நெக்லஸ் டாஸ்க்கில், இரண்டு குழுக்களும் இரண்டு நெக்லஸ் பெட்டிகளைச் சுற்றியும் படுக்கையைப் போட்டுக் கொண்டு செட்டிலாகிவிட்டிருந்தனர். சுழற்சி முறையில், இரண்டு இரண்டு பேராக விழித்துக் கொண்டிருந்து நெக்லஸைப் பாதுகாக்கவும், மற்றவர்கள் ஒழுங்காகத் தூங்கி எழுந்திருக்கவும் செய்யலாம். இங்கே, அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாகப் படுக்கையை நெக்லஸின் அருகில் போட்டிருந்தாலும் பலரும் சிவனே என்று தூங்கிவிட்டார்கள். ஒரு சிலர் மட்டும் விடிய விடிய விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் நெக்லஸை இன்னொருவர் திருடுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இங்கேயும் வந்து கமருவும், பாருவும் ஒருவருக்கு அருகில் இன்னொருவர் படுத்துக் கொண்டு கட்டிப்பிடிப்பது, முதுகு பிடித்து விடுவது, கைகால் அமுக்கி விடுவது என்று லவ்வர்ஸ் மோடிலேயே இருந்து கொண்டிருந்தனர்.
கருப்புப் போர்வையை தலைக்கு மேல் மூடிக்கொண்டு பாத்ரூம் பக்கமாக பேய் போல உலாத்திக் கொண்டிருந்த வினோத்தைப் பார்த்து அரோராவும், சுபியும் பயந்து போனார்கள். ’இப்படியெல்லாம் பண்ணாதீங்கண்ணா, பயமா இருக்கு! இது ஜாலியால்லாம் இல்ல’ என்று இருவரும் புலம்பியதற்கு, ’பயமா இருக்குன்னா போய் பெட்ரூமில் படுத்துத் தூங்கிடுங்கம்மா’ என்று பதில் சொன்னார் வினோத்.
நெக்லஸின் அருகில் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்து சான்ட்ரா போட்டு வைத்த சேரில், சுபி வந்து உட்கார்ந்து கொண்டார். அதனால், இருவருக்குமிடையே நீண்ட நேரமாக, பார்க்கிற நமக்கே எரிச்சலேற்படும்படி, விளையாட்டைத் தாண்டிய ஒரு தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருந்தது. இந்தப் பஞ்சாயத்தில் எதிரணியில் இருந்த புருஷர் பிரஜின் தமக்கு ஆதரவாக வரவில்லையே என்ற ஆதங்கமும் சான்ட்ராவுக்கு ஏற்பட, புருசன், பொண்டாட்டிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரஜினின் இண்டிவிஜுவல் கண்டெஸ்டண்ட் விரதத்துக்கு வந்தது சோதனை!
அடுத்து ஆதிரை, வினோத்துடன் ஏதோ வம்பிழுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் பதிலடி கொடுக்கவும், ஆதிரைக்கு ஆதரவாக திவ்யாவும் சேர்ந்துகொண்டு கொஞ்ச நேரம் வினோத்துடன் சண்டைக்குப் போனார்கள். நாளைக்கு ஏதும் பஞ்சாயத்து வந்துவிடப் போகிறது என்ற பயத்தில் தல ரம்யா, கொஞ்ச நேரம் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்படித்தான் எழுதுவதற்கு கூட ஒன்றும் தேறாமல் இன்றைய எபிசோடு, வளவளவென்று போய்க் கொண்டிருந்தது. இதே எண்ணம் பிக்பாஸுக்கும் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. இதுவரை வந்த சீசன்களிலேயே, இந்த சீசன்தான் மிகவும் மொக்கையாகப் போய்க்கொண்டிருக்கிறது, போட்டியாளர்கள் இந்த விளையாட்டைப் புரிந்து கொள்ளாமல் வெறுப்பேற்றுகிறார்கள் என்று ஒரு பேச்சு இணைய வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. நமக்கும் கூட அதே எண்ணமுண்டு. கடைசியாக, பிக்பாஸே அதை இப்படி ஒத்துக் கொள்வார் என்று நாமே எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த டாஸ்க்கின் நடுவே அனைவரையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு,
’இப்படியான ஒரு கேவலமான சீசனை நாங்கள் இதுவரை பார்க்கவே இல்லை. எவ்வளவு முயற்சிகள், முன்னேற்பாடுகள், அறிவுரைகள் தந்தும் தண்டமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். இதுவரை வந்த ஒவ்வொரு சீசனின் போட்டியாளர்களையும் என்னுடையவர்கள் என்ற நிலையில்தான் என் மனதில் வைத்திருப்பேன். முதல் முறையாக நீங்கள் அந்தத் தகுதியை இழந்திருக்கிறீர்கள். நடிப்பதற்கும், புகழ்பெறுவதற்கும், பொது மக்கள் முன்னால் தங்களை வெளிப்படுத்துவதற்கும் கிடைத்த இந்த வாய்ப்பை, இப்படி நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்கிற கூத்துக்கு விஜய் சேதுபதியே வேலையை விட்டுவிட்டு ஓடிவிடுவார் போலிருக்கிறது. அவரது காலில் விழுந்து சமாதானம் பண்ணி வைத்திருக்கிறேன். விட்டால், இந்த சீசனோடு தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியே நடத்த முடியாத அளவுக்கு கொண்டு போய் நிறுத்திவிடுவீர்கள் போலிருக்கிறது. இனியாவது ஒழுங்காக விளையாடி என் மதிப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்’
என்று கோபமும், மிரட்டலுமாக கத்தித் தள்ளிவிட்டார் பிக்பாஸ்! பிக்பாஸ் குரலில், இதுவரை இப்படியான கோபத்தை நாமே கேட்டது போல நினைவில்லை. இந்தக் அறிவிலிகளுக்கு இது வேண்டியதுதான் என்று தோன்றியது! அதற்குப்பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, இதை முன்னிட்டு மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து ஒரு தினசரி டாஸ்க் நடந்தது. டாஸ்க் ஏரியாவில் நடந்த அந்த விளையாட்டின் முடிவில் இரண்டு குழுக்களும் நெக்லஸ் டாஸ்க்கைக் கொஞ்ச நேரம் மறந்து போயிருந்தனர். அதை முடித்துவிட்டு, வெளியே வந்த பிரஜினும், சுபியும் நெக்லஸ் ஞாபகம் வந்ததும் ஓடிப்போய் எதிரணி நெக்லஸை எடுத்து ஒளித்து வைத்துவிட்டனர். இதிலும் ஓர் அழுகுணி ஆட்டம் நடந்திருக்கிறது. விக்ரம், எதிரணியை டாஸ்க் ஏரியா கதவை அடைத்துப் பிடித்து வரவிடாமல் செய்திருக்கிறார் போலிருக்கிறது. இதற்குப் பதிலடியாக சபரி, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களின் நெக்லஸை எடுத்து அழுகுணி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து ஆலமரத்தடி பஞ்சாயத்து ஆரம்பமானது.
ரம்யா இந்த பிரச்சினையைப் பொதுவில் பேச, ’நான் சொன்ன விசயத்தையே நீ இங்க சொல்லிகிட்டிருக்க’ என்று பாரு என்று கொந்தளித்தார். அதிலென்ன தவறோ தெரியவில்லை. இதில், ரம்யா, ‘நீ கொஞ்சம் பொத்திகிட்டு இரு, நான் பேசி முடிச்சிக்கிறேன்’ என்று சொல்ல, பாருவுக்கு சப்போர்ட்டாக கமரு உள்ளே வந்தார். பாரு, கமரு, ரம்யா, திவ்யாவுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடக்க ஆரம்பித்தது. சில வாரங்களாக அடங்கியிருந்த கமருவின் நிஜ குணம் வெளிப்பட்டது. தேவையில்லாத வார்த்தைகளை விட்டுக் கொண்டிருந்தார். இப்பதான் பிக்பாஸ், இவர்கள் விளையாடும் லட்சணத்தைச் சொல்லி, திட்டிவிட்டுப் போனார், அதற்குள் கேரக்டர்களிலிருந்து எல்லோரும் வெளியே வந்து சொதப்பிக் கொண்டிருந்தனர். விஜய் சேதுபதி என்ன, பிக்பாஸே வேலையை ரிஸைன் செய்து விட்டுப் போகப்போகும் நாள் வெகுதொலைவிலில்லை!