முடிந்தது பிரஜின், சாண்ட்ரா பிக்னிக்! #Biggboss Day63

அடுத்து பாருவை எழுப்பி, ’பிக்பாஸ் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் பேசுவதைக் கூட கேட்காமல், அப்படிக் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தீர்களே… என்ன விஷயம்?’ என்று கேட்டார்.
Vijay Sethupathi Hosting BB9
Vijay Sethupathi Hosting BB9JioHotstar
Published on

’தான் உழைக்காமல் பிறரின் உழைப்பைச் சிறுமைப்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நபர்கள் யார்?’ என்று ஒரு கேள்வியை கேட்டு இன்றைய நிகழ்ச்சியைத் தொடங்கினார் விஜய் சேதுபதி. சிலர் கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் சொன்னார்கள். பலர் வழக்கம் போல அவர்களின் விரோதிகளின் மீது வன்மத்தைக் கொட்டினார்கள். 

சாண்ட்ரா, கனியின் தலைமையில் இயங்கி, எப்போதோ செத்துப் போய்விட்ட அன்புக் குழுவை இன்னும் சொல்லிக் கொண்டிருந்தார். இவருக்கு எப்போதெல்லாம் பேசுவதற்கு பாயிண்ட் கிடைக்க வில்லையோ, ‘எங்கப்பா, அந்த ஆட்டோக்கார தம்பி’ என்பது போல உடனே கனியையும், அன்பு குழுவையும் எடுத்துக்கொள்வார். இத்தனைக்கும் இவர் தலைமையிலான பிரஜின், சாண்ட்ரா, பாரு போன்றோர் இருக்கும் வன்மக்குழுதான் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பாரு எழுந்து, ‘வீண் வம்பிழுக்கிறேன், சண்டை போட்டு விளையாடுறேன், லவ் கண்டெண்ட் பண்றேன்… இப்படின்னு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி எஃப்ஜேதான் என் விளையாட்டை கெடுத்து அவர் முன்னேறப் பார்க்கிறார் சார்’ என்றார். எஃப்ஜே சொன்னதில் அப்படி என்ன இல்லாதது இருக்கிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அடுத்து, நெக்லஸ் டாஸ்க்கில் நடந்த சில விஷயங்களை விசாரித்துக் கொண்டிருந்தார். வினோத், ‘டெட் பாடியைச் சுத்தி உட்கார்ந்திருப்பது போல உட்கார்ந்துவிட்டார்கள் சார், பிறகு எப்படி சார் எடுக்க முடியும்? அதோட ஆட்டம் முடிஞ்சு போச்சு!’ என்று சொன்னார். அதற்குச் சிரித்துவிட்டு, 

‘வினோத், அடுத்தவர்கள் உங்களை ஏதாவது விமர்சனம் செய்தால்…’

‘அது வந்து பாருவும், கமருவும்…’ 

‘வினோத், அடுத்தவர்கள் உங்களை ஏதாவது விமர்சனம் செய்தால், அதை பொறுமையாக கேட்பது கூட…’

‘இல்ல சார், அது வந்து அமித் பேசும் போது…’

‘வினோத், அடுத்தவர்கள் உங்களை ஏதாவது விமர்சனம் செய்தால், அதை பொறுமையாக கேட்பது கூட இல்லை. நீங்க உடனடியாக குறுக்கே…’

‘பிரஜினும், சுபியும் சேர்ந்துகொண்டு…’

‘யோவ், முதல்ல என்னைப் பேச விடுங்கய்யா, நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளுங்க. அப்புறமா பதில் சொல்லுங்க. அடுத்தவர்கள் உங்களை ஏதாவது விமர்சனம் செய்தால் அதைப் பொறுமையாக கேட்பது கூட இல்லை, நீங்க உடனடியாக குறுக்கே போறீங்க, அப்படி செய்யாதீர்கள். இதோ இப்ப என்னை பேச விடாம பண்ணினீங்கள்ல அதுதான் உதாரணம். இது பார்க்க நல்லாயில்ல. பார்த்து விளையாடுங்க, உக்காருங்க’ என்று உட்கார வைத்தார்.

Gana Vinoth
Gana VinothHotstar

அடுத்து பாருவை எழுப்பி, ’பிக்பாஸ் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் பேசுவதைக் கூட கேட்காமல், அப்படிக் கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தீர்களே… என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

‘நான் சொல்லும் போது யாரும் கேட்கவில்லை சார். ஆனால், நான் சொன்ன அதே விஷயத்தை ரம்யா சொல்லும் போது கேட்டார்கள் சார். இது என்ன சார் நியாயம்?’

’இங்க யார்தான், யார் பேச்சைத்தான் கேட்கிறீர்கள்? உங்க பேச்சை மத்தவங்க எதுக்குக் கேட்கணும்னு நினைக்கிறீங்க? இங்க ஒருத்தரும், ஒருத்தர் பேச்சையும் கேட்க மாட்டாங்க என்பதால்தான், அங்கே வீட்டுத்தல என்று ஒரு போஸ்டிங் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு ஆளும் வைக்கப்பட்டிருக்கிறார்! அந்த ஆள் சொன்னால்தான் ஓரளவுக்குக் கேப்பாங்க, அது சரிதானே! அங்கே கதறிக்கிட்டு இருந்த பிக்பாஸ் சொன்னதயே நீங்க கேட்கலயே, நீங்க பேசலாமா இதை?’ என்று பாருவின் வாயில் கொஞ்சம் மண்ணள்ளிப்போட்டு உட்கார வைத்தார்.

அடுத்து கமருவும், திவ்யாவும் மோதிக்கொண்ட பிரச்சினை பற்றியும் மெலிதாக விசாரித்து முடித்து வைத்தார். இன்றைக்கு இது போன்ற பல பஞ்சாயத்துகள் ஓரிரு வரிகளில் முடித்து வைக்கப்பட்டன. நேற்று முழுவதும் துணி ஊற வைத்த வாளி பஞ்சாயத்தை வைத்து முழு எபிசோடையுமே ஓட்டிவிட்டதால், இப்படி மற்ற எதையும் விசாரிக்க நேரமில்லாமல் போய்விட்டதால் இந்த நிலைமை!  முழுமையாக விசாரித்தாலே ஒரு பஞ்சாயத்துக்கும்  நாட்டாமையிடமிருந்து சரியான தீர்ப்பு கிடைக்காது. இதில் இவ்வளவு வேகமாக போனால் என்ன கிடைக்கும்?

கடைசியாக எவிக்சன் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். பாரு, கமரு ஜோடியைப் பிரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாம் கணித்து வைத்திருந்தோம். போலவே, பிரஜின், சான்ட்ராவும் பிரிக்கப்பட வேண்டிய ஜோடிகள்தான்! குறிப்பாக, அவர்கள் இருவரையும் காப்பாற்ற வேண்டுமானால், அவர்களைக் கைவிடுவதுதான் விஜய் சேதுபதிக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் பேசியிருந்தோம். 

//இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிரஜினையும், சான்ட்ராவையும் கைவிடுவது மட்டும்தான்! மாறாக, அவர்களைக் காப்பாற்ற நினைத்தால், அது அவர்களையும் கெடுத்து, தானும் கெட்டு, நிகழ்ச்சியையும் கெடுப்பதாகத்தான் அமையும்!//

பிரஜினை வெளியேற்றினார்கள். சரியான முடிவுதான்! புருஷன், பொண்டாட்டி இந்த நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்பதில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அதற்குச் சரியான ஆட்கள் இல்லை என்பதை வந்த ஓரிரு நாட்களிலேயே காட்டிவிட்டார்கள். இருவரும், முழுவதுமாக ஒருவரை ஒருவர் சார்ந்துதான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, சான்ட்ரா புருஷனோடு பிக்னிக் வந்த வந்த தோரணையிலேயே இருந்து கொண்டிருந்தார். கேட்டால் இண்டிவிஜுவல் கண்டஸ்டண்ட்ஸ் என்று காமெடி வேறு செய்துகொண்டிருந்தார்கள். 

Sandra Amy
Sandra Amy Hotstar

அதோடு, நண்பனுக்கு புகழ்வெளிச்ச வாய்ப்புக் கொடுப்போம் என்று நினைத்து உள்ளே அனுப்பியது இப்படி பேக்ஃபயர் ஆகும் என்று விஜய் சேதுபதியே நினைத்திருக்க மாட்டார். இதற்கு மேல் பிரஜினை உள்ளே வைத்திருந்தால் அது பிரஜினுக்கும் கேடு, தனக்கும் கேடு என்பது புரிந்து, எவிக்ட் செய்துவிட்டு அவரையும் காப்பாற்றி, நட்பையும் காப்பாற்றிக்கொண்டார். 

எதிர்பார்த்தது போலவே சான்ட்ரா, இதற்காகக் கதறி அழுது கொண்டிருந்தார். பிரஜின் வெளியே போவது நிஜமாகவே சான்ட்ராவுக்கு வருத்தமாகத்தான் இருந்திருக்கும் மற்றும் தொடர்ந்து விளையாடுவதற்கான பலமும் குறைந்திருக்கும் என்பது உண்மைதான்! ஆனாலும் இந்த அளவுக்கு இறங்கி, பிரஜினுக்காக திறந்த கதவுக்கு வெளியே ஓடுவது, யார் சமாதானம் சொன்னாலும் அடங்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது, கதவில் முட்டிக்கொண்டு அழுதது என ட்ராமா போட்டதெல்லாம் சற்றே ஓவர்தான். அவர் தெரிந்தேதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. ஆனது ஆகிப்போச்சு, முடிந்தவரை சிம்பதி மீட்டர் போட்டுக் கொள்வோம் என்ற எண்ணமாக இருக்கலாம்.

Puthuyugam
www.puthuyugam.com