பிரஜின் தத்துவம்- ‘ஆம்பளையா இருந்தா...’ #Biggboss Day 34

விக்ரம் எழுந்து, ’புது போட்டியாளர்கள் உள்ளே வந்ததே, பாருவைத் திட்டமிட்டுக் காலி செய்வதற்குத்தான் என்பது போலிருந்தது’ என்றார். அதிலென்ன தப்பு இருக்கிறது? உண்மையில் அதுதான் நடந்திருக்க வேண்டும்.
Vijaysethupathi - Entry
Vijaysethupathi - Entry@jiohotstar
Published on

வெள்ளிக்கிழமை எபிசோடைக் காணவில்லை. ஆக, சமூக வலைத்தளங்களில் சிலர் சொல்வது போல, வழக்கமாக சனிக்கிழமை நடக்கும் வீக்கெண்ட் ஷூட்டிங் இம்முறை தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு நாள் முன்னமே வெள்ளிக்கிழமை நடந்திருப்பது உண்மைதான் போலிருக்கிறது.

முதலில் பிரஜின், கமரு, பிரவீன் மூவரும் இணைந்து நடத்திய ப்ராங்க் பஞ்சாயத்தை எடுத்தார் விசே! மூவரும் முதலில் ப்ராங்க்கை ஒப்புக்கொண்டனர். எல்லோருக்கும், கோபம் அதிர்ச்சி என பலவாறான உணர்வுகள். பிரவீனும், கமருவும் அதை எதற்காக செய்தோம் எனவும், கேள்விகள் கேட்பவர்களை சமாதானப்படுத்தவும் ஏதோ அறைகுறையாகவாவது முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், இந்த பிரஜின், அவரது மனைவி சாண்ட்ராவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு எவனோ, எக்கேடோ கெட்டுப்போங்கள் என்பது போல நின்றுகொண்டிருந்தார். கூடவே, தன்னை விமர்சித்த வினோத்தை ‘இப்ப உண்மை நிறம் வெளி வந்துடுச்சு’ என்று சொன்னதெல்லாம் டூ மச்! ஹூம், இந்தாளு சரிப்பட்டு வரமாட்டார்!

கனியை, அவரது டிப்ளமேடிக் பேச்சுக்காகக் கலாய்த்தார், விசே! உங்க பாதி குணத்தை பக்கத்திலிருக்கும் பாருவுக்குக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து பாதியை வாங்கிக்கொள்ளுங்கள், பேலன்ஸ்டாக இருக்கும் என்றார். பாருவும் அதைப் பெருமையாக எடுத்துக்கொண்டார். முழு நிகழ்ச்சியிலும் பாருவுக்கு செல்லமான கலாய்ப்புகள்தான் கிடைத்ததே தவிர கண்டிப்புகள் எதுவுமில்லை. குறிப்பாக, ‘எங்கள் வீடு பற்றிய கவலை மற்றவர்களுக்கு வேண்டாம், அதை நான் பார்த்துக்கொள்வேன்’ என்ற தன்னம்பிக்கையான அவரது பேச்சுக்கு பாராட்டுதான் கிடைத்தது. ஆனால், அவரது வீடு பற்றிக் கவலைப்பட்ட ஒரே ஆள் அவர் மட்டுமே என்பதுதான் இதிலிருக்கும் நகைமுரண்!

Amit , Prajin,Divya ganesh and Sandra Amy
Amit , Prajin,Divya ganesh and Sandra Amy@jiohotstar

இடைவேளையின் போது, ‘இந்தப் பிராங்க், பிராங்கே அல்ல, நடந்தது உண்மையான சண்டை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால், பிக்பாஸ் கம்பெனிக்காரங்க சண்டை போட்டவர்களைக் கூப்பிட்டு இதை பிராங்க் என பொய் சொல்லி சமாளித்துவிட்டார்கள். என் துப்பறியும் மூளை அப்படித்தான் சொல்கிறது. காரணம், கமருவுக்கெல்லாம் ரொம்ப நேரம் நடிக்கத் தெரியாது, உண்மையை உளறிவிடுவான். அதோடு, நீங்கள் அவ்வளவு அழுத பின்னும், எந்நேரமும் பொண்டாட்டி, பொண்டாட்டி என்று புலம்பிக் கொண்டிருக்கும் உங்க புருசன் உங்களிடம் சொல்லாமலிருக்க வாய்ப்பேயில்லை’ என்று சிஐடி சங்கர் பூசணி, சாண்ட்ராவின் மண்டையைக் கழுவிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சாண்ட்ராவே அதை நம்பிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கான்ஸ்பைரஸி தியரி எல்லாம் எப்படி உருவாகிறது என்பதன் வாழும் உதாரணமாக நம் முன்னால் நின்றுகொண்டிருந்தார் பூசணி.

அதற்கு விசே, ‘யோவ் பூசணி, நாங்களே வயித்துப்பிழைப்புக்காக கஷ்டப்பட்டு இப்படி ஒரு ஷோ நடத்திகிட்டிருக்கோம், 300 பேர் சேர்ந்து போடற திட்டத்தை இப்படி நடுராத்திரி 3 மணிக்கு கக்கூஸ்லருந்தே கண்டுபிடிச்சா என்னதான் பண்றது?’ என்று பூசணியைக் கலாய்த்து விட்டார்.

விக்ரம் எழுந்து, ’புது போட்டியாளர்கள் உள்ளே வந்ததே, பாருவைத் திட்டமிட்டுக் காலி செய்வதற்குத்தான் என்பது போலிருந்தது’ என்றார். அதிலென்ன தப்பு இருக்கிறது? உண்மையில் அதுதான் நடந்திருக்க வேண்டும். பாரு சட்டென சூழலறிந்து டிபென்ஸ் மோடுக்குப் போய்விட்டார். அதனால் எல்லோருடைய பரிதாபத்துக்கும் ஆளாகியிருக்கிறார். சீக்கிரமே விக்ரம், விசே உட்பட எல்லோருக்குமே தெரியவரும், பாரு மீண்டு வருவார்... அப்போது புதுசு, பழசு என எல்லோரும் சேர்ந்தாலும் அவரைச் சமாளிக்க தண்ணி குடிக்க வேண்டியிருக்கும் என!

Tushaar Evicted
Tushaar Evicted@jiohotstar

’பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னா அம்புட்டுதான்’ என்று பிரஜின் சொன்ன டயலாக், இவர்கள் ‘இரு நபராக’ இருக்கிறார்கள் என்று பயமாக இருக்கிறது என்று சொன்னார் சுபி. அதற்கு பிரஜினுக்கு அறிவுரை கிடைத்தது. அதோடு போன வாரம் பல தடவைகள், ‘ஆம்பளையா இருந்தா நேர்ல பேசுடா, ஆம்பளையா இருந்தா நின்னுகிட்டு சாப்பிடுடா, ஆம்பளையா இருந்தா உக்காந்துகிட்டு தூங்குடா பாப்போம்’ என்று ஆம்பளை டயலாக் பேசினதற்காகவும் பிரஜினுக்கு கண்டிப்புக் கிடைத்தது. நிச்சயம் கிடைக்க வேண்டியது!

துஷார் பிரச்சினை உட்பட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திவ்யாவுக்குக் குட்டு விழுந்தது. திவ்யாவும் பிரச்சினைகளைச் சரியாக எதிர்கொள்ளவில்லை. கோபத்தை அடக்கமுடியாமல் கத்தியது, மற்றவர்களிடம் சரியாக கம்யூனிகேட் பண்ணாமல், டிக்னிடியைப் பறக்கவிட்டது, விசே முன்னால் இருக்கும்போதுகூட மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் முக இறுக்கத்தோடு இருந்தது, எழுப்பிவிட்டு கேள்வி கேட்ட பின்பு, ‘என்னையா கேட்டீங்க’ என்று விசேவையே கடுப்பேற்றியது என எல்லாவற்றிலும் சொதப்பினார்!  

அடுத்து, சனிக்கிழமை எபிசோடிலேயே எவிக்‌ஷன்! துஷாரை எவிக்ட் செய்து வெளியே அனுப்பினார்கள். அதற்காக அவரது ஜோடிப்புறா அரோரா, கமருவின் தோளில் சாய்ந்துகொண்டு, ‘நீ போவேன்னு நினைச்சேனே, அய்யய்யோ என் ஆளு போயிட்டான’ என்று கதறினார். போன வாரமே துஷாரும், கமரும் போகக்கூடும் என்று கணித்திருந்தோம் நாம். ஒன்று சரி! இன்னொரு ஆளான கமரு தப்பிவிட்டார். நாளை இரண்டாவது எவிக்‌ஷனும் இருக்கிறதாம். கத்தி பிரவீன் மற்றும் ரம்யாவின் தலைக்கு மேலிருக்கிறது, நாளை பார்ப்போம்!

Puthuyugam
www.puthuyugam.com