வெளியே கார்டனுக்குத் துரத்தப்பட்ட நால்வர் குழு வராண்டாவில் படுத்துக்கிடந்தது. ‘இவன் இன்னும் திருந்தல மாமா’ டெம்ப்ளேட்டுக்கு ஏற்ப பூசணி படுத்துக்கொண்டே, ‘தமிழக மக்களே’ என ரீல்ஸ் பண்ண முயற்சி செய்யவும், காமிராவே திரும்பிக் கொண்டது. இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் என அந்தாளுக்குத் தெரிந்தாலும் தெரியாத மாதிரியே இருப்பார். எப்பேர்ப்பட்ட அவமானம் என்றால் எப்படி துடைத்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பது என இவரைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
இவ்வளவு ஆகிவிட்டபடியால், ‘நீ உன் வேலையைப் பாரு, நான் என் வேலையைப் பாரு’ என்று பாருவிடம், கமரு சொல்லிக்கொண்டிருந்தார். ஆகா, கமருவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதா என்று கேட்காதீர்கள். பூனையை தடவிக்கொடுக்கும் தொனியில் சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வளவுதான் இந்தாளின் கோபம். பாருவும், ‘அப்பாடி’ என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளியே, ‘அப்படியெல்லாம் பேசாதடா, மனசு வலிக்குது, அப்படிச் சொன்னதுக்காக மன்னிப்புக் கேட்டுக்குறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இருக்குற ஓர் அடிமையையும் இப்போதைக்கு அவர் இழக்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. யாருக்கும் எந்த மரியாதையும் கொடுக்காமல், யார் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்காமல், காட்டுக்கத்து கத்தும் பந்தா பாரு, அவருக்குத் தேவை என்று வந்துவிட்டால் காலைப் பிடிக்கவும் தயங்காதவர் என்பது நாமறிந்ததே! சுய மரியாதை என்பது எள் முனையளவும் இல்லாதவர் போலிருக்கிறது.
மறுநாள் காலை அதை அப்படியே மாற்றி, புதிதாக உள்ளே வந்த திவ்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. ‘அவனும்தானே எல்லாத்துக்கும் பொறுப்பு, அவன்கிட்டயும் பாதி தப்பு இருக்கில்ல, அதையெல்லாம் ஒத்துக்கிட்டு என்கிட்ட மன்னிப்புக் கேட்டான்’
‘யாரு?’
‘கமருதான்’
’யாருகிட்ட?’
‘என்கிட்ட’
‘எந்த விசயத்துக்கு?’
பாருவுக்கு தலைசுற்றியிருக்கும்! சமாளித்துக்கொண்டு, ‘அவன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டதைப் பத்தி, அவன் அப்படி இப்படின்னு நான் அவனைப் பத்தி பூசணிகிட்ட சொன்னதா, பிரஜின் வெளிய பாத்துட்டு வந்து இங்க எல்லார் முன்னாலயும் சொன்னதைப் பத்தி, அவன் தப்பா புரிஞ்சிகிட்டான்னு நாங்க பேசி, நான் அவனுக்கு அதை எடுத்துச் சொல்லி, அதனால அவன் என்கிட்ட மன்னிப்புக் கேட்டு…’
’ஆவ்வ்வ்’ என்று கொட்டாவி விட்டார் திவ்யா. சற்று நேரத்தில் திவ்யாவும், சாண்ட்ராவும் சேர்ந்து வந்தபோதும், பாரு அதே புளுகுமூட்டையைத்தான் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார்.
புதிய வரவுகளுக்காக காய்கறி, மளிகை சாமான்களை அள்ளிக்கொடுத்தார் பிக்பாஸ்! அதைப் பார்த்து விக்ரம், ‘எங்களுக்கு இத்தனை நாளாக உப்பில்லாத கஞ்சியைப் போட்டுவிட்டு, இப்போது இதெல்லாம் டூ மச் பிக்பாஸ்’ என்று புலம்பிவிட்டுப் போனார். கனி, சுபி, கெமி என அனைவருமே அவர்களது வயித்தெரிச்சலை வெளிப்படுத்தினார்கள்.
பாரு, திவ்யா உரையாடல் மீண்டும் நடந்தது.
‘சாப்பிட வரலையா பாரு? எதையும் நினைச்சி வருத்தப்படாத!’
‘நான் எதையும் நினைக்கல, என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்’
‘அதைத்தானே நானும் சொன்னேன், சரி சாப்பிட வா’
‘எங்க அம்மா என்ன நினைப்பாங்கன்னு சொன்னீல்ல, அதை நான் வீட்டுல போய் சரி பண்ணிப்பேன்’
‘போய்ப் பண்ணிக்கோ, இப்போ விளையாட்டுல கவனம் செலுத்துன்னு நாந்தானே சொன்னேன்’
‘அதை நீ சொல்லக்கூடாது, நான் வருத்ததுல எல்லாம் இல்லை’
‘நீ வருத்ததுல இருக்கியோன்னு நினைச்சி சொன்னேன்’
‘அதான் நான் இல்லைன்னு சொல்றேன்’
‘அப்படின்னா தூங்காம, சாப்பிடாம புலம்பிகிட்டே இருக்கியேன்னு சொன்னேன்’
‘தூங்காம, சாப்பிடாம இருந்தா வருத்தம்னு அர்த்தமா?’
‘அப்படின்னா கூலா இருக்க வேண்டியதுதானே?’
‘ஒரு பொண்ணா எனக்கு அது வருத்தம்தானே, உனக்கு இதெல்லாம் நடந்தா தெரியும்’
‘அதான் சமாளிச்சிடுவேன்னு இப்ப சொன்னியே?’
‘அதெப்படி என் வீட்டுல போய் அம்மாவை நான் எப்படி சமாளிக்கிறது?’
‘நன்றி, வணக்கம்!’
வியானா பாப்பா, சுபியிடம் வியாக்கியானம் செய்துகொண்டிருந்தார். ‘பாரேன், புதுசா வந்த அக்காங்கள் ரெண்டு பேரும் கனியோட அன்புக்குழுவோடு சீக்கிரமா ஐக்கியமாயிடுவாங்க, ஆனா அந்த ஹைட்டா இருக்கும் அங்கிள் போகமாட்டார். இது என்னோட கணிப்பு’ என்று கணித்தார். நடக்கும் என்றுதான் நமக்கும் தோன்றுகிறது. காத்திருந்து பார்ப்போம்.
’வாங்க அமித் சார், கர்ணன் சீன் நடிச்சிக் காமிக்கிறேன்’ என்று பூசணி, அமித்தை சித்திரவதை செய்ய அழைத்தார். தலையெழுத்தே என்று அமித்தும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘டீலக்ஸ், சாதா என்ற பிரிவினை நீக்கப்படுகிறது’ என்று பிக்பாஸ் அறிவித்தார். புதிய போட்டியாளர்கள் நால்வருக்கும் ‘தல’ போட்டி நடந்தது. திவ்யா வென்றார். அவர் அவரது விதிமுறைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பாரு, ‘என் பிரச்சினையைப் பற்றி யாரும் பேசக்கூடாது’ என்று அவரே அவர் பிரச்சினையை மீண்டும் நோண்டினார். அதற்கு திவ்யா,
‘சரி, உன் பிரச்சினையைப் பற்றி யாரும் இனிமே பேச மாட்டாங்க’
‘நீங்க பேசினீங்களே?’
’அது நீ கேட்டதால் சொன்னேன் பக்கி’
‘நேத்து இல்ல, இப்ப’
‘இப்ப என்ன பேசினேன்?’
‘பாரு பிரச்சினையை இனி யாரும் பேசக்கூடாதுனு பேசினீங்களே’
‘அது நீ கேட்டுக்கிட்டதால சொன்னேன்’
‘இப்படித்தான் எல்லாரும் என் பிரச்சினையையே பேசுறாங்க, கேட்டா ஏதாச்சும் காரணம் சொல்றாங்க’
‘இவ கூட எப்படிடா ஒரு மாசம் குப்பை கொட்டுனீங்க’ என்று வாய் வரை வந்ததை அடக்கிக்கொண்டார் திவ்யா.
அடுத்து நாமினேஷன் டாஸ்க்! புது நபர்கள் மற்றும் ஃப்ரீ பாஸ் வைத்திருக்கும் கனி தவிர மற்றவர்களை நாமினேஷன் செய்யலாமாம். மீண்டும் பெருவாரியான 11 ஓட்டுகள் வாங்கி பாரு முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தை பூசணி பெற்றார். இவர்களோடு சேர்த்து வினோத், பிரவீன், கமருதீன், ரம்யா, எஃப்ஜே, சபரி, வியானா, கெமி, விக்ரம், துஷார் என ஒன்றிரண்டு ஓட்டுகள் வாங்கி லிஸ்ட்டில் இணைந்தனர். போன வாரம் நாம் கணித்தது நடந்தது. இந்த வாரக் கணிப்பு: துஷார் அல்லது கமரு!