விக்ரம்- திவ்யா கடும் மோதல்! #Biggboss Day 84

நான் ஏன் பேசக்கூடாது? ஸ்கிரீனை எடுத்து விடுவேன் என்று பிக்பாஸ் எனக்கு சொன்னதைச் சொல்லிக் காண்பித்தீர்கள் அல்லவா? அப்படியானால் நானும் சொல்லுவேன்’
Aurora Sinclair and Divya Ganesh
Aurora Sinclair and Divya Ganesh@jiohotstar
Published on

ஒரு மணி நேர ஞாயிற்றுக்கிழமை எபிசோடில், ஹோஸ்ட் நிகழ்ச்சி நடத்துவதைப் பார்க்காமல், வீட்டுக்குள் என்ன நடந்தது என்பதை அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பார்த்தது இதுதான் முதல் முறை!

சனிக்கிழமை எபிசோடுக்கும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கும் நடுவிலேயே ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி வைத்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். விஜய் சேதுபதி வந்ததும், அதை முதலில் பார்க்கச் சொன்னார்.

சென்ற வாரம் உறவினர்கள் வந்து கொடுத்த விமர்சனத்தின்படி, உடனடியாக திருந்திவிட்ட கமரு, திவ்யாவிடம் போய் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ‘உறவினர் சொல் கேட்டு உடனடியாக திருந்தியது யார்?’ என்ற விஜய் சேதுபதியின் சனிக்கிழமை கேள்விக்கு பதிலாக திவ்யாவும் எழுந்து, கமரு மன்னிப்புக் கேட்டதைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அந்த நேரத்தில், அரோரா எழுந்து ’கமருவெல்லாம் அவ்வளவு சீக்கிரம் திருந்துவதற்கு வாய்ப்பில்லை’  என்று அந்த ஸ்பாட்டிலேயே போட்டு உடைத்திருந்தார்.

அதில் காண்டான கமரு, கிடைத்த கேப்பில் அரோராவைப் பிடித்துக் வைத்துக் கொண்டு, போட்டு வறுத்து கொண்டிருந்தார். அவர், ‘சம்பந்தப்பட்ட திவ்யாவே என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, நீ யார் அதைக் கேள்வி கேட்பதற்கு? நான் திருந்தவில்லை என்பதை நீ பார்த்தாயா? துஷார் போனதற்கு  நீ தான் காரணம் என்று சொன்னால் உனக்கு எப்படி இருக்கிறது? அப்படித்தானே எனக்கும் இருக்கும்?’ இதற்கு அரோரா, பதில் சொல்ல முயன்ற போது அவரைப் பதிலே பேச விடாமல் சொன்னதையே திரும்பத் திரும்பச்  சொல்லிக் கொண்டிருந்தார் கமரு. இத்தனைக்கும் சனிக்கிழமை எபிசோடில்தான் ’துஷார் வெளியே போனதற்கும், அரோராவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள், பார்க்க நன்றாக இல்லை’ என்று விஜய் சேதுபதியே தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அது இந்தக் கமருவின் மண்டையில் கொஞ்சம் கூட ஏறவே இல்லை!

Kani
Kani@jiohotstar

கமரு செய்யும் அநியாயம் போதாது என்று, அவருக்கு சப்போர்ட்டாக வினோத்தும் சேர்ந்துகொண்டார். வினோத்துக்கு, அரோராவுடன் இருக்கும் பிரச்சினை வித்தியாசமானது. ’நாம் தடிமாடு மாதிரி இருந்துகொண்டு எதையும் பேசத் தெரியாமல், வளவளவென்று பேசிக் குழப்பி அடித்து பல சந்தர்ப்பங்களில் விஜய் சேதுபதியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோமே, இந்தப் பெண் மட்டும், தெளிவாக இடம் பார்த்து, குறிப்பாக வீக்கெண்டில் அழகாகப்பேசி பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாளே, அதெப்படி நடக்கலாம்?’ என்ற காண்டுதான் அது! அதுவும், வினோத், ‘துஷார் போனதற்கு மட்டுமல்ல! பாரு, கமரு எனும் தூய காதல் ஜோடிகள் பிரியறதுக்கே நீதான் காரணம்’ என்று அரோராவைச் சொன்னதெல்லாம் வேற லெவல்!

மெனக்கெட்டு இதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறாரே, இதைப் பற்றி விஜய் சேதுபதி பேசப்போகிறார் என்று பார்த்தால், மனிதர் அதை எளிதாக ஸ்கிப் செய்துவிட்டு நேரடியாக எலிமினேஷனுக்கு வந்தார். என்ன நேரப்போக்குக் கேள்விகள் எதுவும் இல்லாமல், இவ்வளவு சீக்கிரமாக எலிமினேஷனுக்கு வருகிறாரே என்று நாம் சந்தேகப்பட்டோம். அதற்கேற்பவே, விஜய் சேதுபதி போனதும், நமக்குக் காண்பிக்க, அடுத்து வீட்டுக்குள் ஒரு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது! அதற்கு முன்பாக  எலிமினேஷனில் பார்த்துவிடலாம்!

Kani Evicted
Kani Evicted@jiohotstar

ஒவ்வொருத்தராகக் காப்பாற்றி விட்டு கடைசியில், கனியையும் சாண்ட்ராவையும் உட்கார வைத்துக் கொண்டு, ’இந்த இருவரில் யார் வெளியே போகப் போகிறார்?’ என்றொரு கேள்வியைக் கேட்டார் விஜய் சேதுபதி. பாருவை தவிர ஒட்டுமொத்தமாக அனைவரும் சாண்ட்ராவையே சொன்னார்கள். பாரு மட்டும் கனியைச் சொன்னார். பாரு, அவரது அறிவைப் பயன்படுத்திக் கணித்தெல்லாம் அதைச் சொல்லவில்லை. எப்போதும் போல, அவரது ஆசையைத்தான் சொன்னார். அவர் ஆசைப்பட்டது போலவே கனியின் சீட்டுதான் விஜய் சேதுபதியின் கையில் இருந்தது. அதைப் பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் பெரிய அதிர்ச்சிக்குப் போக, பாரு மட்டும் சாண்ட்ராவைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார். அவர் விரும்பியபடி சாண்ட்ரா வெளியே போகாததற்கோ அல்லது கனி  வெளியேற்றப்பட்டதற்காகவோ அல்ல அந்த ஆனந்தக் கண்ணீர்! பதிலாக, நாம் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருக்கிறோம், நாம் சொன்னது அப்படியே நடக்கிறதே, என்ற எமோஷனல் ஏகாம்பரத்தின் ஆச்சரிய அழுகைதான் அது.

அப்போது திவ்யா, ‘இவள் இப்போது எதற்காக அழுது கொண்டிருக்கிறாள்? இவள் சொல்வது எதையும் நம்பாதே சாண்ட்ரா. உன்னை இன்ஃபுளூயன்ஸ் பண்ணிவிடுவாள், ஜாக்கிரதை’ என்று சாண்ட்ராவிடம், பாருவை வைத்துக்கொண்டே சொன்னார் திவ்யா. அங்கு ஆரம்பித்தது திவ்யாவின் அட்டகாசங்கள்!

அப்படி சொன்னதைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரோடு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். எந்தச் சண்டையாக இருந்தாலும் அதில் கடைசி வார்த்தை தன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாரு, திவ்யாவை முடிந்தவரை கடுப்பேற்றிவிட்டார். இந்தப் பிரச்சனையால் பாரு மேல் ஏற்பட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த திவ்யாவின் வாயில் வந்து விழுந்தார் விக்ரம்!

திவ்யா (சுபியிடம்): ’எத்தனையோ தடவைகள் இந்த வீட்டில் எமோஷனலாக பிரேக் ஆகியிருக்கிறேன். ஆனால் பிக்பாஸின் விதிமுறைகளை மட்டும் மீறியதே இல்லை.’

விக்ரம்:  ’வேறு என்ன வேண்டுமானாலும் சொல் திவ்யா, இதை மட்டும் சொல்லாதே. இந்த வீட்டில் அதிகமாக விதிமுறைகளை மீறியதே நீதான்.’

’பிக்பாஸ் ஸ்கிரீனை பிய்த்து விடுவேன் என்று சொன்னது உங்களிடம்தான்.  என்னிடம் இல்லை’

Vj Paaru
Vj Paaru@jiohotstar

‘இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ஒவ்வொரு வீக்கெண்டிலும் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் வைத்துக் கிழி கிழி என்று கிழிப்பது உங்களைத்தான். நீங்கள் பேசலாமா விதிமுறைகளை பற்றி?’

’அதைப்பற்றி நீங்கள் பேசக்கூடாது’

’நான் ஏன் பேசக்கூடாது? ஸ்கிரீனை எடுத்து விடுவேன் என்று பிக்பாஸ் எனக்கு சொன்னதைச் சொல்லிக் காண்பித்தீர்கள் அல்லவா? அப்படியானால் நானும் சொல்லுவேன்’

இப்படித் தொடங்கிய இந்த வாக்குவாதம் நீண்ட நேரமாக போய்க் கொண்டே இருந்தது. இரண்டு பேரும் ஒருத்தர் வார்த்தையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு சண்டையைப் பெரிதாக்கிக் கொண்டே போனார்கள். சத்தத்தை உயர்த்தினால், ’சத்தமாக பேசாதீர்கள்’ என்று புது பாயிண்டை சேர்த்துக்கொள்வது, கையை லேசாக உயர்த்திப் பேசினால் ’கையை உயர்த்திப் பேசாதீர்கள்’ என்று சேர்த்துக்கொள்வது என்று திவ்யா விக்ரமைப் பேசவே விடாமல் டார்ச்சர் செய்து கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்! ஒரு கட்டத்தில் சமாதானம் செய்ய வந்த கமரு, வினோத், சபரி ஆகியோர் மீதும் விழுந்து பிறாண்டி வைத்தார். பாதிக்கப்பட்ட விக்ரமை விட்டுவிட்டு, கிறுக்குத்தனமாகப் பேசிக்கொண்டிருந்த திவ்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தது மொத்த வீடும்! அத்தனைக்கும் ஆரம்பப்புள்ளியான பாரு, இதில் தலையிடாமல் எல்லாவற்றையும் தூரமாக சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தனிக் கதை!

Puthuyugam
www.puthuyugam.com