இரண்டாவது வாரம் 'வீட்டுத்தல' ஆன FJ! #Biggboss Day 50

தல போட்டி நடத்துவதற்கு முன்பாகவே நாமினேஷனை அறிவித்தார் பிக்பாஸ். தல போட்டியில் ஜெயிப்பவர்கள் நாமினேஷனில் இருந்தால், அது விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்!
Sabarinadhan
Sabarinadhan@jiohotstar
Published on

நேற்று, சான்ட்ராவின் அழுகைக் காட்சி ரொம்பவே டூ மச்சாக இருந்தது என்று நாம் நினைத்தோமல்லவா, அது நமக்கு மட்டுமல்ல சான்ட்ராவின் புருசர் பிரஜினுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. ’அவர் அப்பா மறைந்த போது கூட இப்படி அழுததில்லை, இதற்குப் போய் ஏன் இப்படி நடந்துகொண்டாரோ தெரியவில்லை’ என்று பிரஜின் யாரிடமோ ஆச்சரியமாக பேசிக்கொண்டிருந்தார்.

விக்ரம் காலையிலேயே ஏதோ ஒரு சிறிய நிகழ்ச்சி நடத்தினாராம். அப்போது சான்ட்ரா குளிக்க போயிருந்ததால் அதைப் பற்றி பாருவிடம் விசாரித்தார். பாருவும் மண்டையை ஆட்ட, ’நான் செருப்புக் கழுவ போயிருந்தேன்’ என்று விக்ரம் காது படவே வன்மத்தை கொட்டினார். அதாவது அவர் நிகழ்ச்சியைப் பார்ப்பதை விட செருப்பு கழுவுவது எவ்வளவோ மேல் என்று சொல்கிறாராம். நேற்றுதான் அவ்வளவு நடந்திருக்கிறது, ’கட்டுப்பாடாக பேசு பிரஜின், வார்த்தையை விட்டுவிடாதே’ என்று புருஷனுக்கு அறிவுரை சொல்லிவிட்டு, அவர் பேசும் லட்சணத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். அதைக் கேட்ட பாருவுக்கு வெடிச்சிரிப்பு. யாராவது யாரையாவது அசிங்கப்படுத்தினால், அதில் பாருவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!

வியானா, கேசரி செய்து கொடுத்து நான்கு பேரின் கவனத்திற்கு ஆளாகிறார் என்ற செய்தி திவ்யாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்திருக்கிறது. அதில் எப்படியாவது மண்ணள்ளிப் போட வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில், ’காபி போடுவதற்கே இங்கு சீனி இல்லை. இதில் யார் கேசரி செய்யச் சொன்னது? இனி யாராவது கேசரி அது இது என்று கிச்சன் பக்கம் வராதீர்கள்’ என்று வியானாவைத் தாக்கினார். வியானாவும் அந்த விசயத்தில் முடிந்தவரை விவாதம் செய்ய, இருவரும் முட்டிக் கொண்டார்கள்.

அதோடு, ’இருக்கும் மளிகைப் பொருட்களை சரியாக பயன்படுத்தி அனைவருக்கும் தேவையான அளவு உணவைக் கொடுக்காமல் அறைகுறையாகக் கொடுத்தார்கள். இப்போது நிறைய ப்ரொவிஷன் மிச்சமாகியிருக்கிறது. அந்த அளவிற்குதான் இந்த வாரம் கிச்சன் குழுவின் லட்சணம் இருந்தது, இனி வரும் கிச்சன் குழுவாவது கொடுக்கப்பட்ட ப்ரொவிஷனை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தி 7 நாட்களுக்கும், சரியான அளவில் அனைவருக்கும் உணவு தர வேண்டும்’ என்று ஒரு கருத்தையும் இந்த வாரம் கிச்சனை ஆண்ட சாண்ட்ரா, திவ்யாவுக்கு மீது தூக்கிப் போட்டார். சீனி பிரச்சினையில் ஒரு சின்ன குண்டைத் தூக்கி வியானா மீது போட முயற்சித்த திவ்யா, சாண்ட்ரா மீது வியானாவின் பெரிய குண்டு வந்து விழுந்தது. பாப்பாவை நாமும் கூட ஈஸியாக எடை போட்டுவிட்டோம் போலிருக்கிறது. சரியாக சமைத்துக் கொடுத்த கனியை, ’சமையலை முன்வைத்து எல்லோரையும் கைக்குள் போடும் போட்டுக் கொள்கிறார்’ என்று சொல்லித் தாக்கும் சாண்ட்ரா, திவ்யா, பாரு குழு அவர்கள் வசம் கிச்சன் வந்த போது, ’நாம் என்ன, இவர்களுக்கு ஆக்கிக் கொட்டுவதற்கா வந்திருக்கிறோம்?’ எனும் எண்ணத்திலேயே இருந்தால் என்னத்த விளங்கும்?

அடுத்து வழக்கத்துக்கு மாறாக, தல போட்டி நடத்துவதற்கு முன்பாகவே நாமினேஷனை அறிவித்தார் பிக்பாஸ். தல போட்டியில் ஜெயிப்பவர்கள் நாமினேஷனில் இருந்தால், அது விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். குரூப்பிஸத்தை உடைக்கப் போகிறோம், இண்டிவிஜுவல் கேம் விளையாடப் போகிறோம் என்றெல்லாம் சவால் விட்ட வன்மக்குழு பிரஜின், சாண்ட்ரா, திவ்யா மூவரும் தனியாக உட்கார்ந்து, ’குரூப்பாக விளையாடக் கூடாது என்று எந்த ரூல்ஸும் இல்லையே, நாம் குழுவாகத்தானே இருக்கிறோம். இதில் என்ன தப்பு?’ என்று சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதோடு வழக்கம் போல யார் யாருக்கு ஓட்டு போடுவது என்றும் பேசிக் கொண்டார்கள்.

Amit Bhargav
Amit Bhargav@jiohotstar

எதிர்பார்த்தது போலவே போன வாரம் வன்மக்குழு செய்த காரியங்களுக்கு வன்மக்குழு ஆட்கள் நால்வருமே அதிக ஓட்டுக்கள் வாங்கி உள்ளே வந்தனர். அடுத்து பிரஜின், விக்ரம், எஃப்ஜே, சுபி, கமரு ஆகியோர் தல போட்டியில் விளையாடினார்கள். கவனமும், நிதானமும், பொறுமையும் தேவைப்படக்கூடிய ஒரு விளையாட்டாக அது இருந்தது. எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் கிழித்துத் தள்ளிவிடுவது போல, ’தல போட்டிக்கு வா உன்னை வைத்துச் செய்கிறேன்’ என்று விக்ரமுக்கு எதிராக சவால் விட்ட பிரஜினால் அந்த விளையாட்டை முடிக்கக்கூட முடியவில்லை. சுபி, கமரு, எஃப்ஜே மூவரும் முடித்தனர். அதில் எஃப்ஜே வென்று, தொடர்ந்து இரண்டாவது வாரமாக வீட்டுத்தல ஆனார்.

அடுத்து அனைவருக்கும், அவர்களின் விளையாட்டுப் பற்றி அவரவர் நண்பர்களின் விமர்சன விடியோ போட்டுக்காட்டப்பட்டது. பலருக்கும் நிறையவே உருப்படியான குறிப்புகள் கிடைத்தன. அறிவிருக்கிறவர்களால் அதைக் கப்பென்று பிடித்துக்கொண்டிருக்க முடியும். அப்படி யாராவது பிடித்துக்கொண்டார்களா என்பதை வரும் வாரங்களில் அவர்களின் ஆட்டத்தை வைத்துத்தான் சொல்லமுடியும். ஆனால், இவர்கள் மீது நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது, அப்படி ஒன்று நடக்கப்போவதில்லை!

Puthuyugam
www.puthuyugam.com