நேற்றும், பாரு, கமரு பிரச்சினையில் காட்டமாக பேசிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, இன்றைக்கும் வழக்காடு மன்றம் டாஸ்க்கை முன்னிட்டு, கடுமையாகப் பேச சில விஷயங்களை வைத்திருந்தார். அதனால், அனைவரையும் சற்று ஆறுதல் படுத்துவதற்காக நிகழ்ச்சி தொடக்கத்தில், கண்ணைக் கட்டிக்கொண்டு பந்து மீது உட்கார்ந்து விளையாடிய போன வார ’வீட்டுத்தல’ டாஸ்க்கில் நடந்த காமெடிகளை ஒரு குறும்படமாகப் போட்டு காண்பித்தார். அதில் கலந்து கொண்டவர்கள், அதன் சுவாரசியத்தைப் பார்த்திருக்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு. அனைவரும் சிரித்து என்ஜாய் செய்தனர்.
அடுத்து வழக்காடு மன்றம் டாஸ்க் பஞ்சாயத்துக்கு வந்தார். முதல் கேள்வியாக, ‘கோர்ட்டின் மரியாதையைக் கெடுத்து, அமைதியைக் குலைத்தது யார்?’ என்று கேட்டார். சந்தேகமே இல்லாமல் பாருதான் என்று எல்லோரும் சொன்னார்கள். வினோத்தும், எஃப்ஜேவும் கூட அதைச் செய்தாலும் அதன் தொடக்கம் என்னவோ பாருவாகத்தான் இருந்தார். நேற்றுதான் அவ்வளவு வாங்கிக் கட்டிக் கொண்டோம்; இன்றைக்கும் நாம்தானா? என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார் பாரு. இந்த அழகில் பாருவின் வீட்டில் சில லாயர்கள் வேறு இருக்கிறார்களாம், எனக்கு கோர்ட்டின் டெக்கோரம் எல்லாம் நன்றாகத் தெரியும் என்று வேறு சொல்லிக் கொள்கிறார். பாருவை எழுப்பி, ’உங்கள் வீட்டில் அத்தனை வக்கீல்கள் இருக்கும்போது உங்களுக்குக் கோர்ட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியுமல்லவா? அப்படி என்றால், எல்லா ஜட்ஜ்களும் அத்தனை முறை திரும்பத் திரும்பச் சொல்லியும் கேட்காமல், ஏன் அத்தனை அட்டகாசங்களைச் செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்டார் விஜய் சேதுபதி. அதற்கு பாருவின் அட்டகாசமான பதில்,
’ஆமா சார், நான் பேசினேன்தான் சார். ஆனால், ரொம்ப நேரம் நான் வாயை கட்டுப்படுத்திக்கிட்டும் இருந்தேன் சார்’
அதாவது, ஒரு மணி நேரம் நடந்த கோர்ட் டாஸ்க்கில், 40 நிமிடம், நான் மற்றவர்களை விளையாட விடாமல் பேசிக் கொண்டிருந்ததை மட்டுமே நீங்கள் குற்றமாகச் சொல்கிறீர்களே? மிச்சம் 20 நிமிடம் கஷ்டப்பட்டு என் வாயைப் பொத்திக்கொண்டு நான் பேசாமல் இருந்தேனே, அதைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியதா உங்களுக்கு என்பதுதான் இந்தப் பதிலின் அர்த்தம்! தலையில் அடித்துக்கொண்டு, ’உங்ககிட்ட எல்லாம் பேசிப் புண்ணியமில்லை, உட்காருங்கம்மா’ என்று பாருவை உட்காரச் சொல்லிவிட்டு அடுத்த வழக்குகளுக்குப் போனார் விஜய் சேதுபதி.
ஃபார்மாலிடிக்கு மற்ற வழக்குகளைப் பற்றிக் கேட்டுவிட்டு ஆதிரை, எஃப்ஜே மீது போட்ட வழக்கை, தப்பை ஒத்துக் கொண்டு எஃப்ஜே உழப்பிவிட்டது பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அது இடியாப்பச்சிக்கல் போல மிகவும் ஒரு காம்ப்ளெக்ஸான ஒரு வழக்கு.
ஆதிரை உள்ளே வந்த பிறகு எஃப்ஜே மீது, ’தன்னைத் தவறாக ப்ரொஜெக்ட் செய்து விட்டான்’ என்று பல அத்தனை மறு விசாரிப்புகளுக்கும் எஃப்ஜே தகுதியான ஆள்தான்.
விசே, ‘அத்தனை விஷயங்களையும், அத்தனை தடவைகள் நீங்கள் அதை விளக்கிவிட்ட பிறகும் இந்த டாஸ்க்கிலும், அதை விளக்கமாக சொல்ல வேண்டும்? என்று அப்படி என்ன அவசியம்?’ என்று கேட்டார்.
அதற்கு ஆதிரை, ‘அத்தனை தடவைகள் கேமராவிலும், மற்றவர்களை உட்கார வைத்தும், முந்தைய வீக்கெண்ட் எபிசோடுகளிலும் போதுமான அளவுக்கு நான் எடுத்துச் சொல்லியும். அதனால் எந்த பாதிப்பும், குற்றவுணர்ச்சியும் இல்லாமல், லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துவிட்டு, எஃப்ஜே சிரித்தபடி ஜாலியாக இந்த வீட்டுக்குள் வலம் வருகிறான். அதனால்தான், இந்தக் கோர்ட் டாஸ்க்கிலும் அதைச் செய்ய விரும்பினேன்’ என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அவர் ’நான் கேமராவில் எத்தனை தடவைகள் சொன்னாலும் போதாது, இது மாதிரி ஒரு டாஸ்கில்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்’ என்று உளறினார். அதற்கு, ’அது என்னம்மா டாஸ்க்கில்தான் செய்வது? இந்த வீட்டில் பேச உங்களுக்கு உரிமையா இல்லை? டாஸ்க் இல்லாமல் எங்கு வேண்டுமாலும் பேசலாமே?’ என்று கேட்டதற்கு ஆதிரையிடம் எந்தப் பதிலும் இல்லை. ’அதோடு கேசில்தான் நீங்கள் ஜெயித்து விட்டீர்களே? பிறகு எதற்கு அமித்திடம் போய் சண்டைக்கு நின்றீர்கள்? அது அந்த டாஸ்க்கை மீறிய செயலாக இருந்ததல்லவா?’ என்று கேட்டதற்கும் பதில் இல்லை.
அடுத்து எஃப்ஜேவையும் விடவில்லை. ஒரு காட்டு காட்டினார். ‘அவருக்கு எத்தனை தடவை சொன்னாலும் போதவில்லை. அந்த அளவுக்கு காயப்பட்டிருக்கிறார். அப்படி அவர் சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போது அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்காமல், தவறை ஒத்துக்கொள்வது போல, இந்த டாஸ்க்கை உழப்பி விட்டது நியாயமா? இதற்கு விக்ரமின் கூட்டு வேறு’ என்றதும், விக்ரம் விசயங்கள் புரிந்து, ‘நான் புரியாமல் தவறு செய்துவிட்டேன் சார்’ எழுந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால், எஃப்ஜேவிடம் ஒரு தெனாவட்டுதான் தெரிந்தது. திட்டிவிட்டு உட்காரச்சொன்னார்.
இந்த விசயத்தில் அரோரா பேசியது ஒரு அட்டகாசமான பேச்சு!
‘எஃப்ஜே, ஆதிரையை இதற்கு மேல் இதே டாபிக்கை வைத்து, ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால் உன்னைப் பற்றி நான் பத்து விஷயங்களைச் சொல்ல வேண்டி வரும். அவ்வளவுதான் உன் கேரியரே முடிந்து விடும் என்று மிரட்டினார். அதைத் தட்டிக் கேட்டபோது, பத்து விஷயமெல்லாம் இல்லை, ஒரு விஷயம்தான் என்று சொன்னார். அப்படியானால், அதைப் பத்து விசயங்கள் என்று சொல்லும்போது அதைக் கேட்கும் ஆடியன்ஸ் பத்து விதமான விஷயங்களை கற்பனை செய்துகொண்டு ஆதிரையை தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இது எவ்வளவு பெரிய மிரட்டல்! தவறே செய்யாத, அல்லது சிறிய தவறுகள் செய்த ஒருவரை இப்படிச் சொல்வதால் மட்டுமே கேரக்டர் அஸாஸினேஷன் செய்துவிடமுடியும்’ என்று சுட்டிக் காட்டினார். அதை விஜய் சேதுபதியே பாராட்டினார். இதற்காக இடைவேளையின் போது அரோராவிடம் எஃப்ஜே சண்டைக்குப் போய்விட்டு, அதற்காகவும் விஜய் சேதுபதியிடம் கொட்டு வாங்கினார்.
அடுத்து எவிக்சனுக்கு வந்தார்கள். சாண்ட்ரா, எஃப்ஜே, கமரு, பாரு போன்ற தகுதியில்லாதவர்கள் இருக்கும் நிலையில் நியாயமே இல்லாமல் வியானாவை வெளியேற்றினார்கள். வியானாவும் அதிக செண்டிமெண்டுகள் இல்லாமல், சிரித்தபடியே வெளியேறினார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய் சேதுபதி வெளியேறிய பின்பும், டிராமா குயின் சான்ட்ராவின் அட்டகாசம் ஒன்று நடந்தது. பிரஜின் போனதிலிருந்தே திவ்யாவிடம் கடும் வன்மத்தில் இருக்கிறார் சான்ட்ரா. பிரஜின் வெளியே போனதற்கு திவ்யாதான் காரணம் என்ற அவரது நினைப்பைத் தாண்டிய, வேறு ஏதோ கோபமும் அவரிடம் இருப்பது போலிருக்கிறது. அப்படி என்ன காரணம் என்று நமக்குத் தெரியவில்லை. சில மனைவியரிடமிருக்கும் இன்செக்யூரிடியா என்று சந்தேகப்படுமளவுக்கு இதைக் கடுமையாகக் கொண்டு செல்கிறார் சாண்ட்ரா. இதை உணர்ந்த திவ்யா, சாண்ட்ராவுக்கு சில விஷயங்களை கிளியர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரையும் உட்காரச் சொன்னார். ’முடியாது’ என்று சொல்லிவிட்டு எழுந்துபோனார் சாண்ட்ரா. அவருக்கு பீரியட்ஸ் நாட்கள் என்பதால், அதற்காக பாத்ரூம் செல்லவேண்டிய அவசியமிருந்திருக்கிறது போலிருக்கிறது. அதை சிம்பிளாக, ‘அவசரம், இரண்டு நிமிடங்களில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருந்தால் திவ்யா மட்டுமல்லாது அனைவருமே புரிந்துகொண்டு காத்திருந்திருப்பார்கள். ஆனால், அமித், வினோத், சபரி என அனைவரும், ’அப்படி அலட்சியமாக போகாதீங்க சாண்ட்ரா, உக்காருங்க, பேசணும்னு சொல்றாங்கல்ல’ என்று கத்திக்கொண்டிருக்கும் போதே, ‘போங்கடா’ என்று கத்தவிட்டுவிட்டு, பின்னர், ‘எனக்கு எப்படியாப்பட்ட பிரச்சினைனு உங்களுக்கு தெரியுமா? ஏன் எல்லோரும் இப்படி என்னை கொடுமைப் படுத்துறாங்க’ என்று வீடே அதிரும்படி கத்திக்கொண்டிருந்தார்.
மீண்டும் சாண்ட்ரா வந்தபோது, திவ்யா, ’நான் இந்த வீட்டில் யாரிடமும் சான்ட்ராவைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ தவறாக எந்த விஷயமும் பேசவில்லை. இத்தனை நாட்களாக நட்பாக இருந்த சான்ட்ரா இப்போது என்னிடம் பேசாமல் இருக்கிறாரே என்ற வருத்தத்தைத்தான் சொல்லி இருக்கிறேன். இதை நான் சான்ட்ராவுக்கு அனைவர் முன்னிலையிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவ்வளவுதான்’ என்று முடித்துக்கொண்டார். அவ்வளவுதான் அவரது நோக்கமும். ஆனால், சான்ட்ராவுக்கு திவ்யா மீது இருக்கும் கடுமையான வன்மம், அதனால் கொஞ்சமும் குறைவில்லை. அடுத்து வினோத்திடம் எரிந்து விழுந்தபடி மீண்டும் திவ்யாவைப் பார்த்து, ’இந்த டிராமாவுக்குத்தான் என்னை உட்கார வைச்சிருந்தியா? அது நடந்துடுச்சா? போதுமா உனக்கு? நிம்மதியா தூங்குவியா? மூணு நாளா பேசாம ஓரமாப் போய்கிட்டிருக்கிற என்கிட்டயே வந்து சண்டை இழுத்துகிட்டே இருக்க?’ என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்தார்.
விஜே பார்வதியே பரவாயில்லை என்று நினைக்க வைத்துவிடுவார் போலிருக்கிறது!