ஆதிரையின் ஆதங்கம்! #Biggboss Day 66

ட்டு தலையாக இருந்தால் எல்லோருக்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டும், எல்லோரிடம் கெஞ்சிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று யார் இவர்களுக்குப் பாடம் எடுத்தது என்று தெரியவில்லை. ஒரு கேப்டன் கூட...
Aadhirai in Confession room
Aadhirai in Confession room@jiohotstar
Published on

நேற்றுதான் இந்த பாருவையும், கமருவையும் மைக் போடாமல் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கும் விஷயத்துக்காக பிக்பாஸ், அவ்வளவு தூரம் கண்டித்து, கொடுக்கப்பட்ட உணவுகளையும் பிடுங்கிக் கொண்டு போயிருக்கிறார். அப்படியும் இவர்கள் கொஞ்சம் கூட திருந்தவில்லை! மைக் போடாமல் பேசுவதற்கு வேறு என்ன வாய்ப்பிருக்கிறது என்று யோசித்து, இரண்டு பேரும் காலையிலேயே மைக்கைக் கழற்றிப் போட்டுவிட்டு ஜாகிங் போய் கொண்டிருந்தார்கள். இத்தனை நாட்களாக இந்த நிகழ்ச்சியில், யாரும் ஜாகிங் போனதாகத் தெரியவில்லை. அப்படியே ஜாகிங்தான் முக்கியம் என்றாலும் எதிரெதிர் திசையில் போயிருக்கலாம், தனித்தனியே முன்பின்னாகப் போயிருக்கலாம், வேறு வேறு நேரத்தில் கூட போயிருக்கலாம். ஆனால், இவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக பேசிக் கொண்டேதான் ஜாகிங் போவார்களாம். இதெல்லாம் பார்க்கப் பார்க்க நமக்கே கடுப்பாக இருக்கிறதே, நிகழ்ச்சி இயக்குநர்களுக்கெல்லாம் எப்படி இருக்குமோ? சரி, அவர்கள்தான் பிக்பாஸையே கழுவி ஊற்றினாலும் கண்டுகொள்ளாமல்தானே இருக்கிறார்கள்.. இதுவெல்லாம் உறைக்குமா என்ன!

வீட்டுத்தலையான அமித், இதைக் குறிப்பிட்டுச் சொன்னபிறகும், ’நீ யார்றா வெண்ண’ என்பது போல மேலும் இரண்டு ரவுண்டு பேசிவிட்டு வந்துதான் மைக்கைப் போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகும், மைக்கை பொத்திக்கொண்டு பேசுவதற்கு பாரு ஆர்வமாக பக்கத்தில் வருவதைப் பார்த்து, ’வேண்டாம், விக்ரம், அமித் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கமரு சொன்னதற்கு, ‘அவனுங்க யாருடா நம்மளைச் சொல்றதுக்கு? கிடக்குறானுங்க கிறுக்கனுங்க, விடுடா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவரை மைக் போடச் சொல்லி உண்மையில் கேட்டுக் கொண்டிருப்பது விக்ரமோ, அமித்தோ அல்ல, பிக்பாஸ் என்பதுதான் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது!

இவர்கள் அடித்த கூத்துகளால் வீட்டில் மொத்தமாக அனைவருக்கும் டீ, காபி, பால், முட்டை போன்ற உணவுகள் பிடுங்கப்பட்டது பற்றிய எந்த விதமான குற்றவுணர்வும் இந்த இரண்டு பேருக்குமே சுத்தமாக இல்லை. இதைப் பற்றி விக்ரம் விசாரித்ததைக்கூட, ’விக்ரம் வந்து ஒரண்டை இழுக்கிறான்’ என்று கமரு, பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகும் கையில்தானே மைக்கைப் பொத்தக்கூடாது, என்று இருவரும் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு மைக்கைப் மறைத்தபடி காதில் எதையோ குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள்.

Gana Vinoth & Amit Bhargav
Gana Vinoth & Amit Bhargav@jiohotstar

ஆலமரத்தடிக்கு அனைவரையும் வரவைத்து உட்கார வைத்துவிட்டு, ’இந்தப் பாருவும், கமருவும் கொஞ்சம் கூட திருந்துவதாகவும் தெரியவில்லை, குற்ற உணர்ச்சியும் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார் அமித். அதற்கு, ‘எங்களுக்கு குற்றவுணர்ச்சியெல்லாம் மனசுக்குள் நிறைய இருக்கிறது. உங்களுக்கெல்லாம் அது தெரிய வேண்டும் என்பதற்காக மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டா இருக்க முடியும்?’ என்று தெனாவட்டாகப் பதில் சொன்னார் பாரு. ‘ஒப்பாரி வைக்க வேண்டாம். பதிலாக இரண்டு பேரும் வீக்கென்ட் வரை பேசாமல் இருங்கள். அதுதான் தண்டனை’ என்று சொன்னார்.

’அதெல்லாம் முடியாது, இதெல்லாம் என்ன மாதிரியான தண்டனை? ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்பது பிக்பாஸ் விதிமுறைகளுக்கு எதிரானது. இதை ஏற்க முடியாது’ என்றார் பாரு. இந்த அமித்தும் தன் முடிவில் ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், அவர் முடியாது என்றதும், ’அப்படியானால், கக்கூஸ் வேலையோடு சேர்த்து கிச்சன் வேலை, கிளீனிங் வேலை பாருங்கள். அப்படியாவது புத்தி வரட்டும்’ என்று சொன்னார். அதற்கும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ’அப்படியென்றால், இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் அவர்கள் இருவரிடம் பேச வேண்டாம்’ என்று ஒரு யோசனை சொன்னார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொள்ளவில்லை, வீட்டில் இருந்த மற்ற சிலரும் ஒப்புக்கொள்ளவில்லை. ’அப்படியானால், ஒரு வீட்டுத் தலையாக இவர்களுக்காக நான் பட்டினி கிடக்கப் போகிறேன்’ என்று சொன்னார். அதையும் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. ’நீங்கள் பட்டினி போராட்டம் நடத்தினால் நாங்கள் தூங்கும் போராட்டம் நடத்துவோம்’ என்று உடனடியாக, நான்கு பேர் அங்கேயே படுத்துத் தூங்கத் தொடங்கினார்கள். இதற்கு மட்டும், எல்லோரும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்!

வேறு வழியில்லாமல், அதையும் வாபஸ் வாங்கி கொண்டார் அமித். கடைசியில் எதுவுமே நடக்கவில்லை. வீட்டு தலையாக இருந்தால் எல்லோருக்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டும், எல்லோரிடம் கெஞ்சிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று யார் இவர்களுக்குப் பாடம் எடுத்தது என்று தெரியவில்லை. ஒரு கேப்டன் கூட கண்டிப்பாகவே நடந்து கொள்வதில்லை, அடிமையாகவே இருப்பதைப் பார்ப்பது நமக்கு எரிச்சலூட்டுகிறது.

அடுத்து, வழக்காடு மன்றம் டாஸ்க்! இரண்டாவது வழக்காக ஆதிரை, எஃப்ஜேவின் மீது, ’நான் லவ் செய்ததாகச் சொல்லி, இவன் எனது புகழைக் கெடுக்கிறான்’ என்று வழக்குத் தொடுத்திருந்தார். இது ஒன்றும் புதிதும் அல்ல. இவர் இரண்டாவது முறை வீட்டுக்குள் வந்த பிறகு, பல தடவைகள் ஆலமரத்தடியில் பேசப்பட்டுவிட்டது, தனியாகவும் பேசப்பட்டு விட்டது. இதற்காக எஃப்ஜே, ஆதிரையிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார். அப்படியும் இந்த ஒரே விஷயத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் இந்த ஆதிரை. இத்தனைக்கும் எஃப்ஜே மீது மட்டுமல்லாமல், இவர் மீதும் பாதிக்குப்பாதி தவறு இந்த கேஸில் இருக்கிறது. எஃப்ஜே செய்த உருப்படியான செயல், விக்கல்ஸ் விக்ரமை வழக்கறிஞராகத் தேர்வு செய்தது. நீதிமன்றத்தில் தவறை ஒப்புக்கொண்டால் வழக்கு, விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்படும் என்பதை அறிந்த அவர், ஆதிரை நினைத்ததற்கு மாறாக வாதாடாமல் தவறை அப்படியே ஒப்புக்கொண்டு வழக்காடு மன்றத்தில் எஃப் ஜேயை மன்னிப்புக் கேட்க வைத்து எளிதாக முடித்து வைத்து விட்டார்.

Court Task
Court Task@jiohotstar

அப்படிச் செய்யும்போது, ஆதிரையின் வக்கீல் அரோரா எழுந்து, ’சார், நான் நிறைய சாட்சிகள் எல்லாம் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். குறுக்கு விசாரணை செய்யட்டுமா’ என்று கேட்டதும், ஜட்ஜ் ஆன அமித், ‘அட, இருங்கம்மா! குற்றவாளியே குற்றைத்தை ஒப்புக்கொண்டு விட்டார். இனி என்னத்த நீங்க குறுக்கு விசாரணை செய்யப் போறீங்க? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உங்கள் தரப்புதான் ஜெயித்தது, கேஸ் முடிந்தது, எழுந்து வீட்டுக்குப் போங்க’ என்று சொன்னதற்கு அரோரா வாயை மூடிக்கொண்டு சிரித்தது காமெடியாக இருந்தது. அதற்கு பதிலாக நாங்கள் அவரது மன்னிப்பை ஏற்கவில்லை என்று அரோரா வழக்கைத் தொடர்ந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை அரோராவும் ஆதிரையும்.

தன்னால் விக்டிம் கார்டு விளையாட்டு விளையாட முடியாமல் போய்விட்டதே என்ற அதிர்ச்சியில், கேஸைத் தள்ளுபடி செய்த அமித்திடமும், வக்கீல் விக்ரமிடமும், அதற்குத் திட்டமிட்ட எஃப்ஜேவிடமும் குதித்துக்கொண்டிருந்தார் ஆதிரை. அவருக்கு பாரு வேறு சப்போர்ட். வழக்கம் போல யாரும் ஆதிரையைக் கண்டு கொள்ளவில்லை. இவ்வளவு குதிக்கும் ஆதிரை, சற்று நேரத்திற்குப் பிறகு எஃப்ஜே, மீண்டும் அவரிடம் மன்னிப்புக் கேட்க வந்தபோது, அவரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளவேயில்லை, இதுதான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எஃப்ஜே, ஸாரி சொல்லும்போது அவரைத் தொடுவது, கட்டிப்பிடிப்பது, கொஞ்சுவது என்று நடந்து கொள்கிறார். அதைப் பார்த்து, ’எப்படி, தான் கோபத்தில் இருக்கும் ஒரு நபரை இப்படி நடந்துகொள்ள அனுமதிக்க முடிகிறது? என்ன இது?’ என்றுதான் நமக்குத் தோன்றியது.

உண்மையில் இந்த ஆதிரைக்கு எஃப்ஜே மீது ஒரு கிரஷ் இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கூட கருத்தில் கொள்ளாமல், கிஸ் கேட்பது வரை போய் மாட்டிக்கொண்டு, வெளியேவும் போய்விட்டார். வெளியே போனதும், ‘ஆமாம், தெரியாமல் கொஞ்சம் லவ் பண்ணிவிட்டேன்தான். ஆனால், அதென்ன அவ்வளவு பெரிய தவறா? அதற்கு தாம் வெளியே வந்தது மட்டுமல்லாமல், நைஸாக தம் மீது மட்டுமே தவறு என்பது போல திருப்பிவிட்டுவிட்டானே, இவனைப் பழி வாங்க வேண்டும்’ என்று வன்மத்தை வளர்த்துக் கொண்டுவிட்டார். ஆனால், தம் மீதும் தவறு இருக்கும்போது, இந்த உமன் கார்டு, விக்டிம் கார்டு எல்லாம் எடுபடாது என்பது அவருக்குப் புரியவில்லை. அப்படியே பழிவாங்க உள்ளே வந்தாலும், எஃப்ஜேவை எப்படிக் கையாள்வது என்றும் தெரியவில்லை. முதலில் அவருக்குக் கோபப்படவே தெரியவில்லை. அப்படியே எஃப்ஜே மீது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பழி போட்டாலும், எஃப்ஜே மல்லுக்கு நிற்காமல் சிம்பிளாக மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போய்விடுகிறார். அப்புறம் எப்படிப் பழிவாங்குவது என்றும் அவருக்குப் புரியவில்லை. துணைக்கு வியானாவை கூப்பிட்டால், நீ அவன் பின்னால் சுற்றியதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு என் லிமிட் தெரியும் என்று விலகிப் போய்விடுகிறார். இப்படி பாதிப்புக்குப் பழிவாங்க உள்ளே வந்து, மேலும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார் ஆதிரை.

FJ in Court Task
FJ in Court Task@jiohotstar

அடுத்து மூன்றாவது வழக்காக, பாரு, எஃப்ஜே மீது ‘இத்தனை பெரிய ஒரு நிகழ்ச்சியில், கல்யாணமான அமித்துடன் சேர்த்து வைத்து என்னைக் கேலி செய்து என் புகழைச் சரித்து விட்டார்’ என்று வழக்கு போட்டிருந்தார். வெறுமனே ’அமித்’ என்று கூட குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், ’கல்யாணமான அமித்’ என்று வலுக்கட்டாயமாக பாரு குறிப்பிட்டதில் இருந்தே, அவருக்குத் தேவையென்றால், யாரையும், எதற்காகவும், எப்படியும் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை என்று புரிந்து கொள்ளலாம். உண்மையில், அந்த சம்பவம் நடந்த போது எஃப்ஜே, அப்படியான எந்த உள்ளர்த்தத்தோடும் அதைச் சொன்னது போல தெரியவில்லை. கேலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார். பாருவுமே அந்தச் சமயத்தில் சிரித்துக் கொண்டுதான் இருந்தார். 

இங்கே இப்படி இன்னொரு வாய்ப்பு கிடைத்ததும் அதை தூக்கிக் கொண்டு வந்து மீட்டர் போட்டுக் கொள்ளலாம் என்பது பாருவின் நினைப்பு. ஆனால், இந்தக் கேசையும் முடிந்தவரை உழப்பிவிட்டு, மன்னிப்புக் கேட்டு முடித்து வைத்து விட்டார் எஃப்ஜே. அப்படியும் பாரு, ‘அவர் ஆதிரையிடம் கேட்டது போல, மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவில்லை, இது சிம்பிள் மன்னிப்பாக இருக்கிறது’ என்ற புலம்பல் ஒருபக்கம், கேஸில் ஜெயித்த மகிழ்ச்சி ஒருபக்கம் என உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தார். இப்படியும் ஒரு ஜென்மம்!

இன்றைய சோகம்:
தட்டு நிறைய சோற்றை வைத்துக்கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த பாரு பக்கத்தில் இருந்த அமித்திடம், ’நாங்கள் செய்த தவறால் வீட்டில் எல்லோருக்குமே டீ, காபி கிடைக்காமல் போய்விட்டது என்று நினைக்கும் போது எனக்கு சாப்பாடு இறங்க மாட்டேங்குது’ என்று சொன்னார். அதைக்கேட்ட அமித், ’சாப்பாடு இறங்கவில்லை என்றால் சாப்பிடாதே, அப்படியே வைத்துவிடு! எனக்கெல்லாம் அப்படித் தோன்றினால் ஒரு வாய் கூட சாப்பிட மாட்டேன்’ என்று சொன்னதும் பாருவின் முகத்தில் தோன்றிய உணர்ச்சி!

Puthuyugam
www.puthuyugam.com