‘வாட்டர்மெலன்னு சொல்லிட்டே இருக்கறது கிரிஞ்சா இருக்கு பூசணி, யோசி’ என்று சாண்ட்ரா பூசணியிடம் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. அறிவுரை சொல்வது தப்பே இல்லை, ஆனா அதை யார்கிட்ட சொல்ல வேண்டும்கிற அறிவும் இருக்க வேண்டும். சாண்ட்ராவிடம் அது இல்லை!
‘வாட்டர்மெலன் என்பது 8 கோடி மக்கள் அன்பால் எனக்கு வைத்த பெயர், அது ஒரு புனிதமான வார்த்தை. நான் அடுத்து ஹீரோவாக நடிப்பதற்கான முயற்சியில் இருக்கிறேன். எனது புனித அடையாளத்தை அசிங்கப்படுத்த, கொச்சைப்படுத்த நீங்க யாரு?’ என்று தெளிவாக அந்த ஆள் அவரது பாயிண்டை எடுத்துவைத்தார். சாண்ட்ராவின் கதை அத்தோடு முடிந்தது! தொடர்ந்து இருவரும் கசமுசாவென்று வாக்குவாதத்தில் ஈடுபட, பூசணிக்கு ஒரு விசயம் மறந்துபோய்விட்டது. சாண்ட்ரா தனியாள் இல்லை, அடியாள் மாதிரி கூடவே புருசனை கூட்டிக்கொண்டு வந்தவர் என்பதுதான் அது. மற்றவர்களிடம் பேசுவது போலவே லுச்சாத்தனமாக சாண்ட்ராவிடமும் எகிறிக்கொண்டு போனார். ஆனால், அந்தப் புருசனாகப்பட்ட பிரஜின் இதைப் பார்த்துவிட்டு பக்கத்தில் வந்துவிட்டார். வந்து, ‘ஒரு பொண்ணு கிட்ட கையை நீட்டி பேசறது தப்பு, த… ப்… பு…’ என்று சொன்னார். அதன் அர்த்தம், என் பொண்டாட்டிகிட்ட எவனாச்சும், கையை நீட்டி பேசினீங்க, ஏற்கனவே நாலு கொலை பண்ணிட்டு இப்பதான் ஜெயில்லருந்து வந்திருக்கேன், அஞ்சாவது நடந்துடும்’ என்பது போல இருந்தது. பூசணி மட்டுமல்ல, அங்கிருந்த எல்லோர் கையும் தன்னிச்சையாக பின்பக்கம் போனது. ஏற்கனவே கையை நீட்டிப் பேசாமல் எப்படி கோபப்படுவது என்று நமக்கே புரியாமல் இருக்கும் போது, அதே ஆயுத்ததையே பிரஜினும் எடுத்திருப்பது ஆயாசமாக இருக்கிறது. சரி, அவர் எப்படி கோபப்படுகிறார் என்பதை வரும் நாட்களில் பார்த்து இனி நாமும் தெரிந்து கொள்வோம்.
வீடே இந்தப் பிரச்சினையில் இருந்த போது, பந்தா பாரு பரிதாபமாக வெளியே வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்தபடி, ’நானில்லாம என்னடா சண்டை போடுறீங்க’ என்பது போல ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிரஜின், பிரவீன், கமரு மூவரும் சேர்ந்து ஒரு பிராங்க் செய்ய திட்டமிட்டார்கள். ஆக்சுவலா இது தேவையில்லாத வேலை. சும்மாவே பிராங்க் பல மனக்கசப்புகளை ஏற்படுத்தும். இந்த வீட்டுக்குள் பிராங்க் செய்வது எல்லாம் வெடிமருந்துக் கோடவுனுக்குள்ள உட்கார்ந்துகொண்டு பீடி பிடிப்பதற்கு சமமானது.
திட்டப்படி பிரவீனும், கமருவும் மோதிக்கொள்ள, பிரஜன் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமாம். இருவரும் ஆக்ரோஷமாக அடித்துக்கொள்ள, பெண்கள் அத்தனை பேரும் பதறிப்போனார்கள். அமித், பூசணி, துஷார் உள்ளிட்ட ஆண்கள் தயங்காமல் நடுவில் புகுந்து, தைரியமாக இருவரையும் பிரிக்க முற்பட்டது சிறப்பு. பிரஜினும் இதற்குள்ளிருந்ததால் சாண்ட்ரா அழுதபடி அங்குமிங்கும் ஓடினார். இந்த நிகழ்ச்சியின் பின்விளைவுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. எடிட்டில் போய்விட்டதா, பின்னர் விளக்கப்படுமா, அல்லது வீக்கெண்ட் பஞ்சாயத்துக்கு ரிஸர்வ் செய்திருக்கிறார்களா என்பது பின்னர் தெரியவரும்.
பூசணி மைக்கைத் திருப்பிப் போட்டுக்கொண்டு சுற்ற, பிக்பாஸும், தல திவ்யாவும் அவரை மைக்கைப் போட்டுக்கொள்ள வைக்க வம்பாடு பட்டார்கள். இருவரையும் எதிர்த்து பூசணிக்கு சப்போர்ட்டாக பாரு களமிறங்கி, ’அவன் என் ஆளு, அவன் அப்படித்தாண்டா மைக்கை தலமாத்திப் போடுவான், இஷ்டமிருந்தா நிகழ்ச்சியை நடத்துங்க, இல்லைன்னா, செட்டை கலைச்சிட்டு எல்லோரும் வீட்டுக்குப் போங்க’ என்று பினாத்திக் கொண்டிருந்தார். சாண்ட்ராவும், திவ்யாவும், ‘இப்படி ஒரு அரமெண்டலை எங்காச்சும் பாத்திருக்கீங்களாக்கா, என் லைஃப் டைம்ல பார்த்ததில்ல’ என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள். நமக்கும் அதே ஆச்சரியம்தான்.
அடுத்து பிக்பாஸ் ஓட்டல் டாஸ்க்! டாஸ்க்கை திவ்யா வாசிக்க, பாரு ஊடே புகுந்து ஓலைப்பாயில் மழை பெய்தது போல பேசிக்கொண்டிருக்க, திவ்யா அவரை ’கொஞ்சம் மூடுறியா’ என்று வார்த்தையில் சொல்லாமல், சைகையில் சொல்லிவிட்டுக் கிளம்பினார். ’அய்யய்யோ என்னை மூடுன்னு சொல்லிட்டா, யாரும் இந்த அநியாயத்தைக் கேட்க மாட்டீங்களா’ என எல்லோர் பின்னாலும் போய் நீதி கேட்டுக்கொண்டிருந்தார். ஒருத்தரும் அதைக் கண்டுகொள்ளாமல், அவரவர் கேரக்டருக்குத் தயராகத் தொடங்கினார்கள்.
வழக்கம்போல அவர்களில் சிலரே விருந்தாளிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால், முந்தின சீசன் போட்டியாளர்களான பிரியங்கா, தீபக், மஞ்சரி ஆகியோரை இந்த விளையாட்டில் இறக்கிவிட்டது வித்தியாசமாக இருந்தது. எல்லோரும் டாஸ்க் என்பதால் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டார்கள். அதில் கூட நடுவே கூட பாரு, சும்மா இருக்காமல் பிரவீனுடம் மோதி மண்டையை உடைத்துக்கொண்டார்.