மீண்டும் வீட்டுக்குள் வந்த ஆதிரை #Biggboss Day 57

எஃப்ஜே, சொல்வது ஓரளவுக்கு சரிதான்! உள்ளே இருந்த போது, எந்நேரமும் எஃப்ஜேவின் பின்னாலேயே சுற்றியது, சாப்பாடு ஊட்டி விட்டது, நீதான் என் பலவீனம் என்று சொன்னது என எல்லாவற்றையும் செய்தது ஆதிரைதான்.
Vj paaru and Viyana
Vj paaru and Viyana@jiohotstar
Published on

வெளியே அனுப்பப்பட்ட பிறகு, ஆதிரை கொடுத்த பேட்டிகளில் எல்லாம், ’நான் ஒன்றுமே செய்யவில்லை, எஃப்ஜேதான் என்னை பயன்படுத்திக் கொண்டான். இந்த மக்களுக்கு அது புரியவில்லை, மக்கள்தான் தப்பாக ஓட்டு போட்டு அனுப்பி விட்டார்கள்’ என்று பார்வையாளர்கள் மீது பழி போட்டுக் கொண்டிருந்தார். இப்போது உள்ளே போன போன பிறகு மக்களிடம், ’இப்போதாவது சரியாக சிந்தித்து, எனக்கு சப்போர்ட் பண்ணுங்கள் மக்களே’ என்பது போல கேமராவில் சொல்லிக் கொண்டிருந்தார். விளங்கினாப்பலதான்!

இவர் பேட்டி கொடுத்த அழகைப் பார்த்துதான் இந்த பிக்பாஸ் டீம், விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் எஃப்ஜேவை, இவராவது காட்டமாக ஏதாவது கேட்பார் என்று நினைத்து உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். நாமும் அப்படி ஆர்வமாகக் காத்திருந்தால், அப்படி எதுவும் நடப்பது போல தெரியவில்லை. ஆதிரை, எஃப்ஜேவை உட்கார வைத்து,

‘அப்புறம்?’

’நீதான் சொல்லணும்’

‘நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்’

‘என்னத்தை பார்த்தே?’

‘நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்’

‘அதான் என்னத்த பார்த்த?’

‘நீ பண்ணினதை எல்லாம் பார்த்துட்டேன்’

‘நான் என்ன பண்ணினேன்?’

‘நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்’

’ஏதாவது பேசுறதாக இருந்தால் பேசு, இல்லையென்றால் இடத்தைக் காலி செய். ஏற்கனவே நீ வெளியே போனதற்கு நான்தான் காரணம் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவே எனக்கு கில்ட்டாக இருக்கிறது’

’தப்பு செய்தால் கில்ட் வரத்தானே செய்யும்’

’நான் என்ன தப்பு செய்தேன்? நீ தான் ஃபீலிங்ஸ் என்று சொன்னாய்?’

‘நான் எப்போது பீலிங்ஸ் என்று சொன்னேன்?’

’நீ தான் சாப்பாடு ஊட்டி விட்டாய், என் பலம், பலவீனம் எல்லாமே நீ தான் என்று சொன்னாய்’

’ஓ, அப்படிச் சொன்னால், அதற்கு ஃபீலிங்ஸ் என்று அர்த்தமா?’

Captaincy Task
Captaincy Task@jiohotstar

எஃப்ஜே, சொல்வது ஓரளவுக்கு சரிதான்! உள்ளே இருந்த போது, எந்நேரமும்  எஃப்ஜேவின் பின்னாலேயே சுற்றியது, கட்டிப்பிடித்தது, மடியில் படுத்து உருண்டது, சாப்பாடு ஊட்டி விட்டது, நீதான் என் பலவீனம் என்று சொன்னது என எல்லாவற்றையும் செய்தது ஆதிரைதான். அவரது விளையாட்டு ஊற்றிக்கொண்டதும், இப்போது பழியை எஃப்ஜேவின் மீது மட்டும் போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார். அதோடு மேலே சொல்லப்பட்ட உரையாடல், இருவருக்கும் இடையே கொஞ்சிக் கொள்ளும் தொனியில்தான் இருந்ததே தவிர, விவாதமாகவோ, தட்டிக்கேட்கும் பாணியிலோ இல்லை. இந்த பிக்பாஸ் குழுவினரும், ஏதாவது கோர்த்துவிட்டு இந்த சீசனில் கொஞ்சம் சுவாரசியத்தை கொண்டு வந்துவிடலாம் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடப்பது போல தெரியவில்லை. போட்டியாளர்களின் லட்சணம் அப்படி!

சென்ற வார இறுதியில், விஜய் சேதுபதி முன்னிலையில் மீனவர்கள் பற்றி ஒரு பாட்டுப்பாடி பாராட்டு வாங்கியிருந்தார் சுபி. இது நல்லாயிருக்கிறதே என்று அதே படைப்பாளி மோடில் இன்று இன்னொரு பாட்டையும் இயற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விக்ரம் உள்ளே புகுந்து, ’என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டதும், ’நான் மீனவர் சமுதாயத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்’ என்று அதே பழைய பல்லவியைப் பாடினார். சுபிக்கு நடிப்பு, பாடல், இசை என்ற எந்த கலையிலும் ஆர்வமோ, பயிற்சியோ இல்லை. அவருக்கென்று எந்த தனித்துவமும், ஒரு இலக்கும் இல்லை. திடீரென்று யூட்யூபில் கிடைத்த வெளிச்சத்தையும், அதன் மூலம் கிடைத்த இந்த பிக்பாஸ் வாய்ப்பையும் வைத்து உண்மையில் ஒரு நடிகையாகி புகழ், பணம் சம்பாதிக்க முடியுமா என்பதுதான் அவரது சமீபத்தைய எதிர்பார்ப்பு. அதில் தவறில்லை! ஆனால், அதை வெளிக்காட்டாமல், மீனவர் சமுதாயத்திற்காக தாம் போராடுவதாக பில்டப் செய்வதுதான் பிரச்சினை. இப்படிச் செய்வதால் அந்த சமுதாயத்தின் பின்னணியை இந்த விளையாட்டில் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்றுதான் அது புரிந்து கொள்ளப்படும்! இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுக்காக போராடி திடீர் வெளிச்சத்துக்கு வந்த ஜூலியின் நிலைமைதான்.

Aadhirai in Confession room
Aadhirai in Confession room@jiohotstar

விக்ரம், ’நீ உன் சமுதாயத்தின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது, நீ யாரென்று தெரியவில்லை’ என்று சொன்னபோது, அதைக்கூட புரிந்து கொள்ளாமல், ’என் பெயர் சுபி, நான் ரொம்ப நல்லவள், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன், எனக்குத் தோன்றியதைத் தயங்காமல் பேசுவேன், பொய் சொல்லமாட்டேன், ஹார்ட் ஒர்க் பண்ணுவேன், என் கண் முன்னால் தப்பு நடந்தால் தட்டிக்கேட்பேன், இதுதான் நான்’ என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வயதில் இப்படிப் புரிதலில்லாமல் இருப்பது பெரிய தவறு ஒன்றுமில்லை. வெளியே வந்த பிறகு, அவர் தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவரது வெற்றி இருக்கிறது.

அடுத்து, தல போட்டி நடந்தது. கட்டைகளை அடுக்கித் தள்ளிவிட்டு, மேஜையிலிருக்கும் பந்தை கீழிருக்கும் கூடையில் தள்ளிவிட வேண்டுமாம். பிக்பாஸ், விசே, சாண்ட்ரா என அனைவரும் திட்டமிட்டு, கஷ்டப்பட்டு பிரஜினை இந்தப் போட்டிக்குள் கொண்டுவந்த பின்னரும், அனைவரது உழைப்பையும் வீணடித்து, ரம்யாவிடம் தோற்றுப்போனார். ரம்யா வீட்டுத்தல ஆனார்.

அடுத்து, நாமினேஷன்! நாமினேஷன் நடந்து கொண்டிருக்கும் போது கூட, தேமே என்று உட்கார்ந்திருக்க முடியாமல் பாரு, வியானா போன்றோர் நாய் குரைக்குமளவுக்குத் தூங்கிவிட்டனர். இதெல்லாம் நாம் இந்த சீசனில்தான் பார்க்கிறோம். ஓட்டுக்கள் பரவலாக விழுந்து அன்புக்குழு, வன்மக்குழு என எல்லோரும் நாமினேஷனுக்குள் கும்பலாக வந்தார்கள். ஒரு ஓட்டு வாங்கிய கனி, சுபியையும் உள்ளே தூக்கிப் போட்டார் பிக்பாஸ்! இந்தாள் இந்த இரண்டு பேர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார் என்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அனேகமாக சுபியின் ஃப்யூஸை இந்த வாரம் பிடுங்கி விடுவார்கள் என்று தோன்றுகிறது.

பாருவை நாமினேட் செய்ததற்காக, அரோராவிடம் வந்து நியாயம் கேட்டுக் வந்தார் கமரு. எடுத்தவுடனேயே, ’உன்னை அவள் சாணியைக் கரைத்து  ஊற்றி அடித்தாலும், நீ அவள் பின்னாடியேதான் போவாய் என்பது எனக்குத் தெரியும். அவளைப் பற்றிப் பேசுவதானால் என்கிட்ட வராதே’ என்று அடித்து விரட்டினார். அரோராவின் இந்த அளவு கோபத்தை, நாமே கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால், கமருவுக்கு இது தேவைதான்!

Puthuyugam
www.puthuyugam.com