நூலிழையில் தப்பிய பிரஜின்! #Biggboss Day49

" '50 நாட்களுக்கும் மேலாக, இந்த ஆள் எல்லாம் எப்படித்தான் உள்ளே தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கிறாரோ?' என்று நீங்கள் நினைப்பது யாரை?" என்றொரு கேள்வியை கேட்டு எல்லோரையும் பதில் சொல்லச் சொன்னார்.
Vj Paaru & Kamurudin
Vj Paaru & Kamurudin@jiohotstar
Published on

விஜய் சேதுபதி வந்ததுமே சான்ட்ராவையும், பிரஜினையும் சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினார். சற்று கேலியான பாணியில், அவர் அதைச் செய்தாலும் அவரது நோக்கம் உண்மையில் அவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் என்று நமக்குத் தெளிவாகவேத் தெரிந்தது. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் செய்த அட்டகாசங்கள் எதையுமே நேற்று அவர் சரியாக விசாரிக்கவே இல்லை, விசாரித்த ஒன்றிரண்டு விஷயங்களிலும் பழியைத் தூக்கி திவ்யாவின் மீது போட்டு இவர்களை முடிந்தவரை காப்பாற்றத்தான் செய்திருக்கிறார். இந்த அழகில் சமாதானம் ஒன்றுதான் கேடு!

அடுத்து, 50 நாட்களுக்கும் மேலாக, இந்த ஆள் எல்லாம் எப்படித்தான் உள்ளே தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கிறாரோ?' என்று நீங்கள் நினைப்பது யாரை?" என்றொரு கேள்வியை கேட்டு எல்லோரையும் பதில் சொல்லச் சொன்னார். இத்தனை நடந்த பிறகும், இந்த டாஸ்கிலும் வன்மக்குழு சபரி, கனி, விக்ரமை குறி வைத்து தாக்கியது. மற்றவர்கள் அனைவரும் ஆளாளுக்கு இரண்டு பேரை சொல்லி விட்டு உட்கார்ந்தார்கள். பெரும்பாலும் ரம்யாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தன.

அரோரா: ரம்யா, பாரு.

விசே: சரி, உக்காருங்க.

கெமி: கமரு, அரோரா.

விசே: சரி, உக்காருங்க.

வியானா: ரம்யா, சபரி.

விசே: சரி, உக்காருங்க.

கனி: பிரஜின், பாரு

விசே: சரி, உக்காருங்க.

வினோத்: ரம்யா, சுபி

விசே: சரி, உக்காருங்க.

திவ்யா: சபரி, விக்ரம்

விசே: சரி, உக்காருங்க.

Prajin and Kemy in Eviction Process
Prajin and Kemy in Eviction Process@jiohotstar

பாரு: நான் வந்து முதல்ல விக்ரம் அவர்களைச் சொல்லுவேன் சார். விக்ரம் அவர்களை ஏன் நான் சொல்கிறேன் என்று கேட்டால், அவர் முதன் முதலில் உள்ளே வந்த போது நாந்தான் அவரிடம் அன்பாகப் பேசினேன். அப்படிப் பேசும் போது அவரிடம் மிகப்பெரிய பல திறமைகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தேன். அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்து, அப்படிச் செய்தால் நீ மிகச் சிறப்பாக விளையாடலாம் என்றும் அறிவுரை கூறினேன். இப்போது அவரிடம் பேச உட்கார்ந்தால், ஒரு கான்வர்சேஷன் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அவர் எப்போதும் ஒரு அக்கன்னாவை வைத்தே என்னிடம் பேசுகிறார். ’நீ இப்படி பண்ணுவதால்தான், நான் அப்படிப் பண்ணுகிறேன் பாரு’ என்று என்னிடமே எப்போதும் வம்புக்கு வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மற்ற எல்லோரிடமும் நன்றாக பழகுகிறார், அன்பாக பழகுகிறார்,  பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார், அவருடைய திறமைகளை நான் சொன்னது போல ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி முன்னேறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், என்னிடம் மட்டும் எப்போதுமே மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு பேசுகிறார். இதனால், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒரு ஹோஸ்ட் ஆன உங்களுக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும், அமெரிக்க அதிபருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று நான் நினைப்பதால், அதை எப்படியாவது சரி செய்து, தேசிய விருதை வாங்கி, அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி, வீட்டுக்குக் கொண்டு போய் இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், விக்ரம் அவர்களை என்னிடம் பேசும்போது மரியாதையாகவும், பணிவோடும், எப்போதும் அன்பாகவும் பேச வேண்டும் என்று நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை கூறி எப்படியாவது விக்ரம் அவர்களைத் திருத்தி…

விசே: பாரு, பாரு, நான் என்ன கேள்வி கேட்டேன்னு இப்படி இவ்வளவு நேரம் சொற்பொழிவாற்றிக்கிட்டு இருக்கீங்க? நான் கேட்டதுக்கும், இப்ப நீங்க சொன்னதுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? முடியல. யப்பா, யாராவது சேர் கொண்டாங்கப்பா!

அடுத்து, யாரெல்லாம் டிஸ்கஷன் செய்து, இன்னொருவரின் பேச்சைக் கேட்டு நாமினேஷன் செய்கிறார்கள் என்றொரு கேள்வியை கேட்டார். இந்த சீசனில் சான்ட்ரா, பிரஜின், பாரு, திவ்யா இந்த நான்கு பேர் கொண்ட குழு மட்டும்தான் இந்த வேலையைத் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறது. வேறு யாரும் அதைச் செய்வதில்லை. பிரஜின் மற்றும் சான்ட்ராவைக் காப்பாற்றும் முயற்சியின் அடுத்த கட்டமாகக் கூட இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், நார்மலைஸ் செய்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், இதற்கு முன்னால் எந்த சீசனிலும் நாமினேஷன் டிஸ்கஸ் செய்து செய்வதை இந்த அளவுக்கு அனுமதித்ததில்லை! ஏதோ ஒரு சீசனில் அதை அனுமதித்து விட்டு, அந்த சீசனே நாறிப்போனது கூட ஞாபகம் வருகிறது!

இதிலும் வன்மக்குழு, தாங்கள் ரொம்ப நல்லவர்கள் போலவும், கனி, சபரி உள்ளிட்ட அன்புக்குழுவினர்தான் நாமினேஷனை டிஸ்கஷன் செய்து ஓட்டு போடுகிறார்கள் என்றும் அழுத்தமாகச் சொல்லி நிறுவப்பார்த்தார்கள்.

அடுத்து எவிக்‌ஷன் நடந்தது. சுபி, ரம்யா, கெமி போன்றோர் வெளியே போகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்த நிலையில், சுபி, ரம்யா காப்பாற்றப்பட்டு கெமியையும், பிரஜினையும் கடைசியாகக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். ஒரு பெரிய ட்ராமா சீனை உருவாக்கும் திட்டம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் நினைத்தது போலவே சான்ட்ரா ஒரு பெரிய சீனைக் நடத்திக் காண்பித்தார். பிரஜினையும், கெமியையும் தனித்தனி காரில் ஏற்றிவிட்டு, ஒரு கார் மட்டுமே மீண்டும் உள்ளே வரும் என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். பிரஜின் ஒரு காரில், ஏற்றப்பட்டதால் சான்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீன் போடுவதற்கெல்லாம் இதில் ஒன்றுமேயில்லை. தனித்தனி போட்டியாளர்கள் என்கிறார்கள், வீட்டில் குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர், யாராவது ஒருவர் போவது நல்லது என்று எடுத்துக் கொண்டிருக்கலாம், இதில் ஒன்றைக்கூட கருத்தில் கொள்ளாமல், விடாமல் ஒப்பாரி வைத்தது, மயக்கம் போட்டது போல நடித்தது எல்லாம் ரொம்பவே டூ மச்சாக இருந்தது. பிரஜின், சாண்ட்ரா மீது ஏற்பட்டிருக்கும் மோசமான இமேஜை நீக்கி, சிம்பதியை உருவாக்கித் தரத்தான் இந்த ஏற்பாடு என்பது ரொம்பத் தெளிவாகத் தெரிகிறது. ஐபிஎல் ஸ்கேம்களைப் போல, பிக்பாஸிலும் சிலபல ஸ்கேம்கள் இருக்கிறது என்று நமக்குத் தெரிந்தாலும், இது ரொம்பவே பல்லிளித்துப் போன ஸ்கேம் என்பது நிச்சயம்!

Puthuyugam
www.puthuyugam.com