இன்று விசே உள்ளே வந்ததுமே பாருவின் பஞ்சாயத்தை முதலில் எடுத்துக் கொண்டார். ’அது என்ன எல்லோருக்கும் பட்டப் பெயர் வைத்து கூப்பிடுகிறீர்களே அதைக் கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று ஆரம்பித்தார். ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர் வைக்கும் போதெல்லாம் கோபத்தோடும், வன்மத்தோடும் பெயர் வைத்து ஆட்டம் போடும் பாரு இந்த இடத்தில் மாட்டிக் கொள்வோம் என்பதால், எல்லோருக்கும் செல்லமாக அன்பாக ’ராஜமாதா, பாணபத்திர ஓணாண்டி, குசும்பி’ என்றெல்லாம் பெயர் வைத்ததாக சிரித்துக் கொண்டே சமாளிக்கப் பார்த்தார். அதற்கு விசே ’பாணபத்திர ஓணாண்டி என்றால் என்ன?’ என்று கேட்டதும், ’அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் விக்ரம் செய்வது அந்தப் பெயருக்கு பொருத்தமாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது’ என்று உளறினார்.
அதெப்படி அர்த்தமே தெரியாமல் ஒருத்தர் மீது ஒரு சொல்லை பயன்படுத்த முடியும் என்று நமக்கு தோன்றிய அதே சந்தேகத்தை விசேவும் பாருவிடம் கேட்டார். அதற்கு அவரிடம் பதில் இல்லை.
‘ஆனால், பதில் என்னிடம் இருக்கிறது அதன் பெயர்தான் வன்மம் பாரு. ஒருவேளை அந்தச் சொல்லுக்கு உண்மையிலேயே அர்த்தம் தெரியாவிட்டாலும் ஒருவர் அதன் பொருளை எடுத்துச் சொல்லி, 'மீண்டும் இப்படிச் சொல்லாதீர்கள்' என்று சொன்ன பிறகும் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், அலட்சியமாக நடந்து கொண்டு மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தி ஒருவரை பிராண்டிங் செய்வது அப்பட்டமான உருவ கேலி மற்றும் வன்மத்தின் வெளிப்பாடு’ என்று உறைக்கும் படி சொன்னார். ஆனால் அது அவருக்கு உறைக்கப் போவதில்லை, ஏனென்றால் இது முதல்முறையும் அல்ல.
’அதோடு பாருவின் இந்த பிராண்டிங் வேலை, விக்ரமோடு மட்டுமல்லாமல் மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் என் மீது வரை நடக்கிறது. எங்கே நாம் சொன்ன வார்த்தை தவறாகப் போய் வீக்கென்ட் எபிசோடில் கேட்பார்களோ என்ற பயத்தில், விசேவும் விக்ரமுக்கு சாதகமாகத்தான் பேசுவார் என்று முந்திக்கொண்டு என்னையே பிராண்டிங் செய்கிறார். எனக்கும் விக்ரமுக்கும் இடையே என்ன அண்டர்கிரவுண்ட் டீலிங்கா இருக்கிறது?’ என்பதையும் காட்டமாகப் பதிவு செய்தார்.
அடுத்து கட்டைகளை அடுக்கும் டாஸ்க்கில் நடந்த பாரு மற்றும் பூசணியின் திருவிளையாடலைக் கையில் எடுத்தார். ’அதெப்படி அந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் சம்பந்தமே இல்லாமல் அரோரா, பூசணியைப் பார்த்து அப்படி ஒரு ஆபாசகுறியீட்டை செய்ய வேண்டிய அவசியம் என்ன?’ கேட்ட போது, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்ற பயம் பாருவின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. ‘அது தவறு என்று சொல்லவில்லை. என்னுடைய பார்வைக்கு அப்படித் தெரிந்தது என்றுதான் சொன்னேன்’ என்று உளறினார்.
’அதன் பெயர்தான் வக்கிரம் பாரு! அங்கிருக்கும் யாருக்குமே தோன்றாத ஒரு விஷயம் உங்களுக்கு மட்டும் தோன்றுகிறது என்றால் தவறு உங்கள் பார்வையில் தான் உள்ளது. அதுதான் வக்கிரம்’ என்று விசே சொன்னதும், பாரு எனக்கு மட்டும் இல்லை சார் இதோ உட்கார்ந்திருக்கிறானே இந்த பூசணிக்கும் அப்படித்தான் தோன்றியது என்பது போல அருகில் உட்கார்ந்திருந்த பூசணியை பார்த்தார். தமக்கும் இதில் சமபங்கு இருப்பது உணர்ந்து விசே சொல்லாமலே எழுந்து நின்றார் பூசணி. கையோடு கொண்டு வந்த கட்டைகளையும் அரோரா சொன்னது போலவே அடுக்கி காண்பித்துவிட்டு, ’இதில் அப்படி என்ன ஆபாசக் குறியீடு உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்தது?’ என்று கேட்டார். இருவரிடமும் பதில் இல்லை!
அடுத்து, சென்ற வாரம் நடந்த தல போட்டியில் சபரி செய்த அட்டகாசம் பற்றி விசாரிக்கப்பட்டது. ஒரு குறும்படமும் காண்பிக்கப்பட்டது. நாம் நினைத்தது போலவே சபரி செய்தது அப்பட்டமான தாக்குதல்தான். இதில் விக்டிமாக பாரு இருந்ததுதான் பார்வையாளர்களான நம்மையும் கூட சற்றே நடுநிலை தவறச்செய்து விட்டது. பாருதான் வந்து வலுவில் மோதினார் என்றாலும் சபரி செய்தது அப்பட்டமான தாக்குதல். அங்கே விளையாட்டை விளையாட்டாக அணுகும் மனநிலையில் இருவருமே இல்லை என்றாலும், அந்நிலையில் பாருவின் கால்களை வேண்டுமென்றே மிதித்தது, அவரைத் தள்ளிவிட்டதை எல்லாம் ஒப்புக்கொள்ளவே முடியாது. அது நிச்சயமாக சபரியின் டர்ட்டி கேம்தான்!
பாரு சபரியை நோக்கி, முழுமையாகச் சொல்லாவிட்டாலும் சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார் என்றாலும், அது அவர் தாக்கப்பட்ட பின்னர்தான் நடக்கிறது என்பதால் அதை கணக்கில் கொள்ள முடியவில்லை. சபரி விளையாடும் நோக்கத்தில் இருந்து விலகி தாக்கும் மனநிலைக்கு போனதற்கு அவரது கோபம்தான் முழுமையான காரணம். அது குறும்படத்திலும் தெளிவாகத் தெரிந்தது. விசே, விசாரிக்கும் போதும், ‘கோபத்தில் நிதானம் தவறிவிட்டேன், பெரிய தவறுதான்’ என்பது மட்டும்தான் சபரியின் பதிலாக இருந்திருக்க வேண்டும். அந்தக் கோபத்துக்கும் முன்னதாகவே பாரு பயன்படுத்திய வார்த்தைகள் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் அது எப்பேர்ப்பட்ட கோபமாக இருந்தாலும், யார் காரணமாக இருந்தாலும் சபரி செய்ததை நியாயப்படுத்த முடியாது. எந்த நிலையில் கட்டுப்பாடு தவறக் கூடாது என்பதற்கு உதாரணமாக சபரி நின்று கொண்டிருந்தார்.
அந்த விளையாட்டில் கனியும், சான்ட்ராவும் நடுவர்களாக இருந்தனர். அன்பு குழுவில் இருந்ததால்தான் சபரியின் இந்தச் செயலை கனி தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் கனி. கனியின் மீதும் தவறு இருக்கிறதுதான் என்றாலும், சான்ட்ரா உட்பட மற்றவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. ஆனால், இதிலிருந்து பயம், அது இதுவென ஏதேதோ சொல்லி சான்ட்ரா எளிதில் தப்பிவிட்டார். சாண்ட்ரா எதுவுமே தெரியாத அப்புராணி போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார், இது எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம். வெளியில் இருந்து இந்த ஆட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டு கனியை இன்ஃப்ளுயன்ஸ் செய்த விக்ரமுக்கும் மண்டகப்படி நடந்தது. சபரி, பாருவின் கால்களை மிதித்த போது, ’அப்படியானால் நீயும் ஷூ போட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும்’ என்று சொன்ன அமித்தும் மாட்டிக் கொண்டார். அவருக்கும் சாத்து விழுந்தது. இங்கே என்ன இன்டர்நேஷனல் விளையாட்டு போட்டியா நடக்கிறது, இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்து முன்னரே ஷு எல்லாம் போட்டுக் கொண்டு வருவதற்கு? ஒருவர் ஷூ போட்டுக் கொண்டு வரவில்லை என்றால் ஷூ போட்டுக் கொண்டு வந்தவர்தான் நாகரீகம் கருதி அதை கழற்றி வைத்துவிட்டு விளையாட வேண்டும். பதிலாக ஷூ போடாமல் வந்த ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே மிதித்துதான் விளையாடுவேன் என்பது என்ன நியாயம்? அதுபோல ஆட்டம் முடிந்ததும் சபரியை நோக்கி ஓடி வந்து கட்டிப்பிடித்து ’குட் கேம், குட் கேம்’ என்றெல்லாம் ஆரவாரம் செய்த எஃப்ஜேவுக்கும், ‘இந்த இழவு கேமில் அப்படி என்ன குட்டைக் கண்டுவிட்டாய்?’ என்று கொட்டு விழுந்தது.
பல தடவைகள் குறிப்பிட்டுத் தாக்கி, அன்புக்குழுவே சிதறிய பின்னும், இன்னும் அந்தக்குழு இன்னும் இருக்கிறது என்று சொல்லி தாக்கிக்கொண்டிருக்கும் விசேவின் கண்களில், புதிதாக உருவாகியிருக்கும் வன்மக்குழு என்றைக்கு படப்போகிறது என்று தெரியவில்லை!