விஜய் சேதுபதியை பாடாய்ப்படுத்திய வன்மக்குழு! #Biggboss Day 48

வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு தான் ஜெயிலுக்குப் போகச் சொல்லியிருந்தார் பிக்பாஸ்! அந்த வேலையெல்லாம் முடியவில்லை.. ஆனாலும்..
Vijaysethupathi in Biggboss
Vijaysethupathi in Biggboss@jiohotstar
Published on

விஜய் சேதுபதி வந்ததும் முதல் நாள் நடந்ததைக் காண்பித்தார். அதாவது, ஒர்ஸ்ட் பிளேயர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்ட்ரா மற்றும் திவ்யா இருவரையும், பிக்பாஸ் வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு சிறைக்குப் போகச் சொல்லி இருந்தார் அல்லவா? அதன்பின் நடந்தவை. வீட்டு வேலைகளைச் செய்து முடித்தால்தானே சிறைக்குப் போக வேண்டும்? அவனவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் நமக்குச் சாதகமாக இருக்கிறது, என்று வேறு திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர் சாண்ட்ராவும், திவ்யாவும். பிக்பாஸ் சிறப்பு உணவு உள்ளே கொடுத்து விட்டுவிட்டதால் சமையல் வேலை இல்லை, இருந்த பாத்திரங்களை கழுவிப் போட்டுவிட்டு, வீடு பெருக்கிவிட்டு அரை மணி நேரத்தில் சிறைக்குப் போயிருக்கலாம். ஆனால், ஒரே ஒரு அறையை மட்டும் சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று அங்கேயே படுத்து உருண்டு கொண்டு இருந்தார்கள் இரண்டு பேரும்!

இரவு 10 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 4 மணி வரைக்கும் வேலையையும் முடிக்கவில்லை, வேலையை முடித்துவிட்டுத்தான் ஜெயிலுக்குப் போவோம் என்று ஜெயிலுக்கும் போகவில்லை. மேற்பார்வையாளர் விக்ரமையும், வீட்டு தல எஸ் கே வையும் டார்ச்சர் செய்தபடி இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். நடுவில் ஒரு கட்டத்தில், ’எனக்குத் தலைவலியாக இருக்கிறது, டீ போட்டு குடித்துவிட்டு போகிறேன்’ என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார் திவ்யா. ’இங்கு பால் என்பது எல்லோருக்குமானது. ரேஷன்படிதான் கொடுக்க முடியும். வேண்டுமானால் பிளாக் டீ போட்டு குடித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார் எஃப்ஜே!  ஏற்கனவே ஈகோவில் ஆடிக்கொண்டிருந்த ரெண்டு பேருக்கும், இது இன்னும் அதிகமான ஈகோவை தூண்டி விட்டு விட்டது. அதனால் இந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு ஜெயிலுக்குப் போகவே கூடாது, வாரயிறுதியில் விசே வந்து கேட்டாலும் கூட இதை வைத்து கும்மியடித்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

இருவருக்கும் மாரல் சப்போர்ட்டாக கூடவே இருந்துகொண்டிருந்த சாண்ட்ரா புருசன் பிரஜின், ’ஒரு மெடிக்கல் எமர்ஜென்ஸிக்குக் கூட பால் தரமாட்டேங்கிறானே, அதைக் கொண்டு போய் யாருக்கு ஊற்றப்போகிறான்?’ என்று கோபத்தில் கறுவிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ’இந்த பாவம் அவனை சும்மா விடுமா? இந்த பாவத்தையெல்லாம் அவன் எந்தக் காசி, ராமேஸ்வரத்தில் கொண்டு போய் தொலைக்கப் போகிறான்? இந்த பாவம் எல்லாம் அவன் குடும்பத்துக்கு, அப்பா அம்மாவுக்கு, பொண்டாட்டி பிள்ளைகளுக்குதானே போய்ச் சேரும்!’ என்கிற அளவில் சாபம் விட்டுக்கொண்டிருந்தார். அதாவது பொண்டாட்டிக்கு, டீ போட பால் தராதது அவ்ளோ பெரிய பெரும் பாவமாம். பிக்பாஸே எரிச்சலாகி, இரவு ஒரு மணியளவில் இருவரையும் ஜெயிலில் போடுங்கள் என்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார். அப்போதும், அதைக் கேட்காமல் விக்ரம் மட்டுமல்லாது சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களான நம்மையும், நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் டீமையும் ஒட்டுமொத்தமாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள் இருவரும்!

அடுத்து கொஞ்ச நேரம், திவ்யா துணி மாற்றும் அறையில் போய்  உட்கார்ந்துகொண்டு அழுது கொண்டிருந்தார். சான்ட்ரா விக்ரமைக் கூட்டிக்கொண்டு போய், ’பார் நீ படுத்தும் பாட்டில்தான் அவர் அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் உனக்கு அவரை ஜெயிலில் போட்டாக வேண்டும் அல்லவா? போய்க் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போ’ என்று ஒரு டிராமா போட்டார். அப்படி அவர் உள்ளே போனால் அதை வைத்துப் பெரிய சிக்கலை உண்டாக்கி, பெரிய நாடகத்தை அரங்கேற்றிவிடலாம் என்பதுதான் சான்ட்ராவின் திட்டம் என்று நமக்கு பளிச்சென்று புரிந்துவிட்டது. அவர் மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தால், திவ்யாவை அந்த அறைக்குள் போய் அழச்சொன்னதே சான்ட்ராவாக இருக்குமோ என்று இப்போது நமக்கு தோன்றுகிறது. இருவரும் அப்படி செய்திருக்கக் கூடியவர்கள்தான். நல்லவேளையாக அவ்வளவு டார்ச்சர் செய்த பிறகும், விக்ரம் சாண்ட்ராவின் அந்த சதிவலையில் விழவில்லை. ’எனக்கென்னங்க, இது பிக்பாஸ் டாஸ்க்குங்க, நீங்க எப்போ உள்ளே போக போறேன்னு சொல்லுங்க அப்ப வந்து உள்ளே வைத்து பூட்டுகிறேன். அதுவரை நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க‘ என்று சிம்பிளாக சொல்லிவிட்டார்.

Divya Ganesh
Divya Ganesh @Jiohotstar

அதையெல்லாம் பார்க்கப் பார்க்க, நம்மைப் போலவே விஜய் சேதுபதிக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும். முகத்திலேயே எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அதே மனநிலையில் உள்ளே போனார். எந்த வழக்கமான விசாரணைகளும் இல்லாமல் சான்ட்ரா, திவ்யா, பிரஜின் இந்த மூவரின் பஞ்சாயத்துக்கும் போனார். அதையெல்லாம் பேசுவதற்கு இன்றைய முழு எபிசோடுமே போதவில்லை.

முதலில் திவ்யாவையும், சான்ட்ராவையும் எழுப்பினார்!

‘ஒரே கேள்விதான். ஏன் ஜெயிலுக்குப் போக அவ்வளவு தாமதம்?’

ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப்போல ஒரு சிரிப்பு திவ்யாவிடம். அதைப் பார்த்து காண்டாகிவிட்டார் விசே!

’இதுக்கு நீங்க சிரிக்க கூடாது திவ்யா, வெட்கப்படணும்! காரணம் கேட்டா சிரிக்கிறீங்க’

‘ஸாரி சார்’

‘உங்க சாரி தேவையில்ல, காரணத்தைச் சொல்லுங்க’

’வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு தான் ஜெயிலுக்குப் போகச் சொல்லியிருந்தார் பிக்பாஸ்! அந்த வேலையெல்லாம் முடியவில்லை… அதனால்…’

’ஏன் முடிக்கவில்லை?’

‘எனக்கு மெடிக்கல் எமர்ஜென்சி, அதனால்தான் கொஞ்சம்…’

’அப்படி என்ன எமர்ஜென்சி’

‘தலைவலி’

’தலைவலிக்கு டாக்டர் மாத்திரை கொடுத்தாங்களா?’

’குடுத்தாங்க’

’மாத்திரை போட்டிங்களா?’

’போடல’

‘ஏன் போடல?’

‘எஃப்ஜே பால் கொடுக்கவில்லை, அதனால் டீ போடவில்லை. அதனால் மாத்திரை போடவில்லை’
 
அதற்கு மேல் முடியாமல் சான்ட்ராவை நோக்கி திரும்பினார் விசே!

’சரி, அவருக்குத்தான் மெடிக்கல் எமர்ஜென்சி! நீங்கள் ஏன் வேலையும் செய்யவில்லை? சிறைக்கும் போகவில்லை?’

ஐயையோ, இப்படி ஒரு கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் எனக்கும் வயிற்று வலி என்று ஒரு சீன் போட்டிருப்பேனே, இப்போது எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திருவென்று விழித்துக் கொண்டிருந்த சான்ட்ரா, சரி எப்படியோ சமாளிப்போம் என்று நினைத்தபடி, 

’திவ்யாவுக்கு ரொம்ப சீரியஸான தலைவலி இருந்தது. ஒரு உயிர்த்தோழியாக 24 மணி நேரமும் பக்கத்திலேயே இருந்து பார்க்கவில்லை என்றால் திவ்யாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற கவலையில் நான் ஜெயிலுக்குப் போகாமல் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தேன்’

’திவ்யாவுக்கு தலைவலி என்றால் அதை அவர் பார்த்துக் கொள்வார், பிக்பாஸ் மெடிகல் டீம் இருக்கிறது. நீங்க ஏன் ஜெயிலுக்கு போகல? அதற்கு பதில் சொல்லுங்க!’

’ஒரு அறையை கிளீன் பண்ணிவிட்டு திவ்யாவுக்கு தலைவலி என்பதால் டீ போட…’

’எம்மா, திவ்யா தலைவலியை விட்ருங்கமா. அதிகாலை நாலு மணி வரைக்கும் ஏன் சிறைக்குப் போகாம இருந்தீங்க என்பதுதான் கேள்வி. அதற்குப் பதில் சொல்லுங்க’

இதையே திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்தும் உருப்படியான பதில் எதுவும் இல்லாததால் இயன்றவரை இருவரையும் கண்டித்தார். 

’சிரிக்காதீங்க, நீங்க பண்றது எதுவும் நல்லா இல்ல, அசிங்கமா இருக்கு, இரிடேடிங்கா இருக்கு, வீட்டு விதிமுறைகளை மதிச்சு நடங்க, பிக்பாஸ் சொல்றதை முதல்ல கேளுங்க. பிக்பாஸ் கண்ண எப்ப திறந்து வைக்கிறது? எப்ப மூடுறது இதையெல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது. உங்க லிமிட் என்னவோ அதைப் புரிஞ்சுகிட்டு, அதுக்குள்ள விளையாடுங்க’

Prajin
Prajin@jiohotstar

இவ்வளவு சொல்லியும் அவர்கள் இருவருக்கும் ஏதாவது மண்டையில் ஏறி இருக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. அவர்களின் முகபாவனை அந்த அழகில்தான் இருந்தது!

இதற்கிடையே நம் கண் முன்னாலேயே நம் மனைவிக்கு இவ்ளோ பெரிய கொடுமை நடக்கிறதே என்று ரத்தம் கொதித்துக் கொண்டிருந்த பிரஜினின் முகத்திலேயே அது தெரிந்தது. அதைப் பார்த்த விஜய் சேதுபதி, ’டென்ஷன் ஆகாதீங்க பிரஜின். உங்ககிட்ட நான் அப்புறமா வரேன்’ என்று சொன்னார். அதற்கு ’சரி’ என்று கூட சொல்லமுடியாமல், ’எனக்கு என்ன டென்ஷன்? எனக்கு ஒன்னும் டென்ஷன் இல்லை! நான் டென்ஷன் ஆகல! நான் இன்டிவிஜுவல் பிளேயர்! நான் தனி, என் பொண்டாட்டி தனி. நாங்கள் தனித்தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறோம்! என்ன சொன்னாலும் எனக்கு டென்ஷன் வராது. நான் ஏன் டென்சனாகணும்?’ என்று கொஞ்சம் கூட விசேவை மதிக்காமல் டென்ஷனில் பதில் சொன்னார்.

இந்த லூசுப்பய கூடவா நாம் இவ்வளவு நாளாக பழகிக் கொண்டிருந்தோம் என்று மனதுக்குள் நினைத்தபடி அவரை உட்காரச் சொன்னார் விசே. போட்டியாளர்கள் விஜய் சேதுபதியை மதிக்காத தன்மை, கடந்த இரண்டு சீசன்களாக நாம் பொதுவாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்! சேதுபதியும் முடிந்தவரை எப்படிப் பேச வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்ற அடிப்படையான விஷயங்களை கூட பொறுமையாக விளக்கமாகச் சொல்வதும், கண்ணியமாக நடந்து கொள்வதுமாக இருக்கிறார். ஆனால் அதில் பயனில்லை. சில விஷயங்கள் எல்லாம் சொல்கிற முறையில் சொன்னால்தான் புரியும். இவர்களுக்கெல்லாம் ’எல்லோ ஸ்ட்ரைக்ஸ்’ கொடுத்திருந்தால் இவ்வளவு விளக்கம் சொல்லாமலேயே எல்லாம் புரிந்திருக்கும்!

அடுத்து, பிரஜினை எழுப்பி அவர் செய்த அட்டகாசங்களை கேட்க ஆரம்பித்தார். அதைக் கையில் ஒரு பேப்பரிலேயே எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அவ்வளவு வீர வசனங்களை பிரஜின் உதிர்த்திருந்தார்.

’காலி பண்ணிவிட்டுருவேன், வண்டியை விட்டு ஏற்றி விடுவேன், யாருக்கு பால் ஊற்ற போகிறான், உள்ளே யாரு வரணும்னு முடிவு பண்றது, கதவைத் திறந்து வைக்கச் சொல்றேன், நான் சரியா வளர்க்கப்பட்டவன், நான் ஒரு அப்பா, கணவன், ஹீரோ! பாவம் எல்லாம் யாருக்குப் போகும்?’

இதெல்லாம் என்ன என்பது போல வரிசையாக கேட்டார். எதற்குமே உருப்படியான பதில் கிடையாது. எப்படிப் பதில் இருக்கும்? ஏதாவது அறிவோடு பேசி இருந்தால்தானே பதில் சொல்ல முடியும்! 

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தான் திட்டு வாங்கும் போதுகூட சகஜமாக வாங்கிக் கொண்ட சான்ட்ராவால் புருசன் பிரஜின் திட்டு வாங்குவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அடாடா, என்னே ஜோடி! அதோடு பிரஜின், ‘அவன் யாருக்கு பால் ஊற்றப் போகிறான்?’ என்று எஃப்ஜேவைப் பார்த்துக் கேட்டதை ஏன் தடுக்கவில்லை என்று சாண்ட்ராவிடம் கேட்டதற்கு, ’அவர் அப்படிச் சொன்னது எனக்குத் தெரியவே தெரியாது, தெரிந்திருந்தால் கண்டித்திருப்பேன்’ என்று அப்பட்டமாகப் பொய் சொன்னார். பிரஜின், சாண்ட்ரா, திவ்யா மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது நடந்ததுதான் அது. கூடுதலாக, புருசனின் அதே டயலாக்கை, சாண்ட்ராவே அடுத்த சில நிமிடங்களில் பேசிய கிளிப்பிங்கும் இருக்கிறது. அதை விசே குறிப்பிடவே இல்லை! ஆயிரம் கண்டித்தாலும், நண்பனின் குடும்ப மானம் என்ற ஸாஃப்ட் கார்னர் விசேவுக்கு நிச்சயமாக இருக்கிறது. கடைசியில், திவ்யாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவர் மீது பழி போட்டுவிட்டு, ’எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காதீர்கள் சான்ட்ரா’ என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்! விளங்கின மாதிரிதான்!

Puthuyugam
www.puthuyugam.com