால் அவரையும் வழக்கம் போல கலாய்ப்பதாக நினைத்துக்கொண்டு கொஞ்சமும் மதிக்காமல் கேலி செய்து கொண்டு இருந்தார். அந்த கேலியில் பழைய இயல்பு இல்லை, மாறாக தர்பூசணியிடம் இருக்கும் அதே ’நான் யார் தெரியுமா?’ என்ற திமிர்தான் இருந்தது. இது வினோத்துக்கு நல்லதல்ல.
இந்தத் தர்பூசணியும், வெளியே போய் வந்ததில் கொஞ்சமும் திருந்தியதாகத் தெரியவில்லை. வியானாக்குட்டி, வியானாக்குட்டி என்று வியானாவைச் சுற்றிச் சுற்றி வருவது, அரோராவிடமும், திவ்யாவிடமும் போய் தேவையே இல்லாமல் வழிவது என அருவருப்பாக நடந்துகொண்டிருக்கிறார்.
அடுத்து, ரம்யா, அப்சரா ஆகிய இருவரும் உள்ளே வந்தனர். இதனால், விருந்தினர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்தது. அனைவரையும் அழைத்து ஆலமரத்தடியில் உட்கார வைத்துக் கொண்டு, விருந்தினர்கள் அத்தனை பேரையும், உள்ளிருக்கும் போட்டியாளர்களை விமர்சிக்கச் சொன்னார்கள். கேட்கப்பட்ட கேள்வி, ’தகுதி இல்லாமலேயே இந்த டாப் 6 என்ற இடத்திற்குள் வந்திருப்பது யார்?’. ஒவ்வொருவரும் இரண்டிரண்டு நபர்களைச் சொல்லி விட்டு அமர்ந்தார்கள். அப்சரா, பிரவீன் காந்தியைத் தவிர மற்றவர்கள் சொன்னதில் எந்த நியாயமும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அத்தனை பேரும், ’எங்களை வெளியே தள்ளிவிட்டீர்கள் அல்லவா? உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்! உங்களுக்கு இந்த இடத்துக்கு வர கொஞ்சமும் தகுதியில்லை! எப்படியோ அதிர்ஷ்டத்தில் இதுவரை வந்துவிட்டீர்கள்’ என்பது போலவே கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் வெளியே போனதற்கு உள்ளிருக்கும் இப்போதய போட்டியாளர்கள் எப்படிக் காரணமாக இருக்க முடியும், என்ற சிந்தனையே அவர்களிடம் இல்லை!
குறிப்பாக, வியானா பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாம் அப்பட்டமான வயிற்றெரிச்சலின், வன்மத்தின் வெளிப்பாடு! திவாகர் கருத்துச் சொல்ல எழுந்த போது, கேட்கப்பட்ட கேள்வியை மறந்து விட்டு, என்னால்தான் இந்த பிக்பாஸ் சீசனே இவ்வளவு தூரம் வெற்றி அடைந்திருக்கிறது என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் கேட்டுக் கடுப்பான தற்போதைய போட்டியாளர்கள், அத்தனை பேரும் தனியாக பெட்ரூமுக்குள் உட்கார்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து பணப்பெட்டிக்கான இன்னொரு டாஸ்க் நடந்தது. மூன்று சிறிய கேம்களை, மூன்று பேர் கொண்ட குழுவாக விளையாட வேண்டும். தற்போதைய போட்டியாளர்கள் வென்றால், பணப்பெட்டியில் பணம் அதிகரிக்கும், பழைய போட்டியாளர்கள் வென்றால், அது கிடையாது என்றும் சொல்லப்பட்டது. பழைய போட்டியாளர்களே வென்றார்கள்!