பார்வையாளர்களின் காதில் தேனை வார்த்த விஜய் சேதுபதி! #Biggboss Day 69

’ஒரு சக போட்டியாளராகவும் அதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை. அப்படி இல்லாவிட்டாலும் ஒரு வீட்டு தலயாகவாவது நீங்கள் கமருவைக் கண்டித்திருக்க வேண்டும். அதையும் செய்யாமல் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’
Vijaysethupathi
Vijaysethupathi@jiohotstar
Published on

விஜய் சேதுபதி உள்ளே வந்ததுமே, வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நேரடியாக பாரு, கமரு பஞ்சாயத்துக்கு வந்தார். இருவருமே எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் மைக்கை மறைத்து பேசுவதிலேயே குறியாக இருந்து, இந்த வாரம் பிக்பாஸ் உட்பட எல்லோரையும் கடுப்பேற்றியதற்குத் தண்டனையாக, ’நீங்கள் பேசுவதுதான் யாருக்கும் கேட்கத் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டீர்கள் அல்லவா, அதனால் இப்போதும் உங்களுக்கு அதே வாய்ப்பைத் தருகிறேன். இரண்டு பேரும் மைக்கைக் கழற்றி வைத்து விடுங்கள்’ என்று சொன்னார். வேறு வழியில்லாமல் அவர்களும் மைக்கைக் கழற்றிப் போட்டார்கள். இந்த எபிசோட் முடியும் வரைக்குமே அவர்களை மீண்டும் மைக்கைப் போட்டுக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதன் மூலம் இந்த இருவரும் பேசி அதை நாம் கேட்கும் இரிடேட்டிங்கான செயல் இன்று நடக்கவில்லை. பாருவின் இரிடேட்டிங் குரலைக் கேட்காமல் ஏதோ ஓர் இதமான அமைதி நமது காதுகளுக்குக் கிடைத்தது.

அவர்கள் இருவரையும், மைக்கைப் பிடுங்கிக் கொண்டு ஓரமாக உட்கார வைத்த பின்னர் மற்றவர்களிடம் வந்தார்.

’டீ, காபி, முட்டை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னமோ நடக்கட்டும் என்று அவர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டீர்களே என்ன காரணம்?’ என்று அனைவரிடமும் பொதுவாக கேட்டார்.

’நாங்களாக யோசித்து கூடுதல் தண்டனை கொடுத்தோமே சார்’

‘அதை அவர்கள் கேட்டார்களா? செய்தார்களா?’

‘இல்லைதான். ஆனால், எங்களால் என்ன செய்ய முடியும்? வேறு யாராவதாக இருந்தால் அவர்கள் அதைக் காதுகொடுத்து கேட்டிருப்பார்கள். அப்படிக் கேட்காவிட்டாலும் நாங்களும் தட்டிக் கேட்டிருப்போம். ஆனால், இந்த இருவரிடமும் பேசுவதற்குப் பதிலாக சுவரிடம் பேசினால் கூட ஏதாவது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும் என்பதால் அப்படியே விட்டுவிட்டோம்’ என்பது போல ஏதேதோ சொன்னார்கள்.  

'ஆஹா, வண்டி பாரு மீது திரும்பிவிட்டதே, நாம் வேறு இந்த வாரம் முழுதும் அவள் கூடவே சுற்றிக்கொண்டிருந்தோமே, நமக்கும் டேமேஜ் ஆகிவிடப்போகிறது' என்று நினைத்து, சாண்ட்ராவும் பாருவின் மீது குற்றம் சுமத்திவிட்டு மற்றவர்களோடு சேர்ந்து கொண்டார்.

Kamurudin and Vj Paaru
Kamurudin and Vj Paaru@jiohotstar

’அவர்கள் செய்த காரியத்துக்கு, அவர்களிடம் குற்ற உணர்ச்சியாவது இருந்ததா?’

என்று விஜய் சேதுபதி கேட்டதற்கு, ’குற்றவுணர்ச்சியா, அது எந்தக் கடையில் கிடைக்கும்? கிலோ என்ன விலை? என்று மனநிலையில்தான் இருந்தார்கள். எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. வழக்கம் போலவே செம ஜாலியாக இருந்தார்கள்’.

அவர்களிடம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவசியமே இல்லாமல் கமரு, திவ்யாவிடம் வம்பிழுத்து, சண்டைக்குப் போனபோது பக்கத்தில் இருந்தது தல அமித், வினோத், பாரு, சான்ட்ரா மற்றும் ரம்யா. அந்த நிகழ்ச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார் விசே. பாரு, குற்றவாளியோடு கூட்டு கூட்டாளி! சான்ட்ராவையும், ரம்யாவையும் லேசாகக் கண்டித்துவிட்டு விட்டுவிட்டார். வினோத்தும், அமித்தும் சரியாக மாட்டிக் கொண்டார்கள். அந்த இடத்தில் மட்டுமல்லாமல், இந்த வாரம் முழுவதும் வினோத்,  பாருவுக்கும், கமருவுக்கும் எல்லா விஷயத்திலும் ஜால்ரா அடித்துக் கொண்டுதானிருந்தார். அவருக்கு இது தேவைதான்.

‘ஏங்க, ஃபிரண்டுன்னா அவங்க செய்ற தப்பு எதுவுமே கண்ணுக்குத் தெரியாதாங்க? திவ்யாவை அவ்வளவு மட்டமாகப் பேசி மாக்கிங் செய்து கொண்டிருக்கிறார். எப்படிங்க பக்கத்துல உக்காந்து உங்களால சிரிக்க முடியுது?’

‘இல்ல சார், அவனுக்கு எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்கச் சொன்னேன்’

‘மன்னிப்புக் கேட்கப்போன இடத்தில் அதைவிடவும் அதிகமா அவரைக் காயப்படுத்தினார். அதுக்கும் நீங்க சிரிச்சிக்கிட்டுதான் இருந்தீங்க, அதுக்குதான் அவரைக் கூட்டிக்கொண்டு போனீர்களா?’

அவ்வளவுதான், வினோத்திடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. வாயைப் பொத்திக் கொண்டுவிட்டார். அடுத்து அமித்திடம்,

’ஒரு சக போட்டியாளராவும் அதை நீங்க தட்டிக் கேட்கல. அப்படி இல்லாட்டியும் ஒரு வீட்டுத் தலயாகவாவது நீங்க கமருவை கண்டிச்சிருக்கலாம்... அதையும் செய்யாம அங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க?’

‘நான் கேட்டேன் சார், கமரு… இப்படிப் பேசாதே, இது தப்பு என்று அவரிடம் சொன்னேன் சார்’

’நீங்க சொன்னீங்க அமித். ஆனா அது பார்த்துகிட்டிருந்த எங்களுக்கே கேட்கல.. அவருக்கு மட்டும் எப்படிக் கேட்டிருக்கும்? நீங்க ஏன் அவரக் கண்டிக்கலைனு கேட்டா, அவர்ட்ட கெஞ்சிட்டிருந்தேன்னு சொல்றீங்க... இதுதான் ஒரு வீட்டுத் தலயோட பொறுப்பா?’

Divya Ganesh
Divya Ganesh@jiohotstar

வீட்டுத்தல பொறுப்பு என்றாலே யாரிடமும் கண்டிப்பாகப் பேசி விடக்கூடாது, குரல் உயர்த்திப் பேசிவிடக்கூடாது, கோபப்பட்டு விடக்கூடாது என்பது போல அங்கிருக்கும் எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோபமே வந்தாலும், அதிர்ந்துகூட பேசாதவராக இருக்கிறார் அமித். அவரிடம் வீரத்தை எதிர்பார்த்தால் என்னத்த விளங்கும்? நாம்தான் வீரமாகத் தட்டி கேட்டோமோ, இதை விட எப்படி பெரிதாகத் தட்டிக் கேட்க முடியும் என்ற ஆச்சரியத்தோடு நின்றுகொண்டிருந்தார் அமித்.

கூடுதலாக வீடே அவர்கள் இருவரும் எந்த வேலையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு தலயாக நான் அவர்களை வேலை வாங்கிவிட்டேன் என்று நிரூபிப்பதாக நினைத்துக்கொண்டு, ‘அவர்கள் எல்லா வேலையும் செய்தார்கள்’ என்று சொல்லிவிட்டு அதற்கும் தனியாக மாத்து வாங்கிக்கொண்டார்.

தப்பைத் தட்டிக்கேட்காத மற்றவர்களுக்கே இந்த கதின்னா, தப்பு செய்த கமரு, பாருவுக்கு என்ன கதியோ என்று நினைத்துக்கொண்டிருந்தால், ‘என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பது போல சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

Ramya Evicted
Ramya Evicted@jiohotstar

இந்த முழு எபிசோடும் அவர்களை முன்நிறுத்தியே நடந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றிய எந்தக் கவலையும் கமருவின் முகத்தில் இல்லை. ’அறிவுரைதானடா சொல்றீங்க, சொல்லுங்க, சொல்லிட்டுப்போங்க’ என்பது போல நிகழ்ச்சி முழுவதும் கேஷுவலாக உட்கார்ந்துகொண்டிருந்தார். பாரு மட்டும் வயிற்றுக் கடுப்பு வந்தவர் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். அவ்வளவுதான் அவர்களுடைய ரியாக்சன்! 

நிகழ்ச்சியை முடித்து விட்டு, விஜய் சேதுபதி வெளியேறிய போது கூட இருவர் முகத்திலும் துக்கத்துக்குப் பதிலாக, ’அப்பாடி, இந்த அளவில் தப்பித்து விட்டோம்’ என்ற நிம்மதி உணர்வுதான் இருந்தது. கமருவிடம் பேசியபோது கூட, ‘வேற எதையும் கேட்கல பார்த்தியாடா? இது வழக்கமா நடக்குறதுதானே, விடு, பார்த்துக்கலாம்’ என்றார் பாரு. அதாவது, கெட்டவார்த்தை பேசியது, விளக்கணைக்கப்பட்ட பின்னர் ஆக்டிவிட்டி ஏரியாவை விட்டு வராமலிருந்தது போன்ற எதுவுமே கேட்கப்படவில்லை என்பது பற்றிச் சொல்கிறார். அப்படியானால், விஜய் சேதுபதியின் கண்டிப்புகள் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.


இந்த வாரம் டபுள் எவிக்சனுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், இன்று சனிக்கிழமை எபிசோடிலேயே, இரண்டு மூன்று வாரங்களாக வெளியேறாமல் ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்த ரம்யாவை வெளியேற்றினார்கள். இரண்டாவது ஆள் யாரென்பதை நாளை பார்ப்போம்!

Puthuyugam
www.puthuyugam.com