குடும்பம் உள்ளே வரப்போகும் நிகழ்ச்சி நெருங்க நெருங்க, பாருவின் மூளை வேகமாக வேலை செய்துகொண்டிருந்தது. ஒருவேளை அம்மா உக்கிரமாக இருந்தால், பேசாமல் இந்தக் கமருவின் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட வேண்டியதுதான் எனும் முடிவில் இருந்தார். அவரிடமிருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், மனதுக்குள் நினைப்பதை, அவரால் வெளியே சொல்லாமல் இருக்க முடியாது.
கமருவை அருகே உட்கார வைத்துக்கொண்டு, ‘நாளைக்கு வெளியே போனபிறகு, ஒருவேளை உனக்கும் எனக்கும் செட் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளேன், இந்த வீட்டுக்குள் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் டாக்குமெண்டாக அப்படியே நிலைத்து நிற்கக்கூடியவை. அதெல்லாம் நம் உறவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும், அப்போது என் நிலைமையை கொஞ்சம் நினைத்துப்பாரேன், எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?’
‘அதனால், இப்போது என்ன சொல்ல வருகிறாய்? நான் ஏதோ உன் வாழ்க்கையில் விளையாடியதைப் போல பேசிக்கொண்டிருக்கிறாய்? ஏன் நமக்குள் செட் ஆகாது? என்ன பாரு, பேச்செல்லாம் வேறு மாதிரி இருக்கிறது?’
பாரு, கமருவுக்கு விபூதி அடிக்கத் தயாராக இருப்பதை, இப்போதே கமரு உணர ஆரம்பித்துவிட்டார்.
‘இல்ல பேபி, நான் உனக்காகவும்தான் கவலைப்படுகிறேன்’
என்று கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிப்பேசியதும், கமரு சற்று சமாதானமானார். அடுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வெளியே, உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதும் இதே டாபிக்தான் அவர்களுக்கிடையே போய்க்கொண்டிருந்தது.
‘உன் குடும்பத்து ஆட்கள் 24 மணி நேரம் உள்ளே இருப்பது எனக்கு நல்லதாகப் படவில்லை. எல்லாவற்றையும் வெளியே போய் நாம் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கலாம். இது தேவையில்லாத வேலை! உன் அம்மாவும், அண்ணனும் என்னைத் தூக்கி போட்டு மிதித்தாலும் நான் வாங்கிக் கொள்வேன். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன், இதெல்லாம் தேவையில்லாத வேலை!’ என்று கமரு, என்னவாகப் போகிறதோ என்ற பயத்தில் புலம்பிக்கொண்டிருந்தார்.
‘என்ன பயப்படுகிறாயா குமாரு?’ என்று பாரு வெளிப்படையாகவே கேட்டுவிட,
‘நான் ஏன் பயப்படப் போகிறேன்? நீதான் பயந்துகொண்டு இருக்கிறாய்’
‘ஆமாம்டா, இங்கே நடந்ததற்கு அவங்கதானே ரெஸ்பான்ஸிபிள்?’
‘என்னடி உளருகிறாய்? நீ பண்ணியதற்கு அவர்கள் எப்படி ரெஸ்பான்ஸிபிளாக முடியும்?’
‘என்னடா, நீ என்கிறாய்? அப்படியானால், உனக்கு இதில் சம்மந்தமில்லையா?’
‘நான் அப்படிச் சொல்லவில்லைடி! அவங்க எதுக்காக 24 மணி நேரம் உள்ளே இருக்கணும்? அதுதான் புரியவில்லை!’
அதற்குள், அமித், வினோத் போன்ற பார்வையாளர்கள் இருவர் வந்து உட்கார்ந்ததும்,
‘இங்கே எனக்கு ஏற்பட்ட உணர்வு இயற்கையானது. அதை இங்கே வைத்தே எங்கள் அம்மாவிடம் விளக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அதிலென்ன பிரச்சினை அமித்?’
என்று பாரு ஆரம்பிக்கவும், கமரு,
‘இவள் ஏற்கனவே பல தில்லாலங்கடி வேலைகள் பார்த்திருக்கிறாள் அமித். இவளைப் பற்றி எனக்குத் தெரியாதா? அம்மா சத்தியமா நான் எதுவுமே பண்ணவில்லை, ஆனால், திவாகரிடம் போய் நான் பேட் டச் பண்ணினேன் என்று சொன்னவள்தான் இவள். அந்த ட்ரோமாவிலிருந்து வெளிய வருவதற்கே எனக்கு அரோராதான் உதவினாள். சரி போனாப் போகுதே என்று விட்டுவிட்டேன். இவள் தப்பிப்பதற்காக அவங்க அண்ணன், அம்மாவிடம் என்னைப் பற்றி ஏதும் போட்டுவிடுவாளோ என்று சந்தேகமாக இருக்கிறது’
இதுவரை இருந்த மொத்த நாட்களிலும், இந்த ஆள் சரியாகச் சிந்தித்துப் பேசியது இதுதான் முதல் தடவை!
பாரு, ‘அப்படி எல்லாம் இல்லைடா பேபி, ஏதோ என் நேரம், அப்படி சொல்லிவிட்டேன், அதற்கப்புறம்தான் நான் உன்னை புரிந்துகொண்டேனே’ என்று மழுப்ப, அமித் கமருவிடம்,
‘கமரு, பாரு ஒரு இனிப்பான பெண் மட்டுமே இல்லை. அவர் கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் கசப்பு, கொஞ்சம் காரம், கொஞ்ச புளிப்பு என எல்லா எமோஷனும் கொண்டவர். உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதல்லவா? அப்படியானால், மொத்தமாக சேர்த்துதான் எடுத்துக்கொள்ள முடியும்! இனிப்பை மட்டுமே வேண்டும் எதிர்பார்க்க முடியாது. புரிகிறதா?’ நம்மை இப்படிக்கூட வர்ணிக்க முடியுமா என்ற பெருமையோடும், நாம் செய்கிற கசவாளித்தனத்துக்கு இப்படி அமித் மாதிரி முட்டுக் கொடுக்கத் தெரிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்பது போன்ற யோசனையோடும் உட்கார்ந்திருந்தார் பாரு.
முக்கால்வாசி எபிஸோடும் இவர்களின் பஞ்சாயத்துதான் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்து கொஞ்ச நேரம் கழித்து, மீண்டும் முட்டிக்கொண்டார்கள். கமரு கொதித்தபடி, சேரை எட்டி உதைத்துவிட்டுச் செல்ல, பாரு,
‘என்ன பேபி இது?’ என்று கொஞ்சியதற்கு,
‘பேபி என்றால் வாயை உடைத்துவிடுவேன் உன்னை!’ என்று கமரு சொன்னது கொஞ்சல் எல்லாம் இல்லை! பாரு, இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க, விக்டிம் கார்டு, ஃபீமேல் கார்டு எல்லாவற்றையும் எடுத்துத் தீட்டிவைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், இப்போதைக்குக் கொஞ்சலாகப் பேசி, அவரைச் மீண்டும் சமாதானப்படுத்திவிட்டார்.
திவ்யாவும், சாண்ட்ராவும் இது விசயமாய் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘எல்லாம் இவள் கண்டெண்டுக்காகச் செய்கிறாள் சாண்ட்ரா. இவளுக்குத் தேவைப்பட்டால் கட்டிப்பிடிப்பாளாம், மடியில் படுத்து உருளுவாளாம், சாப்பாடு ஊட்டுவாளாம். ஆனால், வேண்டாமென்றால் பேட் டச் என்பாளாம், ஏன் அவன் அப்படிச் செய்யும் போது பளாரென்று ஒரு அறைவிட வேண்டியதுதானே? சின்னக்குழந்தையா அவள்?” என்று பொரிந்து கொண்டிருக்க, சாண்ட்ராவும் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார். சாண்ட்ரா சாமி, சென்ற வீக்கெண்டுக்குப் பிறகு மலையிறங்கிவிட்டது போலிருக்கிறது.
அரோராவிடம் போய், ’மீண்டும் பேட் டச் விவகாரத்தைக் கிளப்பிவிடுகிறாள் பாரு’ என்று கமரு புலம்ப, அவர்,
‘என்னிடம் பழகிய வரைக்கும் சொல்கிறேன், நீ ஒரு ஜெண்டில்மேன்! இந்தக் குற்றச்சாட்டெல்லாம் பெரிய பழி! இது ஒரு ஆணின் இமேஜை மோசமாகச் சரிக்கும். இதை பெர்சனல் விசயம் என்று சொல்லி அமுக்கிவைக்கப் பார். முடியாவிட்டால் எஸ்கலேட் செய்து அவளை மன்னிப்புக் கேட்க வைத்து தவறை ஒப்புக்கொள்ளச் சொல்! இல்லையென்றால் உன் டப்பா டான்ஸ் அடிவிடும்’
என்று சரியாக எச்சரித்தார்.
அதற்கு ‘இதோ போகிறேன்’ என்றபடி எழுந்து போன கமரு, பாருவை உட்கார வைத்து, லாக் செய்து கேள்வி கேட்டவுடன் பாருவும் வேறு வழியில்லாமல், ‘அது, முழுக்க முழுக்க என் தவறுதான்’ என்று ஒப்புக்கொண்டார்.
அடுத்து, முதலாவதாக சான்ட்ராவின் குடும்பம் உள்ளே வந்தது. பிரஜினும், இரண்டு சின்ன குழந்தைகளும் வந்தார்கள். இரண்டு பேரும் சிவப்பு நிற உடையில், மிகவும் அழகாக இருந்தனர். எதிர்பார்த்தது போலவே சான்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் செய்தும், குழந்தைகளை வைத்து சென்டிமென்ட் சீன் போட்டும் மீட்டர் போட்டுக் கொண்டார். நமக்கென்னவோ இவரை ஃபைனல் வரைக்கும் கொண்டு வந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது.