விக்ரமும், அரோராவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சு சபரியைப் பற்றியிருந்தது. இரண்டு பேர் உட்கார்ந்து மூன்றாவது ஆளைப் பற்றி பேசினாலே, அது வன்மத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்பது இந்த வீட்டின் எழுதப்படாத விதி! ஆனால், அதற்கு மாறாக இருவரும் சபரியை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
விக்ரம் சொல்லும்போது, ’சபரி இந்த வீட்டின் நல்லது கெட்டது அனைத்திலும் பங்குபெற்று, அனைத்தையும் தாண்டி வந்த பிறகும், அவனது நல்ல குணங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், அவற்றைத் தக்க வைத்திருக்கிறான். அவன் கோப்பையை வெல்லத் தகுதியானவன்’ என்று சொன்னார். அரோராவும் அதை ஆமோதிப்பதை போல, ’நான் பெற்ற ஃபினாலே டிக்கெட்டுக்கு தகுதியானவன் அவன்தான். சாண்ட்ராவுக்காக அவன் காரிலிருந்து இறங்கவில்லை என்றால், என்னிடமிருக்கும் இந்த டிக்கெட் அவனிடம்தான் இருந்திருக்கும். அதை விடவும் முக்கியமாக, அவன் இதை ஒரு இடத்தில் கூட சொல்லிக் காண்பிக்கவில்லை. அதுதான் அவனது நிஜமான பெருந்தன்மையைக் காட்டுகிறது’ இன்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார். சரியான கருத்துகள்தான். ஏற்கலாம்!
அடுத்து, யார் கோப்பையை வெல்வார்கள் என்ற பேச்சு வந்தபோது, விக்ரம், சபரி அல்லது சாண்ட்ரா வெல்லக்கூடும் என்று சொல்ல அதை அரோராவும் ஆமோதித்தார். இந்த இடத்தில், இரண்டு பேரும் கோட்டை விட்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவர் சபரி என்பதை ஏற்கலாம். ஆனால், சாண்ட்ராவைச் சுற்றி பின்னப்பட்ட வெற்று பில்டப்புகள் மற்றும் ஹோஸ்டின் சப்போர்ட் போன்றன அவர்களின் மனதைக் குழப்பி வைத்திருக்கின்றன என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளமுடியும். அந்த இடத்துக்கெல்லாம் சாண்ட்ரா கொஞ்சமும் தகுதி இல்லாதவர் என்பது நமது கருத்து.
அந்நேரத்தில், வெளியே, யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு சில டாஸ்க்குகளில் பயன்படுத்துவதற்காகத் தரப்படும் பேனாவை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு, ஒரு பேப்பரில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கானா வினோத். அதைப் பார்த்த பிக்பாஸ் அதை மற்ற போட்டியாளர்களிடம் காமெடியாக போட்டுக் கொடுத்து, அவருக்குத் தெரியாமல் பேனாவை எடுத்து வந்து ஸ்டோர் ரூமில் வைக்கச் சொன்னார். இந்த சீசனில் அவர் சொன்னதை எவன் இந்த வீட்டில் முழுமையாகக் கேட்டிருக்கிறான்? ’அவருக்குத் தெரியாமல் பேனாவை எடுத்து வாருங்கள்’ என்று சொன்னால், போனதுமே, ’எங்கம்மா சத்தியமாக பிக்பாஸ்தான் உன்னிடமிருந்து பேனாவை வாங்கி வைக்க சொன்னார். தயவு செய்து தந்துவிடு’ அவருடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள் விக்ரமும், சபரியும்.
ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதால், இந்த வாரம் அரோராவைத் தவிர அனைவரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். அதனால் நாமினேஷனுக்கு பதிலாக ஒவ்வொருவரும் இரண்டு பேரைக் காப்பாற்றுவதற்காக வாக்களிக்கலாம் முடியும் என்றும், அப்படி செய்ய வேண்டுமானால் நபர் ஒருவருக்கு ஒரு பச்சை மிளகாய் வீதம் சாப்பிட வேண்டும் என்றும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, கன்ஃபெஷன் ரூமில் உட்கார வைத்துக் கொண்டு சொன்னார் பிக்பாஸ்.
சொல்லி வைத்தது போல, அனைவருமே சாண்ட்ராவையும், சபரியையும் தேர்ந்தெடுத்தார்கள். இருவருக்காகவும் ஒவ்வொருவரும் இரண்டு மிளகாய்களை சாப்பிட்டுவிட்டு எரிச்சல் தாங்க முடியாமல் வெளியே ஓடி வந்தார்கள். வினோத் மட்டும் ஒருவர் போதும் என்று ஓடிவந்துவிட்டார். விக்ரம் மற்றும் அரோராவுக்கு இருக்கும் அதே மனநிலைதான் இந்த வீட்டில் இப்போது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பச்சை மிளகாய் தின்ற எரிச்சல் போதாது என்று, ’உங்களின் பெருந்தன்மையை சோதித்துப் பார்க்கத்தான் இந்த டாஸ்க்கைக் கொடுத்தேன். உண்மையில் அரோராவைத் தவிர அத்தனை பேரும் நாமினேஷனில்தான் இருக்கிறீர்கள்’ என்று ஒரு குண்டை தூக்கி போட்டார் பிக்பாஸ். அத்தனை பேரும் கடுப்பானார்கள்.
அடுத்து, சிறப்பு விருந்தாளியாக நமது ஜெனிபாப்பாவான வியானா உள்ளே வந்தார். ஆலமரத்தடியில் அனைவரையும் உட்கார வைத்துக்கொண்டு, ‘நான் இன்று இரவு அல்லது நாளைக் காலை வெளியே போகும் போது இரண்டு பேரை கூட்டிக்கொண்டு செல்லுவேன். அவர்கள் யார் என்பதை நீங்களே பேசி முடிவு செய்து சொல்லுங்கள்’ என்று ஒரு குழப்பத்தை ஆரம்பித்தார். உள்ளே இருக்கும் ஆட்களைக் குழப்பிவிடும் வகையில் ஏதோ ஒரு டாஸ்க் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால், எதிர்பார்த்தபடி எந்த குழப்பமும் வரவில்லை. முதலில் எழுந்த விக்ரமே, செண்டிமெண்டுக்கு ஆளாகி, இதற்கு மேலும் என்னால் யாரையும் காயப்படுத்தி விளையாட முடியாது. நான் விளையாடியது போதும், நான் எதை நினைத்து வந்தேனோ அந்த நிறைவு பெற்றுவிட்டது, அதனால், நானே போகிறேன்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். திவ்யாவும், ’நான் யாரையும் சொல்ல முடியாது. நீ யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு போ’, என்று டாஸ்க்கை உழப்பி விட்டார்.
யாருக்கும், இதற்கு மேலும் இது போன்ற போட்டுக்கொடுக்கும் டாஸ்க்கை விளையாடும் மனநிலை இல்லை போலிருக்கிறது. கடைசியில் வியானாவே எழுந்து, எல்லோரையும் விமர்சிக்கத் தொடங்கினார். குறிப்பாக, சாண்ட்ராவே எழுந்து, ’போதும், எதுவானாலும் வெளியே போய் சொல்லிக்கொள்! ஏற்கனவே மனம் நொந்து போயிருக்கும் ஒருவரை மேலும் போட்டுக் காயப்படுத்தாதே!’ என்று சொன்ன பிறகும், ’நான் சொல்லத்தான் செய்வேன்’ என்று பிடிவாதமாக விக்ரமைப் போட்டு வறுத்தெடுத்தார்.
அது வியானாவின் கருத்தா, டாஸ்க் மாதிரி ஏதாவது கொடுத்து அனுப்பினார்களா என்று தெரியவில்லை. மற்றவர்களை ஏதோ ஃபார்மாலிட்டிக்குச் சொல்லி விட்டுவிட்டு, விக்ரமை மட்டும் பிடித்து உட்கார வைத்துக் கொண்டு, ’நீ முதலைக் கண்ணீர் வடிக்கிறாய், வக்கிரம் விக்ரம் என்று சொல் உனக்குப் பொருத்தமானதுதான், திவ்யாவை நீ ஃபிராடு என்று சொன்னாயே, நீ தான் உண்மையான ஃபிராடு. நீ ஒரு விஷக்கிருமி’ என்று எக்குத்தப்பாகச் சொல்லி ஏற்கனவே நொந்துபோன நிலையில் இருக்கும் விக்ரமின் மண்டையை மேலும் கழுவி விட்டார். அதனால், விட்டால் வெளியே ஓடிப்போய்விடும் மனநிலைக்கே வந்துவிட்டார் விக்ரம்.
அடுத்து பணப்பெட்டி டாஸ்க்கும் இன்றே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதில் நேரடியாகப் பணத்தை வைக்காமல், இந்த வாரம் நடக்கும் சில டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் விளையாடி, பணத்தைச் சேகரிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. முதலாவதாக, ஒரு காரில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணத்தைத் தேடி எடுத்து சேகரித்தார்கள். அத்தோடு இன்றைய எபிஸோடு நிறைவுக்கு வந்தது.