இன்றைய எபிசோடை பார்ப்பதற்கு உட்கார்ந்தபோதே, ஏதோ அமைதியான ஒரு தியான மண்டபத்துக்கு வந்தமர்ந்ததைப் போன்ற மனநிலை ஏற்பட்டது. இத்தனை வாரங்களாகப் பாரு நம் காதுகளுக்குச் செய்து விட்டுப் போன காரியம் அப்பேர்ப்பட்டது!
’புத்தாண்டுக் குறிக்கோளாக இவர் இந்த முடிவை எடுத்துக்கொண்டால், அது அவரது வளர்ச்சிக்கு உதவும் என்று நீங்கள் நினைக்கும் ஆலோசனையை யாராவது இரண்டு பேருக்கு சொல்லுங்கள்’ என்று, இன்றைய முதல் நேரப்போக்குக் கேள்வியைக் கேட்டார் விஜய் சேதுபதி. வளவளவென்று ஆளாளுக்கு எதை எதையோ சொன்னார்கள். சாண்ட்ரா, ‘சபரி, கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அரோரா நிறைய சினிமாவில் நடிக்க வேண்டும்’ என்று சம்பந்தமில்லாமல் உளறினார். போலவே, விஜய் சேதுபதியும், அவர் பங்குக்கு ஆளாளுக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார். சாண்ட்ராவே தேவலாம் என்பது போலிருந்தன அவை.
சபரியைப் பார்த்து, ’நீங்கள் மிக இனிமையானவர். ஆனால், எல்லோருடைய குட்புக்கிலும் இருக்க ஆசைப்படுகிறீர்கள். அது வேண்டாம்.’ என்றார். அது சிரமம் என்பது வேறு விசயம்! ஆனால், அந்த ஆசையில் என்ன தவறோ தெரியவில்லை.
விக்ரமைப் பார்த்து, ‘நீங்கள், ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டு விளையாடுகிறீர்கள். ஆனால், அதை நீங்களே மீற மாட்டேன் என்கிறீர்கள்’. என்னய்யா கருத்து இது? கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொல்லலாம். அல்லது தவறான கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று சொல்லலாம். ஆனால், ஒருவன் சுய கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பதில் என்ன தவறு?
அடுத்து சாண்ட்ராவைப் பார்த்து, ‘நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், சிறப்பாக இருக்கிறீர்கள். பெர்ஃபார்மன்ஸ் பண்ணும் போது அவ்வளவு நன்றாக இருக்கிறது. அப்படியே கண்டின்யூ பண்ணுங்கள்’. எப்படி நம்ம ஆளோட அட்வைஸ்?!
அடுத்து, ‘அடுத்தவர்களுக்கு நல்ல அறிவுரைகள் சொல்லிவிட்டு அதைத் தான் பின்பற்றாமல் இருக்கும் நபர்கள் யார்?’ என்று இரண்டாவது நேரப்போக்கு கேள்வியைக் கேட்டார். இதில் திவ்யா, விக்ரமுக்கு இடையிலான பிரச்சினை களத்துக்கு வந்தது. அவர்களுக்கிடையேயான தகராறில், இரண்டு பேரின் மீதும் தவறு இருந்தாலும், விக்ரமுக்கு மட்டும் அறிவுரை சொன்னார் சேதுபதி. ‘அப்படியானால் திவ்யா மீது எந்தத் தவறும் இல்லையா?’ என்று மனதுக்குள் தோன்றிய கேள்வியைக் கேட்க முடியாமல், மண்டை குழம்பிக் கொண்டிருந்த விக்ரமை அப்படியே உட்காரச் சொல்லிவிட்டார். வினோத், கில்லர் டாஸ்க்கில், ஒரு திட்டம் போட்டுவிட்டு, குட்டு வெளியானதும் மற்றவர்களின் காலை வாரிவிட்டதையும் குறிப்பிட்டுச் சொன்னார் அரோரா.
மூன்றாவது நேரப்போக்குக் கேள்வியாக, ’யார் இதுவரை வீட்டுக்குள் விளையாடியது போதும் என்று சொல்லி, பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு போகச் சொல்வீர்கள்?’ என்றொரு கேள்வியைக் கேட்டார். அதற்கும் ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொன்னார்கள். விக்ரமின் பெயர் அதிகமாக அடிபட்டது.
அடுத்து, இன்றைய எவிக்சனுக்கு வந்தார். நேற்று ரெட் கார்டில் ரெண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பிறகும் கூட, இந்த வார வழக்கமான எவிக்சனும் நடந்தது. இதில், சுபிக்சா வெளியேற்றப்பட்டார். டாப் 8க்குள் வந்துவிட்டால் போதும், அவர்களின் எவிக்சனின் போது இந்த பிக்பாஸைக் கையில் பிடிக்க முடியாது. ’நீ அப்படி, நீ இப்படி, ஆனை, பூனை, ஐயாம் பிரவுட் ஆஃப் யூ, இந்த சமுதாயத்தின் அடுத்த விடிவெள்ளியே நீதான்’ என்பது போல செண்டிமெண்ட் டயலாக்குகள் பேசித்தான் அனுப்பிவைப்பார். அதுவேதான் சுபிக்கும் நடந்தது.
அடுத்து, விஜய் சேதுபதியே வீட்டுக்குள் சென்று டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வென்ற அரோராவுக்கு ஃபினாலே டிக்கெட்டை கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியேறினார்.