வெளியேற்றப்பட்ட தர்பூசணி நாயகன்! #Biggboss Day 42

இல்லக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாதுக்கா, அவன் சீப்பா, தரக்குறைவா பேசிக்கிட்டே இருக்காங்க்கா, அவங்கிட்ட எல்லாம் பேசணும்னு எனக்கு அவசியமே இல்லக்கா
Vijaysethupathi Entry
Vijaysethupathi Entry@jiohotstar
Published on

இன்றைய எபிசோடில் முதலாவதாக கனியும், எஃப்ஜேவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாரு, இரண்டு ஸ்பூன் சாம்பாரைக் கொண்டு போய் சிங்கில் போட்ட விசயம்,  கமருவும், பாருவும் சேர்ந்து விக்ரமின் வளர்ப்பு சரியில்லை என்று சொன்ன விசயம், சீரியஸான கேப்டன் டாஸ்க்கில் வினோத்திடம் காமெடி செய்த ரம்யாவின் சேட்டை போன்ற சின்னச் சின்ன பஞ்சாயத்துகளை வரிசையாக எடுத்து ஆளுக்கொரு கொட்டு வைத்து பைசல் பண்ணிவிட்டார் விசே!

’இந்த வீட்டுக்கு என்று ஒரு  கண்ணியம் இருக்கிறது, அதை உணர்ந்து பொறுப்போடு, சிந்தித்து விளையாடுங்கள்’ என்று நூற்றியொன்றாவது தடவையாக அறிவுரை சொன்னார் விசே! இத்தனை தடவைகள் சொல்லியும் அவர்களது மண்டையில் உறைக்காத இந்த விஷயம், இனியாவது உறைத்து விடாதா எனும் எதிர்பார்ப்பு அவருக்கிருக்கலாம், நமக்கில்லை!

கிடைத்த இடைவேளையில் பாரு ஆர்வமாக, ’வளர்ப்பு சரியில்லை’ என்று சொன்னதற்காக விக்ரமிடம் சாரி சொல்ல வந்தார். அதற்கு விக்ரம், ’இத்தனை நாள் திருந்தாத நீ இன்று அவர் சொன்னதற்காக திருந்தி விடுவாய் என்றெல்லாம் நான் நம்பவில்லை. உன்னை யாராலும் திருத்த முடியாது. ஒருவேளை திருந்தினால் மகிழ்ச்சிதான். எதற்கும் ஒரு இரண்டு வாரங்களுக்காவது அந்த கண்ணியத்தைக் கடைபிடித்துவிட்டு வந்து மன்னிப்பு கேள், அப்போது நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தெளிவாக எடுத்துச் சொன்னார். சாரி சொல்ல வந்த பாரு, தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்துவிட்டு, ’நான் அப்படிச் சொன்னது போலவே ஞாபகம் இல்லை, ஒருவேளை நான் சொல்லியிருந்தால் அதற்கும் நீ தான் காரணம். காமெடி என்று நினைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளை சொல்லி என்று என்னை ட்ரிக்கர் செய்வதே நீதான்’ என்று விக்ரமின் மீதே பழி போட்டார். அதோடு, ’இரண்டு வாரம் கழித்து வந்து மன்னிப்பு கேள் என்று சொல்வதற்கெல்லாம் உனக்கு தகுதி இல்லை’ என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினார். கோர்வையாக இரண்டு நிமிடங்கள் கூட ஒருவர் சொல்ல வரும் கருத்தைக் கவனிக்க முடியாத பாருவா இரண்டு வாரங்களுக்கு கண்ணியத்தை காப்பாற்றப் போகிறார்? ஆனாலும், விக்ரமுக்கு பேராசைதான்!

இன்னொரு புறம் பூசணிக்கு சான்ட்ரா பாடமெடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். யாருக்கு? பூசணிக்கு! நடக்கிற காரியமா அது?

’அதாவது தர்பூச…’

’இல்லக்கா உங்களுக்கு ஒன்னும் தெரியாதுக்கா, அவன் சீப்பா, தரக்குறைவா பேசிக்கிட்டே இருக்காங்க்கா, அவங்கிட்ட எல்லாம் பேசணும்னு எனக்கு அவசியமே இல்லக்கா’

’இப்பதான் சீப்புனு சொல்லக்கூடாதுனு விஜ…’

’இல்லக்கா எனக்குன்னு ஒரு தனி வழி இருக்கு, நான் அது வழியா போகிறேன். என்ன எல்லாம் அவன் கூட ஒப்பிட்டு பேசாதீங்க, அது சரி வராது’

‘நான் யார் கூடயும்…’

’இல்ல, வெளியில எனக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நடிப்பு அரக்கன் டாக்டர் தர்பூசணி ஸ்டார் என்று தமிழகமே என்னை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது’

’நான் இப்ப சொல்ல…’

’எதுவா இருந்தாலும் நான் சொல்றதை நீங்க கேளுங்கக்கா, ஒரு வருஷத்துல இப்படி தமிழ்நாடே என் பின்னாடி வந்து நிற்கிறத பார்த்து எல்லாருக்கும் பொறாமைக்கா’

அதற்கு மேல் முடியாமல் சான்ட்ரா வாயை பொத்திக் கொண்டார். பூசணியின் வாயிலிருந்து இத்தனை அக்காவெல்லாம் பக்கத்தில் சான்ட்ராவின் புருஷன் பிரஜின் இருந்ததால்தான் வந்து கொண்டிருந்தது என்பதை நம்மால் உணர முடிந்தது.

housemates assembled in living room
housemates assembled in living room@jiohotstar

அடுத்து சென்ற வாரம் நடந்த மன்னர் டாஸ்க்கை பற்றி விசாரித்தார் விசே. குறிப்பாக அந்த டாஸ்க்கில் நடந்த பூசணியின் அட்டகாசங்கள் விசாரிக்கப்பட்டன. இதற்கு முன்னரும் சில எக்ஸ்ட்ரீம் தருணங்களில் கொடுக்கப்பட்ட டாஸ்கிலிருந்து போட்டியாளர்கள் விலகியதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருந்தாலும் எந்த காரணமும் இன்றி விளையாட்டை சரியாக புரிந்து கொள்ளாமல் பாதியில் அதை விட்டு பூசணி வெளியேறியதற்கு காரணம் கேட்டார் விசே. காரணம் இருந்தால்தானே சொல்வதற்கு? கேள்வியை புரிந்து கொள்ளாமல் சம்பந்தமில்லாத திசையில் இழுத்துக் கொண்டு போன பூசணியை தடுத்து மீண்டும் அதே கேள்வியில் கொண்டு வந்து நிறுத்தினார். பூசணியிடம் எந்த பதிலும் இல்லை, அவரது புரிதல் அவ்வளவுதான்! 

இளவரசி கேரக்டரில் இருந்த அரோராவிடம் மரியாதை இல்லாமல் பேசியதற்கு காரணம் கேட்ட போது, இளவரசியை விட அமைச்சருக்குதான் அதிக பவர் என்று விளையாடும் போது வாதாடிய அவரது வாய் அமைதியாக இருந்தது. இதுகுறித்து மற்றவர்களிடம் கேட்டபோது, ’நாங்கள் சொன்னோம் சார், ஆனால் அந்தாள் கேட்கிற நிலையில் இருந்தால்தானே ஆச்சு?’ என்று சொன்னார்கள்.

பாருவை எழுப்பிக் கேட்டபோது, ’என் கருத்து என்னவென்று கேட்டால், என்னை எல்லோரும் டார்கெட் செய்து விளையாடுகிறார்கள், கனி தலைமையிலான குழு குரூப்பிசம் செய்து என்னை ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது. என்னை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டு காய்கறி வெட்ட சொல்கிறார்கள், சமைக்க சொல்கிறார்கள் இந்த அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்பதில்லை’ என்று ஆரம்பித்தார். அவரைப் பாதியில் நிறுத்தி, ’அம்மா தாயே, உங்க பிரச்சனைகளை நான் இப்போது கேட்கவில்லை, பூசணி செய்தது சரியா என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி உட்காரச் சொன்னார்.

இத்தனைப் பஞ்சாயத்துகளை விசாரித்த பின்னும், எவிக்சன் செய்வதற்கு முன்னால், சற்று நேரம் இருந்ததால் நேரப் போக்கிற்காக விசே எல்லோரும் அவர்களது கவசம் என்று நினைக்கும் ஒரு குணத்தைச் சொல்லச் சொன்னார் ஒவ்வொருவரும் எழுந்து  அவர் கேட்டதற்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஏதேதோ சொல்லி விட்டு உட்கார்ந்தனர். தலையெழுத்தே என்று விசே அவற்றையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். சபரி எழுந்து நான் ஒரு எமோஷனலான ஆள், ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் ஒரு கவசத்தை போட்டுக்கொண்டு இருக்கிறேன், எனக்கு அழ வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அழ முடியவில்லை’ என்றெல்லாம் வித்தியாசமாக நெகிழ்ந்து கொண்டிருந்தார். பாருவின் மீது நடந்த பிசிகல் தாக்குதலால் தன் பெயர் நாறிப்போயிருக்கிறது, அதைமீட்டெடுக்க வேண்டும் எனும் முயற்சிதான் இது. அதற்கு விசே, ’அழவேண்டும் என்று தோன்றினால் அழுதுடுங்க சபரி. சில விஷயங்களில் உணர்வுகளை கட்டுப்படுத்த தேவையில்லை’ என்று அறிவுரை சொன்னதும், சபரி, ‘அப்ப சரி’ என்றபடி அங்கேயே அழுவதற்கு தயாரானார். அதிர்ச்சி அடைந்த விசே. ’அட இங்கில்லிங்க, இப்ப எனக்கு அடுத்து எவிக்சன் பண்ற வேலை இருக்குது, இந்த நிகழ்ச்சி முடிந்ததும்  எல்லோரையும் கூட்டிவைச்சு உட்கார்ந்து அழுங்கள்’ என்று எவிக்சனுக்குள் போனார்.

Diwakar @ Watermelon star evicted
Diwakar @ Watermelon star evicted@Jiohotstar

சில ஆன்லைன் வாக்கெடுப்புகளில் அரோரா, ரம்யா, சுபி போன்ற நபர்கள் வெளியேறலாம் என்ற கருத்து நிலவியது. அந்தக் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். நாம் வெளியே போக வேண்டும் என்று நினைக்கும் நபர்களை விட அந்த கருத்துக்கணிப்புகளில் கடைசி இடம் பிடிக்கும் நபர்கள் வெளியே போவதைத்தான் எப்போதும் பார்த்திருக்கிறோம். மிக மிக அரிதாகத்தான் நிகழ்ச்சியின் நன்மை கருதி அந்த வரிசையில் இல்லாதவர்களையும் வெளியே அனுப்புவார்கள். அப்படிப்பட்ட அரிதான நிகழ்ச்சிதான் இந்த வாரம் நடந்தது. டாக்சிக் பூசணியை எவிக்ட் செய்து வெளியே அனுப்பினார்கள். இது நல்ல முடிவுதான். பூசணியைப் பொருத்தவரைக்கும், ’40 நாள் வரை உள்ள இருந்தது எனக்கு மகிழ்ச்சிதான், நான் 50, 60 நாட்கள் வரை தான் தாக்குப்பிடிப்பேன் என்று நினைத்திருந்தேன்’ என்று சொன்னதும் உண்மை போலத்தான் இருந்தது. சக போட்டியாளர்கள், பிக்பாஸ், விசே என அனைவருமே முடிந்தவரை இயல்பாக அவரை வழியனுப்பி வைத்தனர். ரெட் கார்டில் வெளியே  போக அத்தனைத் தகுதிகளும் இருந்தும், இத்தனை டீசன்டாக வெளியே வந்த பூசணி உண்மையில் லக்கி மேன்தான்!

கனியின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தால், பாருவின் முகத்தில் எப்படி ஒரு மகிழ்ச்சி தோன்றியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சிதான் பூசணியின் பெயர் அறிவிக்கப்பட்ட போதும் தோன்றியது. இது நமக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. சற்று நேரத்துக்குப் பின்னர் அவர் பூசணியைக் கட்டிப்பிடித்து, ’அண்ணே, இந்த வீட்டில் உன்னைத் தவிர வேறு யாருண்ணே எனக்கிருக்கா? இப்படி அநியாயப் போயிட்டியே அண்ணே?’ என்று கதறி அழுதார். இந்த அழுகையும் பொய்யாகத் தெரியவில்லை, அப்படியென்றால் சற்று முன்னால் அவர் சிரித்ததன் அர்த்தம் என்ன என்பதில்தான் பாருவின் உண்மையான குணாம்சம் ஒளிந்திருக்கிறது. அதையெல்லாம் யாராவது உளவியலில் டாக்டரேட் படிக்கும் ஆய்வாளர்தான் வந்து ஆராய வேண்டும்.  

மற்றபடி, பூசணியின் வெளியேற்றம் பாருவுக்கு பெரிய சிக்கலைத்தான் உண்டு பண்ணும். அவரது புலம்பல், கோபம், அரைவேக்காட்டுத்தனம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு கூடவே இருந்தது பூசணி மட்டும்தான். அப்படி இன்னொரு அடிமை பாருவுக்கு கிடைப்பது சந்தேகமே! வரும் வாரத்தில் அரோராவிடமிருந்து தனது முன்னாள் அடிமையான கமருவை மீட்டெடுப்பது மட்டுமே அவருக்குப் பெரிய வேலையாக இருக்கும். இருப்பினும் புதிதாக வந்திருக்கும் வன்மக்குழு அவருக்குப் பக்கபலமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!

அடுத்து, விசேவே அழச்சொல்லிவிட்டார் என்பதால், மிக உற்சாகமாக எல்லோரையும் பிளாஸ்மா முன்னால் உட்கார வைத்து, ஓவென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார் சபரி. இந்த சீன்லாம் கொஞ்சம் ஓவர்தான்!

Puthuyugam
www.puthuyugam.com