Ticket To Finale மரத்தானின் முதல் டாஸ்க்கான ’கட்டை மேல் கால் கடுக்க நிற்கும்’ டாஸ்க்கில், நேரம் செல்லச்செல்ல ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தார்கள். மூன்று மணி நேரத்தைத் தாண்டிய பொழுது, சுபி, கமரு, திவ்யா, அரோரா ஆகிய நால்வர் மடுட்மே நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கடுமையான விளையாட்டுதான் இது. அடுத்து, கொஞ்ச நேரத்தில் திவ்யா இறங்கிவிட, கமரு கால் மாற்றி வைத்து அவுட்டானார். யாரும் எதிர்பாராத வகையில் சுபியும், அரோராவும் ஆறு மணி நேரத்துக்கும் ஆக நின்று கொண்டிருந்தார்கள்.
அரோரா ஒரு கட்டத்தில், நிற்க முடியாமல் நகைச்சுவையாக புலம்பிக் கொண்டிருந்தார்.
’ஒரு பக்கம் கொசு கடிக்குது, இன்னொரு பக்கம் குளுருது, முதுகு வலிக்குது, தண்ணீர் தாகமெடுக்குது, ஒன்பாத்ரூம் வருது, என்னால முடியல… ஆனா, இந்த சுபி கில்லி மாதிரி நின்னுகிட்டு இருக்காளே?’
அதற்கு விக்ரம், ‘இப்படியே போனா சுபியெல்லாம் 12 மணி நேரம் நிப்பா போலருக்குது அரோரா, என்ன ஒரு ஸ்டாமினா அவளுக்கு!’
’12 மணி நேரமா? அப்படியெல்லாம் ஆனா, தமிழ் பிக்பாஸில் இரண்டு பேர் பாடியாகிவிட்டார்கள் என்று நாளைக்கு டிவி நியூஸ்தான் வரும்! Ticket To Finale வாங்கினீங்களே, கையோட மேல டிக்கெட் எடுத்துட்டீங்களேம்மா அப்படின்னு நீங்க எல்லாரும் உக்காந்து அழுதுகிட்டு இருப்பீங்க!’ என்று ஜாலியாகப் புலம்பிக் கொண்டிருக்க, விக்ரமும், சபரியும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி டீசன்டான சுயபகடி, எள்ளல் என்றெல்லாம் நகைச்சுவை என்று ஒன்று இருக்கிறது, அது இந்த நிகழ்ச்சியில் நடக்கும் என்பதே நமக்கெல்லாம் மறந்து போய்விட்டது. எல்லாம் தர்பூசணி, பாரு, சாண்ட்ரா போன்ற போட்டியாளர்களின் கைங்கர்யம்!
இறுதியில் அரோரா இறங்கிவிட, சுபி இந்த முதல் டாஸ்க்கில் வென்றார்.
இரண்டாவது டாஸ்க்காக, ஒரு கூடையில் பந்துகளை சேகரிக்கும் போட்டி நடந்தது. வெள்ளைப் பந்து வைத்திருப்பவர்களுக்கு மதிப்பெண்! கருப்புப் பந்து வைத்திருப்பவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்! தங்க நிறப் பந்து வைத்திருப்பவர்கள், இன்னொரு போட்டியாளரின் பந்துகளில் பாதியை பெற்றுக் கொள்ளலாம்! முடிந்தால், அடுத்தவர்களின் பந்துகளைப் பிடுங்கிக் கொள்ளலாம்! இப்படி விதிமுறைகளுடன் ஆட்டம் நடந்தது. இந்த நான்காவது விதி எந்த ஆட்டத்தில் எல்லாம் இருக்கிறதோ, அதில் எல்லாம் நிச்சயமாக சில எதிர்பாராத அடிதடிகள் ஏற்படத்தான் செய்யும். முடிந்த வரை எல்லோரும் டீசன்டாக விளையாட, எதிர்பார்த்தது போலவே பாருவும், கமருவும் மோதிக்கொண்டார்கள். ஆனால், அது இந்த ஆட்டத்துக்கான போட்டியாக இல்லாமல், அவர்களுக்கிடையேயான தனிப்பட்ட பழிவாங்கலின் வெளிப்பாடாகவே இருந்தது.
வழக்கம்போல இருவரும் விதிமுறைகளை மீறி ஆடியதால் வெளியேற்றப்பட்டார்கள். ’நான் போனாலும் பரவாயில்லை, நீ அவுட்டானாய் அல்லவா, அதுதான் சந்தோஷம் எனக்கு’ என்பது போல இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் வன்மத்தைக் கக்கிக் கொண்டார்கள். பக்கத்தில் வந்து கேலி செய்த கமருவைப் பாரு எரிச்சலில் லேசாக அடித்தார். அது நிச்சயமாக வலி தரக்கூடிய அளவுக்கான அடி இல்லைதான், ஆனால் கமருவின் ஈகோவே அதில் அடிவாங்கி விட்டதால், ‘இவள் எப்படி என்னை அடிக்கலாம்?’ என்ற கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்து, கடுமையாக பதிலுக்கு சண்டைக்குப் போனார். ஆனால், கமருவின் ஈகோவை விட பாருவின் ஈகோ மிகப்பெரியது. அவர் இதுதான் வாய்ப்பு என்பது போல கமருவை விடாமல் வார்த்தைகளால் ட்ரிகர் செய்து கொண்டே இருந்தார். அது கமருவின் கோபத்தை இன்னும் அதிகமாக்கிவிட பாருவைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டது, பிராப்பர்டீஸை எட்டி உதைப்பது போன்ற விஷயங்களைச் செய்து பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். அனைவரும், கமருவைத் தடுத்து வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு போக, பாரு ’ஒரு பெண்ணுக்கு, இந்த உலகத்தில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்தீர்களா?’ என்பது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்து மீட்டர் போட்டுக்கொண்டார். நடப்பது அனைத்தையும் பாரு, தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் லாகவம் யாருக்கும் வராது. அனேகமாக, இந்த வீக்கண்டில், இது கமரு வெளியேறும் அளவுக்கான பிரச்சினையாக உருவெடுக்கலாம்.
இந்தப் பந்து டாஸ்க்கில், நூலிழையில் விக்ரம் முதலிடத்தைத் தவறவிட, சாண்ட்ரா வெற்றி பெற்றார். அடுத்து மூன்றாவது டாஸ்க்காக, ஸிக்-ஸா பஸில் போட்டி ஒன்றும் நடந்தது. அதில் விக்ரம் வெற்றி பெற்றார்.
அடுத்து தனியே உட்கார்ந்து பாரு- கமரு பிரச்சினையை சாண்ட்ரா, பாருவிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘இவன் என்ன டிக்கெட் டு ஃபினாலே வேறு யாராவது ஜெயித்தால், அவர்களை அடிப்பானா? எனக்குப் பயமாக இருக்கிறது’ என்று கமரு, ஏதோ ஆட்டத்தில் ஜெயிப்பவர்களை அடிக்க முயற்சித்தார் என்பது போல டிவிஸ்ட் செய்துகொண்டிருந்தார் சாண்ட்ரா. நடந்தது என்னவோ பாருவின் திருவிளையாடல் என்பதை இப்போதுதான் நாம் பார்த்தோம்! சில நிமிடங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி!