குப்பைக்கூடையில் யாரோ, யாருடைய டூத் ப்ரஷ்ஷையோ போட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்ட சபரி, அது யாரென கண்டுபிடித்தே தீருவேன் என்று ரகசிய போலீஸ் மோடுக்குப் போய் குப்பைப் பையை எடுத்து பெட்ரூமில் வைத்துக்கொண்டு வினோத்திடமும், கமருவிடமும், ’ஆள் யாருன்னு கண்டுபிடிக்கிற வரை இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதில் அப்படி என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறதோ தெரியவில்லை, பார்ப்போம்!
செய்கிற அரைவேக்காட்டுக் குற்றங்கள் எல்லாம் போதாதென்று இந்தப் பூசணி, திவ்யாவின் சாதியைக் கண்டுபிடிப்பதற்காக, ஊர்ப்பெருசுகள் போல உன் ஊரு என்ன, குலசாமி என்னவென்று எல்லாம் சுற்றி சுற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். போதும் இவருக்கெல்லாம் மரியாதை கொடுத்து எழுதியது என்றே தோன்றுகிறது. இதுவே அதிகம்! இதெல்லாம் டெய்லி எபிசோடில் வருவதில்லை, ஆயினும் 24x7 கிளிப்பிங்ஸில் காணமுடிகிறது. இதையும் டிஆர்பிக்காக தொடர்ந்து கொண்டுசெல்லத்தான் போகிறார்களா, அல்லது கண்டிக்கப்போகிறார்களா என்று தெரியவில்லை! இந்த விஜய்சேதுபதியும் நிகழ்ச்சியைக் கொஞ்சமாவது பார்க்கிறாரா, இதெல்லாம் அவருக்கு உறைக்கிறதா என்றும் தெரியவில்லை.
நேற்றைய சண்டையின் போது விக்ரம் அடக்கமுடியாமல், பாருவை, ‘போடி சோலியைப் பார்த்துகிட்டு’ என்பதாக சொல்லிவிட்டிருந்தார். இதை அரோரா விக்ரமிடம் ‘என்னங்க, எவ்வளவு கண்ட்ரோலா இருப்பீங்க, நீங்களே இப்படிச் சொல்லிட்டீங்க?’ என்பதாக விசாரித்துக்கொண்டிருந்தார். அவரும், ‘நொட்டு, நக்கு, போடா, வாடா, வக்கிரம் பிடிச்சவன், அறிவுகெட்ட தே! -என்றெல்லாம் எல்லோரையும் சகட்டுமேனிக்கு பேசறா, இவளுக்கு இனியும் என்ன மரியாதை?’ என்பதாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். சரிதான்! அப்போது அங்கு வந்த பாருவிடம், ‘பாரு, விக்ரமுக்கு வக்ரம்னு நீ ரைமிங்கா சொல்றேன்னு தெரியுது. ஆனா வக்கிரம்ங்கிறது கேவலமான வார்த்தை! பொதுவா, தவறான கண்ணோட்டம், அப்யூஸிங் போன்ற அர்த்தம் வரும், அதனால அதை இனிமே சொல்லாத’ என்று கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல சொன்னார். அதற்கு பாரு, ‘வக்ரம்ங்கிறது உள்ள கோபத்தை வைச்சிகிட்டு, வெளிய இனிமையா பேசறவர்னுதான் என் தமிழறிவு சொல்லுது’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். உன் தமிழறிவில் தீயை வைக்க என்பது போல வெறுத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் விக்ரம்!
வியானா கையில், காலில் விழுந்து அவரை ஒரு ரீல்ஸ் பண்ண சம்மதிக்க வைத்துக் கூட்டிக்கொண்டு வந்து ஒரு கேமிரா முன்னால் வந்து நின்றார் பூசணி. கேமிராவில் எந்த அசைவுமில்லை. நின்று கெஞ்சிப்பார்த்தார். ஊஹூம், கேமிரா அசையவே இல்லை. ’ஸூம் பண்ணினாத்தானேடா ரீல்ஸ் பண்ணுவே, ஊஹூம், மூச்சு விடமாட்டேனே’ என அந்தக் குறிப்பிட்ட கேமிராவின் கேமிராமேன் பிடிவாதமாக இருந்திருப்பார் போலிருக்கிறது. வியானாவோ, ‘நீ பிச்சை எடுக்குறதுன்னா தனியா போய் எடுய்யா, ஏன்யா என்னையும் கூட்டிகிட்டு வந்தே’ என்று கோவித்துக்கொண்டு போய்விட்டார். அடுத்து, இந்தக் கேமிரா ரிப்பேர் ஆகிவிட்டது போலிருக்கிறது என்று முடிவு செய்த பூசணி, அடுத்து ஒவ்வொரு கேமிராவாகப் போய் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த முதல் கேமிராமேன், ‘அந்தக் கொடிய மிருகம் நம்மள நோக்கித்தான் வருது, எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க’ என்று மொத்தக் கேமிரா யூனிட்டையும் அலர்ட் செய்திருப்பார் போலிருக்கிறது. ஒரு கேமிராவும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தக் கொடுமை தாங்க முடியாமல்தான் இரண்டு நாட்களுக்கு முன்னால் கேமிராவே சுவர் பக்கமாகத் திரும்பிக்கொண்டது. அந்த அசிங்கத்தையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டுதான் இன்றும் இப்படிப் பண்ணிக்கொண்டிருந்தார்.
அடுத்து பெஸ்ட்டு, ஒர்ஸ்ட்டு பெர்ஃபார்மென்ஸ் செலக்ஷன்! வினோத்தும், எஃப்ஜேவும் பெஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஒர்ஸ்ட் தேர்வில், ’டாக்சிக், குரூப்பிசம்’ என கனியைக் குறிவைத்து வன்மத்தை இறக்கிக் கொண்டிருந்தார் பாரு. ஆனால், அந்த இரண்டையும் செவ்வனே இந்த வீட்டுக்குள் செய்துகொண்டிருப்பதே பாருதான்! பிரஜின், சாண்ட்ரா, திவ்யாவெல்லாம் இந்த பாருவுக்கு சப்போர்ட்! பாரு எல்லா அட்டூழியங்களையும் செய்வதை வெளியிலிருந்து பார்த்துவிட்டுப் போன பிறகும் இந்த மூவரும், பாருவோடு சேர்ந்துகொண்டு, அன்புக்குழு என்ற ஒரே காரணத்துக்காக கனி, சபரியின் மீது இவ்வளவு வன்மத்தோடு செயல்படுவதை எந்த வகையில் சேர்ப்பது என்றே நமக்குப் புரியவில்லை. கடைசியில், ஒர்ஸ்ட்டாக பூசணியும், கனியும் தேர்வு செய்யப்பட்டனர். கனி ஜெயிலுக்குப் போகுமளவுக்கு அன்பு குழு வலுவிழந்து போய்விட்டது என்பதை விட, பாருவின் டாக்சிக் குழு மிக வலுவாகியிருக்கிறது என்பதுதான் உண்மை.
அடுத்து நேற்றைய விளையாட்டில், அரோரா இயல்பாக எப்படி கட்டையை விழாமல் அடுக்குவது என்று சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆபாசக்குறியீடு செய்து காண்பித்தார் என்று பூசணியும், பாருவும் டிவிஸ்ட் பண்ணிவிட்டார்கள். கமருவிடம் தனியே உட்கார்ந்து குறியீடு வைத்து ஆபாசமாகப் பேசியதே இந்தப் பாருதான். ஆனால், எல்லோரும் இருக்கும் போது, கட்டைகளை அடுக்கிக் காண்பித்ததில் ஆபாசக்குறியீடு இருக்கிறதாம், இது வேறு யாருக்கும் தெரியவில்லையாம், இந்த இரண்டு அறிவாளிகள் கண்களுக்கு மட்டும் தெரிந்ததாம். என்னவொரு வன்மம்! இதெல்லாம் அப்பட்டமான கேரக்டர் அசாஸினேஷன்! இப்படி ஒரு கேவலமான ஜென்மங்களை இதற்கு முன்னால் எந்த சீசனிலும் நாம் பார்த்ததில்லை!
கமரு, கெமி, சபரி என ஓரிருவர் அரோராவுக்கு ஆதரவாக மெல்ல எழுந்ததும், பிரச்சினை நம் மீது திரும்புகிறது என்றுணர்ந்து, ‘இதை நான் நேற்றே சிம்பிளா முடிச்சிட்டேன். இதோ இந்தப் பூசணிதான் இன்னிக்கு கொண்டு வந்து மீண்டும் சொல்லச்சொன்னான்’ என்று பூசணி மீது பழிபோட்டுவிட்டுத் தப்பிவிட்டார். அதன்பின், சமையல் குழுவில் தமக்குத் தரப்பட்ட காய்கறி வெட்டுகிற வேலையை அம்போ என்று போட்டுவிட்டு, பூசணியை வெளியே கூப்பிட்டுக் கொண்டுவந்து, ‘இந்த அரோரா, என் கமருவைத் தள்ளிக்கொண்டு போய்விட்டாள். நாம அவ மீது பழி போடும் போது, அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு கமரு பேசினதைக் கவனிச்சியா?’ என்று மிக முக்கியமான விசயத்தைப் பேசிக்கொண்டிருந்தார். கூப்பிட வந்த சபரியிடம், ‘ஆமா, நான் பேச வந்த அஞ்சி நிமிசத்துலதான் குடி முழுகிப்போகுதா உங்களுக்கு? நான் ஏற்கனவே வெட்டி வைச்ச காய்கறியை முதலில் சமைக்கச்சொல்லு, மற்றதை நான் அப்புறமா வந்து வெட்டித் தர்றேன்’ என்று சொல்லி அனுப்பினார். இது எப்படி இருக்கு!
கடைசியாக பூசணி சொன்னது, ‘விடு பாரு, அரோராவையும், நமக்கு எதிரா பேசுற எல்லோரையும் கடவுள் பார்த்துகிட்டு இருக்காரு, அவரு தண்டனை கொடுப்பாரு!’
அடுத்து சிறு இரும்புத் துண்டுகளைப் பொருத்திய சுவரில் சமாளித்து நிற்கும் கேப்டன் டாஸ்க் நடந்தது. டாக்சிக் குழு பெருகிவிட்டதால், வினோத், சபரி, சுபி தோற்கடிக்கப்பட்டு எஃப்ஜே ஜெயிக்க வைக்கப்பட்டார். விளங்கும்!
கடைசியாக குப்பையில் பிரஷ் போட்ட விவகாரத்தை, சபரி, அவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்பும், கமரு, பிரஜின், சாண்ட்ரா குழுவிடம் போய் அதைச் சொன்னது மட்டுமில்லாமல், அந்தக் கவரை ரகசியமாக எடுத்துக்கொண்டு போய் அவர்களிடம் காண்பித்துவிட்டு, மீண்டும் அங்கு கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார். அடாடா, எப்பேர்ப்பட்ட நேர்மை, மற்றும் விசுவாசம்!