நேற்றைய டாஸ்க்கில் கனியின் அன்புக்குழுவைத் தாக்கியதால், ஜெனிபாப்பா வியானா மீது பாரு, பூசணி கூட்டணிக்கு புது அன்பு தோன்றியிருக்கிறது. பாப்பாவையும் நம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா எனும் சிந்தனையோடு பாப்பாவோடு அன்பொழுகப் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். ஆனால், பாப்பாவோ அதற்குத் தெரிந்த நியாயத்தைப் பேசிக்கொண்டிருந்தது.
வியானா: ‘அதாவத்ண்ணா...’
பூசணி: ‘வாட்டர்மெலன் ஸ்டாராகியாக, டாக்டர் நடிப்பு அரக்கன்..’
வி: ‘இல்...’
பூ: ‘நானும் பாருவும் ஒரு சிறந்த ஜோடியாக இருக்கும் போது, வினோத் வந்து ஊடால புகுந்து..’
வி: ‘யோவ், வாயை மூடப்போறியா? இல்ல எழுந்து போகவா?’
பாரு: ‘அண்ணே, நம்ம டீமுக்கு புது ஆள் வேணுமா, வேணாமா, கொஞ்சம் உன் திருவாயை மூடிகிட்டிருக்கியா? நீ சொல்லு வியானா... அதாவது நான் எவ்வளவு நல்லவள், இருந்தாலும் எல்லோரும் ஏன் மேல் காண்டுல சுத்துறாங்கன்னு நீ விளக்கமா சொல்லப்போற, அதானே...’
வி: ‘அடப்போங்கடா!’
அடுத்து வந்தது எஃப்ஜே, மற்றும் சபரியின் சொந்தக் கதை சோகக்கதை எபிசோடுகள்! இந்த சீசனில், ஒரு சிலர் தவிர மற்றவர்களிடம் பெரிய சோகக்கதைகள் இல்லாதது நமக்குப் பெரிய ஆறுதல். எஃப்ஜே வளவளவென்று தான் எப்படி ராப் கல்ச்சருக்குள் நுழைந்தேன், ஹிப்பாப் தமிழா எப்படி தனக்கு வாய்ப்பளித்தார் என்பதைச் சொன்னார். சுருக்கமாக சொன்னது போலத்தான் நமக்குத் தெரிந்தது, ஆனால் எடிட் செய்துவிட்டார்கள் என்பது தெரிந்தது. சுருக்கமாகச் சொன்னதே நமக்கு வளவளவென்று தோன்றியிருக்கிறது என்றால் முழு வெர்சனையையும் கேட்டவர்கள் என்னவாயிருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். பாருவெல்லாம் பாதியில் வெளிநடப்பு செய்து புலம்பிக்கொண்டிருந்தார். பாருதான் ஓவர் ரியாக்ட் செய்திருப்பார் நன்று நாம் சந்தேகித்தால், பின்னாலேயே கமருவும், வினோத்தும் தலைதெறிக்க ஓடிவந்து பேசிக்கொண்ட பிறகுதான் நமக்கு விளங்கியது, சுமார் இரண்டு மணி நேரம் பையன் எல்லோரையும் வைத்துத் தாளித்திருக்கிறார் போலிருக்கிறது! அனிதா சம்பத்தின் எபிசோடெல்லாம் நம் கண் முன்னால் வந்து போனது. பரவாயில்லை, நாமாவது தப்பித்தோமே, நன்றி எடிட்டர்ஸ்.
சபரி அவரது கதையை, சுவாரசியமாகச் சொன்னார். அவரது அப்பாவுக்கு, நண்பர்களிடையே ஸ்பைடர்மேன் எனும் பட்டப்பெயர் வந்தது, அம்மாவோடு இருக்கும் போது பெண்களை சைட் அடித்து மாட்டிக்கொண்டது, நண்பரின் துரோகம், விஜய் டிவியின் வாய்ப்புகள் என அவரது பேச்சு இயல்பாக இருந்தது.
சொந்தக்கதை, சோகக்கதை இத்தோடு எபிசோடு முடிந்துவிட்டதாம்! அப்பாடி என்று நமக்கு பெருமூச்சு வந்தது! கையோடு இந்தக் கதைகள் எபிசோடில் யார் சிறப்பாகக் கதை சொன்னார்கள், யார் மொக்கை போட்டார்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் என்று பிக்பாஸ் சொன்னார்! ஓட்டுகள் பரவலாக விழுந்தன. பாருவை யாருமே சொல்லாத நிலையில், பூசணி வந்து பாரு மொக்கை போட்டதாகச் சொன்னார். ஒரு பூசணி ஜூஸ் போடப்படப்போகிறது! இறுதியில் சிறந்த கதைகள் என கனி, கலையரசன் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கனிக்கு அடுத்த வாரமும் நாமினேஷன் ஃப்ரீ கிடைத்ததைப் பார்த்து பாருவுக்கு, ‘பதனி பதனி’ செந்தில் நிலைமை. இது சீக்கிரமே வெடித்து வெளிப்படுவதை நாம் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ‘இது எப்படிடா நடக்குது, வயித்தெரிச்சலா கேக்கல. ஆனாலும் வயித்தெரிச்சல்தான்’ என்கிற ரேஞ்சில் கலையிடம் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அடுத்து கடைசி லாக்கர் டாஸ்க் என்று சொல்லிவிட்டு, டாஸ்க்கே இல்லை, அதுதான் டாஸ்க் என்று குழப்பிவிட்டார் பிக்பாஸ்! அடுத்தும் நமக்குப் புரியாதது போல ஒரு ஆட்டமாடினார் பிக்பாஸ்!
மீண்டும் ப்ளாஸ்மா டிவி முன் உட்கார வைத்து, 'யார், 'நான் முழு ஈடுபாட்டோடு விளையாடினேன்' என்று நினைக்கிறீர்கள்?' என்று அவர்களையே முடிவு செய்யச்சொன்னார். அதில் எதற்குப் பாதி பேர் இல்லை என்று மறுபக்கம் உட்கார்ந்தார்கள் என்று நமக்குப் புரியவில்லை. ஈடுபாட்டோடு விளையாடுகிறோம் என்று நினைத்த பகுதியினரைப் பார்த்து ‘அது ஆனை, இது பூனை, இப்படி ஒரு கேவலமான சீசனை நான் பார்த்ததே இல்லை, இனியாவது டிப்ளமேட்டிக்காக இல்லாமல் ஒழுங்காக விளையாடுங்கள், அல்லது வெளியே தொரத்தி வுட்டுடுவேன்’ என்று ஏன் மிரட்டினார் என்றும் புரியவில்லை. அடேய், எடிட்டர்களா இப்போதுதானே பாராட்டினோம், அதற்குள் இப்படி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் எடிட் பண்ணினால் என்ன செய்வது?