காலையில் எழுந்ததும், கனி வெளியேறிய துக்கத்தில் விக்ரம் கேமராவின் முன்னால் நின்று புலம்பிக் கொண்டிருந்தார். ’நியாயமாகப் பேசாதவர்கள், நடந்து கொள்ளாதவர்கள் எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள். ஆனால், நேர்மையாகவும், உண்மையாகவும், ஆர்வமாகவும் விளையாடிய கனி வெளியே போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், ஒருவரின் மனது புண்படாதவாறு நடந்துகொள்வதும் அவ்வளவு பெரிய தவறா? அவர்களுக்கு இங்கே இடம் கிடையாதா? இதை எப்படி எடுத்துக் கொள்வது? ’ என்பது அவரது புலம்பல்.
அவர் புலம்புவது பார்வையாளர்களான நம்மைப் பார்த்துதான். ஆனால், அவருக்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை. ஒன்று, இந்த நிகழ்ச்சியின் நோக்கம் பண்பானவர்களையும், அன்பானவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு வெற்றிக்கோப்பையை அளிப்பது அல்ல. மனித இயல்புகளான நல்லது, கெட்டது இரண்டையும் உண்மையாக வெளிப்படுத்தி, செய்த தவறுகளை உணர்ந்து, அவற்றைத் திருத்திக் கொண்டு அதிலிருந்து தம்மை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கும் சாதாரண மனிதர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் ஆதாரம்! அதனால், ஏற்கனவே நல்லவர்களாகவும், கண்ணியமாகவும் இருப்பவர்களுக்கு இங்கே இடம் இல்லை! இரண்டாவது, இந்த வெளியேற்றம் எல்லாம் முழுக்கவும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்று நம்புவதே கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. மக்கள் ஓட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், நிகழ்ச்சியின் சுவாரசியம் கருதி அதில் முன்பின்னாக மாற்றம் செய்வது, உழப்பி விடுவதெல்லாம் சாதாரணம்தான் என்பதை நாம் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம்.
இந்த கமரு, பாருவுடனான ’பேட் டச்’ விவகாரத்தை, நூற்றியோராவது தடவையாக வீட்டுக்குள் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார். இதைப் பல வாரங்களாக வீட்டில் இருப்பவர்களும், விஜய் சேதுபதியும், நாமும் கூட பேசி ஓய்ந்து விட்டோம். ஆனால், இன்னும் அவருக்கு இதில் ஒரு முடிவு கிடைத்த பாடில்லை போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாருவின் ஸ்டேட்மென்ட், ‘நான் அப்படிச் சொன்னேன்தான். எனக்கு, அந்த சமயத்தில் அப்படி தோன்றியது, அது தவறுதான்! அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்பது. இதைப் பல தடவைகள் அவர் சொல்லிவிட்டார். ஆனால், ‘அந்த சமயத்தில் அப்படித் தோன்றியது’ என்ற வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு, ’அப்படியானால், அந்த சமயத்தில் நான் தவறு செய்ததாக அர்த்தம் வருகிறது, ஆகவே அது அபாண்டமான குற்றச்சாட்டு, மன்னிப்புக் கேட்பதைக்கூட பாரு டிரிக்கியாக செய்கிறார்’ என்பது கமருவின் ஆதங்கம். ’அப்படித் தோன்றியதே என் தவறுதான்’ என்று பாரு ஒப்புக்கொண்ட பிறகும், அது கமருக்கு பிடிபடவே இல்லை. அதனால், அவர் இதைச் சொல்லியே பாருவை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார். இது கமருவின் புரிதல் கோளாறுதான் என்றாலும், பாருவுக்கு இந்தத் தொந்தரவு தேவைதான் என்பது நமது கருத்து!
அடுத்து, போட்டியாளர்களில் யாரெல்லாம் பிஆர் வைத்து வேலை செய்கிறார்கள் என்ற கேள்வியைக் கிளப்பிவிட்டார் பிக்பாஸ்! விக்ரம், பாரு, கமரு போன்ற பலருக்கும், ஒவ்வொரு வகையான பிஆர் வேலைகள் வெளியே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விக்ரமுக்கு அவரது டீம் வேலை செய்கிறது. பாருவும், கமருவும், திவ்யாவும் காசு கொடுத்து பிஆர் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆனால், பிஆர் வைக்கிற அளவுக்கெல்லாம் என்னிடம் காசு இல்லை என்று கமரு, திவ்யா, சாண்ட்ரா போன்றோரெல்லாம் பிஆர் என்றால் என்னவென்றே தெரியாது என்பது போல டிராமா செய்துகொண்டிருந்தார்கள். வினோத், சுபியின் மீனவ சமுதாய சப்போர்ட்டை, பிஆருடன் ஒப்பிட்டு உழப்பிவிட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்து, ஆட்டம் இறுதி வாரங்களுக்குள் நுழைந்து விட்டதால் பெஸ்ட், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் வீட்டு தல தேர்வுகள் போன்ற நிகழ்வுகள் இனி கிடையாது என்று சொல்லி, இந்த வார எவிக்சனுக்காக ஓபன் நாமினேசன் செய்யச் சொன்னார் பிக்பாஸ்! விக்ரம் வழக்கத்துக்கு மாறாக, ‘மேனியாக்’, ’கோழை’, ’ஃபிராட்’ போன்ற கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திவ்யாவை நாமினேட் செய்தார். நேற்று அவர் வாங்கிய அடி அப்படியாகப்பட்டது! அதற்கெல்லாம் திவ்யா தகுதியானவர்தான் என்றாலும், விக்ரம் இப்படிச் செய்வதால் அவருடைய கண்ணியத்தைத்தான் இழக்கிறார். மற்றவர்கள் வழக்கம் போல ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேட் செய்து கொண்டார்கள். இதனால் அத்தனை பேருமே எவிக்சனுக்குள் வந்தார்கள்.
அடுத்து ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் மரத்தானையும் தொடங்கி வைத்தார்கள். அனைவரையும் ஒரு கம்பத்தில் நிற்க வைத்து, யார் கடைசி வரை தாக்குப் பிடிக்கிறார்கள் என்ற ஆட்டம் நடந்தது. ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு சிலர் இறங்கிவிட, இதில் யார் வென்றார் என்பது நாளைதான் தெரிய வரும்!