மழையில் சட்டையில்லாமல் ஆடிக்கொண்டிருந்த தர்பூசணியைப் பார்ப்பதற்கெல்லாம் சகிப்புத்தன்மைக்கான சிறப்பு விருது என்று ஏதாவது இருக்குமானால் நாமே அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தர்பூசணியைத் திருத்தும் வீணான முயற்சியில் தீபக்கும் சற்று நேரம் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த பிக்பாஸ், கெஸ்டுகளின் நேரம் முடிந்ததென சொல்லி, மூவரையும் வெளியே அனுப்பி வைத்தார்.
உடல்நலமில்லாத விக்ரம், எழுந்து வருவதைப் பார்த்த திவ்யா, ‘என்ன உடம்பு சரியாயிடுச்சா, பாடி எழுந்து நடமாடுகிறது…’ என்று சொன்னார். அதைக்கூட காமெடியாக எடுத்துக் கொள்ளலாம்தான். ஆனால், அந்த வார்த்தையில் விக்ரம் காயப்பட்டிருக்கிறார் என்று தெரிந்த பின்னும் ‘ஸாரி’ சொல்லாமல், பதிலுக்குக் கோபப்பட்டதையெல்லாம் ஏற்கமுடியாது. அது திவ்யாவின் தவறுதான்.
அடுத்து Best, Worst செலக்சன் நடவடிக்கை நடந்தது! கூட்டமாக எல்லோரும் பெஸ்ட் பெர்பார்மர் என்று பார்வதியைச் சொன்னது நமக்கு ஆச்சரியம்தான். அதிலும் ப்ரவீண்ராஜ் அதை ஒரு குட்டி நாடகம்போல, 'பாரு பெயரைச் சொல்ல வாயே வர்ல' என்பதாக நடித்தது சிறப்பு.
மனிதர்களுக்கு ஞாபக மறதி ஓர் அருமருந்து என்பதற்கான உதாரணமாக இருந்தது இந்த நிகழ்வு. மூன்று நாட்களாக பாரு, வாயைப் பொத்திக்கொண்டு இருந்ததற்காக, அவர் முப்பது நாட்களாக நடந்து கொண்டதையெல்லாம் மறந்து போவது, மறதி ஒரு தேசிய வியாதி எனும் வசனத்தை ஞாபகப்படுத்தியது. ‘எப்பயும் போடுற மூதேவி இன்னிக்குப் பிச்சை போடல, என்னைக்கும் போடாத சீதேவி இன்னைக்குப் பிச்சை போட்டா, மவராசி’ என்று ஊருக்குள் சொல்லும் சொலவடைதான் ஞாபகத்துக்கு வந்தது. பிக்பாஸே ஆச்சரியப்பட்டுப்போய் இதைக் கேலி செய்தார். பார்வதியும் பெரும் புளகாங்கிதத்திலிருந்தார். ‘தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க, இனி ஒரு புது பார்வதியைப் பார்ப்பீங்க’ என்றெல்லாம் சூளுரைத்தார். ஆனால் அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை.
உண்மையில் பார்வதி கடந்து மூன்று நாட்களாக அமைதியாக இருந்தது, தன்னிலையை உணர்ந்தோ, டாஸ்க் சிறப்பாக வரவேண்டுமென்பதற்காகவோ அல்ல. புதிதாக வந்த சாண்ட்ரா, திவ்யா இருவரின் ஆளுமைக்கு முன்னால் நிற்க முடியாமல், பயத்தினாலேயே அமைதியாக இருந்தார். அதுவே அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்த வெற்றியால் வரும் வாரத்துக்கான கேப்டன் டாஸ்க்குக்கும் தகுதி பெற்றார். நமது ஆசை இவர் கேப்டனாக ஆகி, அந்த முள்கிரீடத்தைச் சுமக்க வேண்டுமென்பது. அது நடக்கிறதா என்பது நாளை தெரியும்.
ஒர்ஸ்ட்டு பெர்பார்மராக, நாம் எதிர்பார்த்தபடியே அனைவரும் சாண்ட்ராவை தேர்ந்தெடுத்தனர். பிக்பாஸின் டாஸ்காக இருந்தாலும், அது வெளியே தெரியாத நிலையில் அனைவரும் அடிதடியில் ஈடுபட்ட கமருவையும், பிரவீனையும் ஒர்ஸ்ட்டாக சொல்லாதது இவர்களின் மறதி அல்லது குரூப்பிசத்துக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். ஆனால் யோசித்தால், அந்நிகழ்வு இவ்வார ஆரம்பத்தில் நடந்தது. அதற்குப் பிறகு சான்ட்ரா போட்ட ஆட்டத்தால் அதெல்லாம் மறந்துவிட்டிருக்கலாம். தேர்தல் வரும் சமயத்தில் நடப்பவைதான் மக்களுக்கு நினைவிருப்பதுபோல!
இந்நிகழ்ச்சியின்போது, பூசணியும், வியானாவும் கொடுத்த விளக்கங்கள் எல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக இருந்தன. பந்தா பாரு, அந்த சந்தோஷ மூடில் அப்படியே போயிருக்கலாம், அதைக் கெடுத்துக் கொள்ளும் படி ’பிரஜினை நான் தொட்டுப்பேசும்போது கையைத் அநாகரீகமாகத் தட்டிவிட்டார்’ என்று ரிஜிஸ்டர் செய்தார். பிரஜினும் எழுந்து, ’நான் தட்டிவிட்டது அநாகரீகமில்லை, அவர் என் மீது முதலில் தேவையேயில்லாமல் தொட்டுப் பேசினதுதான் அநாகரீகம்’ என்று சொல்லிவிடவும் பாருவின் முகம் அஷ்டகோணலாகிவிட்டது.
பஞ்சாயத்து ஆரம்பமானது. உண்மையில் இது பாருவுக்கு பிரச்சினையாக இருந்திருந்தால் அதை அவரிடமே தனியாகவோ, அந்தச் சம்பவம் நடந்த போதோ சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து இப்படி பொதுவில் ரிஜிஸ்டர் செய்ய நினைத்தது, அவரது வழக்கமான டேமேஜ் விளையாட்டுதான். ஆனால், இப்படி பதிலடி கிடைக்கும் என்பது அவர் எதிர்பாராதது. ’நான் அண்ணனாகத்தான் தொட்டுப் பேசினேன்’ என்று பாரு சொல்ல, எஃப்ஜே, குறுக்கே புகுந்து ’இங்கே அக்கா தம்பியாகத் தொட்டுப் பேசுவதையே தப்பாப் பேசுகிற ஆட்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒத்து ஊதியது யாருன்னு உனக்கு ஞாபகமிருக்கா? அல்லது ஞாபகப்படுத்தவா’ என்று பதிலடி கொடுத்தார். நியாயம்தான்! ஆனால், அவசியமேயில்லாமல், பிரஜின், ‘தான் ஒரு உத்தம பத்தினன், ராமருக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா பையன். என் மனைவியைத் தவிர வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். அக்கா, தங்கச்சி விளையாட்டெல்லாம் என்கிட்ட வேண்டாம். எனக்கு பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் இருக்குது. யாராவது பக்கத்துல வந்தா வேற மாதிரி ஆயிப்போயிடும்’ என்று பில்டப் செய்தது சற்று ஓவராகத்தான் இருந்தது. பாருவே ஆனாலும், தொட்டுப் பேசினால் ஒரு தடவை நாகரீகமாக அதை எடுத்துச் சொல்வதுதான் நல்ல ஆணுக்கு அழகு. அதைவிடுத்து தட்டிவிடுவதோ, அதன் பின்னர் இப்படி அதை அக்ரஸிவாக அணுகுவதோ அழகல்ல. அதோடு இவருக்கு மட்டும்தான் குடும்பம் குட்டி இருக்கிறதா? மற்றவர்களுக்கெல்லாம் அது இல்லையா, என்ன?
ஆனால், இதை ஆரம்பித்தது பிரஜின் அல்ல, பாருவேதான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டார் என்பதையும் கவனிக்க வேண்டும். கூடவே, உடன் பழகின கமருவையே தப்பாகப் பேசியவர்தான் பாரு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
பாரு, வியானாவிடமும், சுபியிடமும் தமக்கு நடந்த அநீதியை விளக்கிக் கொண்டிருந்தார். திடீர் நாட்டாமையாகியிருக்கும் வியானாவும், ‘ஆமாக்கா, இது ஒரு பெண்ணின் கேரக்டரை டேமேஜ் செய்யும் அநீதி, இதை விடாதீங்கக்கா’ என்று கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்தார். கமருவின் கேரக்டரை பாரு டேமேஜ் செய்தபோதெல்லாம் நாட்டாமை லீவில் போயிருந்தார் போலிருக்கிறது. எல்லா ஆண்களையும் லெஃப்டில் டீல் செய்துகொண்டிருக்கும் பாருவுக்கே, பெண்ணிய சப்போர்ட்டைத் தருமளவுக்கு ஜெனி பாப்பாவுக்கு தைரியம் கூடியிருக்கிறது.