விஜய் சேதுபதியின் மென்மையான கண்டிப்பு! #Biggboss Day 76

’இப்படி உங்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால், எனக்கு ரத்தக்கண்ணீர் வருகிறது சாண்ட்ரா’ என்றுதான் விஜய் சேதுபதி சொல்லவில்லையே தவிர, மற்றபடி, ’என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா’ என்று பொத்தினாப்பல விசாரித்துவிட்டு முடித்துக் கொண்டார்.
Actor Vijaysethupathi - Host of Biggboss 9
Actor Vijaysethupathi - Host of Biggboss 9@jiohotstar
Published on

விஜய் சேதுபதி வந்ததும் முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார். குறிப்பாக இரண்டு பிரச்சனைகள் நடந்திருக்கின்றன. ஒன்று, ஆதிரை ஓர் எலக்ட்ரிகல் ஃபேசியல் ரேசரைக் கொண்டு, பெட்ரூமில் முக அலங்காரம் செய்து கொண்டிருந்திருக்கிறார். இது அப்படி ஒன்றும் பெரிய குற்றமில்லை என்றாலும், இதே ஆதிரை, ஆண்களில் யாரோ ஒருவர் முன்னர் இதே வேலையை பெட்ரூமில் செய்த போது தட்டிக் கேட்டிருந்திருக்கிறார் போலிருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு வினோத், ’இதை நீங்கள் செய்தால் மட்டும் சரியா, போய் பாத்ரூமில் வைத்துப் பயன்படுத்துங்கள்’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். ஆனால், ’ஆண்கள் தாடியை ஷேவ் செய்வதையும், பெண்கள் முகத்தைப் பாலிஷ் செய்வதையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? அதுவும், இதுவும் ஒன்றா? அதோடு பாத்ரூமில் மின்சார வசதி இல்லை, மேலும் சுத்தத்தைக் கருத்தில் கொண்டு ஒரு டவலை விரித்து வைத்துக் கொண்டுதான் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இதை போய் இப்படி பிரச்சினையாக்கலாமா?’ என்று அழ ஆரம்பித்த பிறகும் வினோத் மல்லுக்கு நின்றிருக்கிறார். இதில், வினோத்துக்கு ஆதரவாக இரண்டு பேரும், ஆதிரைக்கு ஆதரவாக இரண்டு பேரும் களத்தில் இறங்கி, விவாதத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்ச்சி, வழக்கம் போல சான்ட்ராவின் அட்டகாசம்தான்.  நாமினேஷனில் இருப்பவர்களுக்கான பெட்டிகள் வெள்ளிக்கிழமை மதியமே வந்துவிடும் போலிருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் அதில் துணிமணியை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, சமைத்து, சாப்பிட்டு, பாத்திர பண்டங்களை எல்லாம் கழுவி எடுத்து வைத்துவிட்டுப் போய்ப் படுப்பார்களாம். இது தொன்று தொட்டு நடந்து வரும் வெள்ளிக்கிழமை சம்பவம் போலிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மகாராணி சாண்ட்ராவின் தூக்கத்தை பாதித்திருக்கிறது. அதனால், அவர் கோபப்பட்டு வெளியே போய் படுத்து விட்டார். ஏற்கனவே சாண்ட்ரா இது போன்ற வேலைகளைச் செய்வார் என்பதால் யாருமே பேசாமல், அமைதியாகத்தான் இந்த வேலையும் செய்து கொண்டிருந்தார்கள், அப்படியும் அது சாண்ட்ராவைப் பாதித்திருக்கிறது.

Actress Sandra Amy
Actress Sandra Amy @jiohotstar

’சரி, அவர் வெளியே போய்ப்படுத்தால் என்ன, உள்ளே படுத்தால் நமக்கென்ன, ஏதோ செய்து தொலையட்டும். தினமும்தான் நாம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே’ என்ற மனநிலைக்கு எல்லோருமே வந்திருந்தார்கள். ஆனால், ‘அதை அப்படியே எப்படி விடமுடியும்?’ என்று இந்த பிக்பாஸ் இரவு நேரத்தில் வெளியே படுத்துத் தூங்க யாருக்கும் அனுமதி இல்லை என்று ஒரு புதிய விதியை கொண்டு வந்திருக்கிறார் போலிருக்கிறது. அதை முன்னிட்டு முதலில் வீட்டுத்தலயான வினோத், சாண்ட்ராவிடம் போய்க் காலில் விழாத குறையாக வீட்டுக்குள் வந்து படுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார். அதற்கு சாண்ட்ரா மொத்த வீட்டுக்குமே கேட்கும்படி கத்திக் கூப்பாடு போட்டதால், மற்ற போட்டியாளர்களும் வந்து, ’அம்மா, தாயே! நாங்கள் வாயைப் பொத்திக் கொண்டு பேசியும், பூனை போல அரவமில்லாமல் மற்ற காரியங்களைப் பார்த்தும் கூட உங்களுடைய தூக்கம் லேசாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து விதிமுறைகளை மதித்து, வீட்டுக்குள் வந்து படுங்கள்’ என்று கெஞ்சிப் பார்த்தார்கள். அதற்கும் அவர் அசைந்துகொடுக்காமல், விழுந்து பிறாண்டி துரத்தி விட்டுவிட்டு, தலையில் அடித்துக்கொண்டு அழுது சீன் போட்டுக்கொண்டிருந்தார். 

இந்த பிக்பாஸுக்கு கட்டுப்பட்டு நாம் இந்த வீட்டில் வாழ்கிறோமா அல்லது சாண்ட்ராவுக்கு கட்டுப்பட்டு இந்த வீட்டில் வாழ்கிறோமா என்பதே புரியாமல் மண்டை குழம்பித் திரிந்து கொண்டிருந்தார்கள் மற்ற போட்டியாளர்கள்!

வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, போன வாரம் முழுவதுமே இந்த வேலையைத்தான் சாண்ட்ரா பார்த்துக் கொண்டிருந்ததால், விஜய் சேதுபதியும் சாண்ட்ராவின் இந்தப்  பஞ்சாயத்தைத்தான் முதலில் எடுத்துக் கொண்டார். அப்போது, சாண்ட்ராவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே, எந்தத் தவறுமே செய்யாத ஒரு பச்சைக் குழந்தையின் முகம் அப்படித்தான் இருக்கும். அப்படி ஒரு முகபாவனையை வைத்துக் கொண்டு, குரலிலுமே ஒரு மழலைக்கெஞ்சலை வரவழைத்துக்கொண்டு பதில் சொன்னார்.

Kani,Aurora Sinclair and Aadhirai
Kani,Aurora Sinclair and Aadhirai@Jiohotstar

’சார், நான் என் புருஷன் வெளியே போனதிலிருந்து மனம் உடைந்து போய் விட்டேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு உடம்பு வேறு சரியில்லை. இப்படி உடம்பும், மனதும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேண்டுமென்றே தூங்க விடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள் சார். இப்படியெல்லாம் செய்யலாமா? இப்படி ஒரு அநியாயம் வேறெங்காவது நடக்குமா?’

’இப்படி உங்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால், எனக்கு ரத்தக்கண்ணீர் வருகிறது சாண்ட்ரா’ என்றுதான் விஜய் சேதுபதி சொல்லவில்லையே தவிர, மற்றபடி, ’என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா’ என்று பொத்தினாப்பல விசாரித்துவிட்டு, ’உட்காருங்கள்!’ என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்துக் கொண்டார். அதாவது, உட்காருங்கள் என்ற சொல்லைக் கோபமாக சொல்லிவிட்டாராம்! அதோடு டான்ஸ் மரத்தானில், சாண்ட்ரா, கனி மீது வீண்பழி போட்ட பஞ்சாயத்தைப் பற்றி விசாரிக்கவே இல்லை. நாளைக்கு எபிஸோடில் இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கில்லை! பிக்பாஸ் விதிகளையும் மதிக்காமல், வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களையும் மதிக்காமல் இப்படிப் பச்சையாக நடித்துக் கொண்டிருக்கும், சாண்ட்ரா மீதான விஜய் சேதுபதியின் கண்டிப்பு இவ்வளவுதான்! இதையே வேறு யாராவது செய்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும் இந்த விஜய் சேதுபதி யார் என்று!

அதை, அடுத்த பஞ்சாயத்திலேயே விஜய் சேதுபதி நிரூபித்தார். மேலே சொன்ன ஆதிரையின் முக அலங்காரப் பஞ்சாயத்தைப் பேசும்போது வினோத்தை போட்டு வெளுத்து வாங்கி விட்டார்! ’விஜய் சேதுபதி நம்மைப் பேச விடமாட்டார்’ என்று வினோத் ஒரு கமெண்ட் அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு, இப்போதும் அவரைப் பேசவிடாமல் நக்கல் செய்துவிட்டு, கண்டித்து உட்கார வைத்து விட்டார். அடுத்து பாருவைப் பார்த்து,

Sabarinadhan and Kamurudin answering to vijaysethupathi
Sabarinadhan and Kamurudin answering to vijaysethupathi@jiohotstar

‘எல்லோரும் அவரவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலையை செய்வதில்லை, யாராவது வந்து சொன்ன பிறகுதான் செய்கிறீர்கள். அதுவும் சொன்ன உடனே செய்ய உங்கள் ஈகோ இடம் கொடுப்பதில்லை. யாராவது ஞாபகப்படுத்தினால், அப்புறமாக செய்வேன், இப்போது என்ன அவசரம் என்பது போலப் பேசுகிறீர்கள். உங்களுக்கு ஒரு வேலையும் கொடுத்து, அதைச் செய்கிறீர்களா என்று பார்த்துச் சொல்லி ஞாபகப்படுத்த ஒரு ஆளையும் உங்கள் பின்னாலேயே அனுப்பவேண்டுமா?’

என்று அவரது திருவிளையாடலைப் பற்றிக் கேட்டார் விசே! அம்மையாரும், அதற்குப் பதில் சொல்லமுடியாமல் முகத்திலேயே நவரசங்களையும் காண்பித்தபடி நின்றுகொண்டிருந்தார்.

இன்றைய திருட்டுமுழி:

ஒரு பஞ்சாயத்தில் தன் கருத்தைச் சொல்ல கமரு எழுந்த போது பார்வையாளர்கள் பலமாக நீண்ட நேரம் கைதட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு விஜய் சேதுபதி, ’நீங்கள் பாட்டுக்கு எதையாவது நினைத்து கைதட்டி விடுகிறீர்கள், அவர் வேறு ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்’ என்று கேலி செய்த போது, கேமரா பாருவின் முகத்தைக் கொஞ்ச நேரம் காட்டியது. அவரது கண்கள் குடைராட்டினம் போல சுற்றிக் கொண்டிருந்தன. அவரது மண்டைக்குள் என்னென்னவெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது என்பதைத் தெளிவாக நம்மால் உணரமுடிந்தது.

Puthuyugam
www.puthuyugam.com