வியானா, அரோரா, பாரு, திவ்யா பின்னாலேயே சுற்ற வேண்டியது, அல்லது கிச்சன் வாசலிலேயே உட்கார்ந்துகொள்ள வேண்டியது இதுதான் இந்த நிகழ்ச்சியில் தர்பூசணியின் பங்களிப்பு. கிச்சனில் யாருக்காவது அதிருப்தி இருக்கிறதா? மாற்றம் வேண்டுமா என்று தல சபரி விசாரித்துக் கொண்டிருந்தார். அவரிடம், ‘ஏற்கனவே கிச்சன்ல நாலு பேரு இருக்காங்க, ஏன் இன்னும் ஆளுங்க வரவா வரவானு கேட்டுகிட்டு இருக்காங்க’ என்று கேட்டார் பூசணி. ‘யோவ், நீ தலயா? நான் தலயா? போய்யா உன் சோலியைப் பார்த்துகிட்டு’ என்றுதான் சபரி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் சொல்லாமல் அவருக்கு சின்சியராக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஏன்தான் இந்த வீட்டில், கேப்டன் பதவிக்கு வரும் ஒவ்வொருவரும், உடனடியாக அடிமை மோடுக்குப் போய்விடுகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
மீண்டும், ’ஒரே ஆளுக்கு ஒரே வேலையை மீண்டும் மீண்டும் குடுக்குறது சரியில்ல சபரி’ என்று சாப்பிட்டுக்கொண்டே சபரிக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்தார் பூசணி. முதலில், இந்தாள் சாப்பிடுகிற ஒரே வேலையைத் தவிர வேறு என்ன செய்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது நமக்கு.
அடுத்து வழக்கம் போல வினோத், பூசணியை கலாய்க்க, அதற்கு சிரித்துவிட்டுப் போன பூசணியை பாருவும், கமருவும், ‘உன்னை கலாய்க்கிறான் அவன், நீ சிரிச்சிகிட்டு வர்றே’ என்று ஏத்திவிட்டனர். அதன்பின், பூசணி கோபத்தை வரவைத்துக்கொண்டு வினோத்திடம் வந்து மோதலைத் தொடங்கினார். பல தடவைகள் விசே உட்பட எல்லோரும் சுட்டிக்காட்டிய அதே வார்த்தைகள்தான், ‘உன் தராதரத்துக்கு என்கூடவெல்லாம் வைச்சுக்காத, உன் ரேஞ்சுக்கு எல்லாம் என்னால இறங்கிவந்து பேச முடியாது. உனக்கு மரியாதை கெட்டுப்போயிடும், அவ்வளவுதான்’. இந்தாள் திருந்துவதற்கான வாய்ப்பு துளியளவுமில்லை! இத்தனைக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, அமித்தும் இதையெல்லாம் வாயைத் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் கொடுமை!
அவர்களை அமைதிப்படுத்தி உட்கார வைத்துவிட்டு, அதே அவையில் ‘கிச்சனுக்கு யாரெல்லாம் போக ஆர்வமாக இருக்கிறீர்கள்?’ என்று சபரி கேட்டதற்கு பாரு முந்திக்கொண்டு கையை உயர்த்தினார். அதாவது கண்ணில் அடிபட்டிருப்பதால், எந்தக் குழுவிலும் வேலை செய்ய முடியாது என்று சொல்லி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த பாரு, கிச்சனுக்கு என்றதும் போகத் தயார் என்று கையை உயர்த்துகிறார். அதாவது கனியின் சமையல் பலத்தைக் குறைக்கும் வாய்ப்பு என்பதால் இவ்வளவு ஆர்வ வன்மம். அதற்குக் கனியும், எஃப்ஜேவும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுவரை சும்மா இருந்த விக்ரம், வாயைத் திறக்கவும், அதற்காகக் காத்திருந்த பாரு மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு விக்ரமின் மீது தனக்கிருந்த அத்தனை வன்மத்தையும் இறக்க ஆரம்பித்தார்.
பாரு, பூசணி, கமரு மூவரும் விக்ரமைப் போட்டுத் தாளிக்க ஆரம்பிக்க, தனியாளாக விக்ரம் போராடிக் கொண்டிருந்தார். பாரு, பூசணி போலவே துளியளவும் திருந்த வாய்ப்பில்லாத கமரு, ‘ உன் வளர்ப்பு சரியில்ல’ என்று விக்ரமைப் பார்த்து குதித்துக் கொண்டிருந்தார். விக்ரமைப் புல்லி செய்துகொண்டிருக்கும் பாரு, பூசணியின் வளர்ப்பெல்லாம் இவர் கண்ணுக்குத் தெரியவில்லை, விக்ரமின் வளர்ப்பு சரியில்லை என்று மட்டும் தெரிகிறது. பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட விசயம்தான் இது. இந்தப் பிரச்சினைக்குக் குறுக்கே வந்த சபரி, சமாதானக் கொடியைப் பறக்கவிட முயன்றதும், பிரஜின், அமித், சாண்ட்ரா குழு களத்திலிறங்கி பாரு குழுவுக்கு ஆதரவாக சபரியைத் தாளிக்க ஆரம்பித்தது. ’வினோத்தும், பூசணியும் சண்டை போடும் போது சமாதானப்படுத்த வராத நீ, இப்போ விக்ரமுக்கு மட்டும் ஏன் வர்றே?’ என்பது அவர்களின் வாதம்! வைல்டு கார்டு குழு, கனியின் அன்புக்குழுவுக்கு எதிராக இயங்குகிறேன் பேர்வழி என்று முற்றிலுமாக பாருவின் வன்ம குழுவுக்கு ஆதரவாக இறங்கியிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை! இது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை!
பாரு, பூசணி, கமரு மூவர் குழு, ஒவ்வொரு வாரயிறுதியிலும் விசேவிடமிருந்து அறிவுரை, கண்டிப்பு, கலாய்ப்பு எல்லாவற்றையும் வாங்கியபடி வாயைப் பொத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தாலும், அதை எள் முனையளவுக்கும் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. நிகழ்ச்சி முடிந்த அடுத்த விநாடியே இவர்களின் அதே ஆட்டம் தொடங்கிவிடுகிறது. புல்லியிங், ‘பீப்’ போடும் வார்த்தைகள் என சகட்டு மேனிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்து, இரண்டு ராஜ்ஜியங்கள் என்று ஒரு கண்றாவி வீக்லி டாஸ்க்கை ஆரம்பித்தார்கள். ஒன்று இசை ராஜ்ஜியம், வினோத் ராஜாவாம்! இன்னொன்று நடிப்பு ராஜ்ஜியம், பூசணி ராஜாவாம்! சும்மாவே வெறும் வாயை மெல்லுகிற பூசணிக்கு அவலையும் கொடுத்தால் என்னவாகும்? மனுசன் நம்மை சாகடிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது! இந்த டாஸ்க் முடியும் வரை நாம் எங்காவது பரதேசம் ஓடிப்போய்விடுவது நலம்!