வெளியில் இருந்து வந்ததனால் தம்மிடம் ஏதோ எக்ஸ்ட்ரா பவர் இருப்பது போல கற்பனையில் உலவிக் கொண்டிருக்கும் வியானா, கிச்சனில் தனியாக, தன்னிச்சையாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ’ஏன் மற்றவர்கள் எல்லாம் வேலை பார்க்க மாட்டார்களாமா?’ என்று அவருக்குத் திடீரென தோன்றியிருக்கும் போலிருக்கிறது. அதிகாரமாக வெளியே போய், பீன் பேக்கில் வானத்தைப் பார்த்து மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்த சாண்ட்ரா உள்ளிட்ட மற்றவர்களிடம் வந்து,
‘வாங்க சாண்ட்ரா, போய் சமையல் செய்யலாம்’ என்று கூப்பிட,
‘சமையலை நானும், திவ்யாவும் பார்த்துக் கொள்கிறோம். நீ போய் பாத்திரம் கழுவு’ என்று பதில் சொன்னார் சாண்ட்ரா.
’என்னைப் பாத்திரம் கழுவ வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் என்ன வீட்டுத்தலயா?’
’அப்படியென்றல் நீ யார், என்னை சமையல் செய்யச் சொல்வதற்கு? போ, போய் கக்கூஸைக் கழுவு’
என்று சாண்ட்ரா வியானாவுக்குப் புரியும் வகையில், லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து அனுப்பி வைத்தார். கடுப்பான வியானா, வீட்டுக்குள் போய் திவ்யாவிடம், ‘பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம் போலிருக்கிறது, இங்கே ஒரே டாக்ஸிக்காக இருக்கிறது’ என்று புலம்பிவிட்டு, சாண்ட்ராவைப் பற்றி புரணி பேசிக்கொண்டிருந்தார்.
வியானாவைத் தொடர்ந்து இன்று, பிரவீன் காந்தியும், தர்பூசணி நாயகனும் வீட்டுக்குள் வந்தார்கள். தர்பூசணி வாயைத் திறந்ததுமே, ’அடப்பாவிகளா, பாரு இல்லாமல் ஒரு நாள்தானே கழிந்திருக்கிறது. அதற்குள்ளாக இன்னொரு டிக்கெட்டை உள்ளே கொண்டு வந்து போட்டு விட்டார்களே, எங்கள் காதுகளுக்கு 2 நாட்கள் கூடவா ஓய்வு கொடுக்கக்கூடாது? ’ என்றுதான் நமக்குத் தோன்றியது. காந்தி, அவரது குணவார்ப்பின்படி வாய் திறக்காமல் சுற்றிக்கொண்டிருக்க, தர்பூசணியோ திறந்த வாயை மூடவில்லை. அத்தனையும் தற்பெருமைதான்.
’நான் இருந்தேன் அல்லவா? 43 நாள். அந்த 43 நாளும் எல்லாம் நான்தான். ப்ரோமோ, எபிசோட், வைரல் கன்டென்ட் எல்லாமே நான்தான். நானும், வினோத் அண்ணாவும் சேர்ந்து இருக்கக்கூடிய காட்சிகள் எல்லாம் மெய்யழகன் காம்போதான், அரவிந்த் சாமியை விட என்னைதான் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே… இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம்தான் லைவ் டெலிகாஸ்ட்டில் ஆடியன்ஸ் மிக அதிகமாக இருந்திருக்கிறார்களாம். அதற்குக் காரணமே நான்தான் என்று ஊர் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது’ என்று சொன்னதும் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வியானா ஒருபடி மேலேபோய், "உனக்கெல்லாம் வெளில நடந்தத சொல்லக்கூடாதுனு எதும் சொல்லி அனுப்பலயா?" என்று கேட்டே விட்டார். பிக்பாஸும் கடுப்பாகி, ’வாட்டர்மெலன், வெளியுலக விஷயங்களை வீட்டுக்குள் பேசினால், கதவைத் திறந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவேன்’ என்ற பொருளில் எச்சரித்த பிறகுதான் தர்பூசணி கொஞ்சம் வாயை மூடிக் கொண்டார்.
அடுத்து, பந்துகளை ஊதி, பணம் சேகரிக்கும் ஒரு பணப்பெட்டி டாஸ்க் நடந்தது. சுமாராக விளையாண்டார்கள்.
அடுத்து, வெளியே போகும் போது மிகவும் செண்டிமெண்டாக அழுதுகொண்டே போன பிரவீன், நான்காவது ஆளாக மிக ஆவலோடு வீட்டுக்குள் வந்தார். வந்ததும், வியானா, விக்ரமைப் போட்டுப் படுத்தியதைக் குறிப்பிட்டுவிட்டு ’அவ்வளவு வன்மம் எதற்கு, கொஞ்சம் நிதானமாகவே சொல்லியிருக்கலாமே’ என்று சொன்னார். பரவாயில்லையே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவரும் அதே குண்டைத்தான் தூக்கிப்போட்டார்,
‘உள்ளே இருக்கும் அத்தனை பேரும், மனிதத் தன்மையை இழந்துவிட்டு, வஞ்சகர்களாக மாறி உட்கார்ந்திருக்கிறீர்களே… இத்தனை நாட்கள் நீங்கள் உள்ளே இருந்து என்ன பயன்?’ என்று சொல்லி அத்தனை பேரையும் கடுப்பேற்றிவிட்டார். நமக்கென்னவோ உள்ளே இருப்பவர்களைப் பார்த்து இவர்களுக்கெல்லாம் வயிற்றெரிச்சல் மாதிரிதான் தோன்றுகிறது. இந்த கெஸ்ட்ஸ் வீக்கில், இதற்கு முந்தைய சீசன்களில் உள்ளே வந்தவர்கள் எல்லோரும் மிகவும் ஸ்போர்டிவாக நடந்துகொண்டு மற்றவர்களை ஊக்கப்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம், இப்படிக் கேவலமாக நடந்து கொண்டதைப்போல நினைவில்லை. ஆனால், நல்லவேளையாக அவரை லெஃப்டில் டீல் செய்து வாயைப் பொத்திக்கொள்ள வைத்தார் வினோத்!
அடுத்து ஒரு பணப்பெட்டி டாஸ்க் நடந்தது. அதில் சபரி ஏதோ சொல்ல, வினோத் அதற்கு வேறேதோ அர்த்தம் செய்துகொண்டு, சபரியிடம் வம்புக்குப் போனார். சபரியும், அரோராவும் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும், அது வினோத்திடம் எடுபடவில்லை. இந்த வீட்டுக்குள் வந்தவர்களில், ஒரு துளியளவும், தன் குணத்தில் மாறாத ஒரே நபர் வினோத் மட்டும்தான்! நாளாக நாளாக, நாம் இத்தனை நாட்கள் உள்ளே இருக்கிறோமே, நாம்தான் மிகச்சிறந்த போட்டியாளர் போலிருக்கிறது என்று வினோத்துக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை உருவாகி, அது தலைக்கனமாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. தர்பூசணி, பிரவீன், சபரி, அரோரா ஆகியோரிடம் இன்று வினோத் நடந்துகொண்டது, இந்தாள் கொஞ்சமும் திருந்த வாய்ப்பில்லை எனும் எண்ணத்தைத்தான் நமக்கு ஏற்படுத்தியது.
இதுவரைக்குமான டாஸ்க்குகளால், இதுவரை பணப்பெட்டியில் 3 லட்சத்து 35 ஆயிரம் சேர்ந்திருந்தது. அதனால், ’பணப்பெட்டி டாஸ்க் இப்போதிருந்து நடைமுறைக்கு வருகிறது, யார் வேண்டுமானாலும் எந்த நேரமும் அதை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்’ என்று சொன்னார் பிக்பாஸ்! அரோரா, அல்லது விக்ரம் எடுத்துக்கொண்டு போக வாய்ப்புகள் அதிகம், பார்ப்போம்!