கோவித்துக்கொண்டு போன பாருவைப் பிக்பாஸும் கண்டுகொள்ளவில்லை, மற்ற போட்டியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. பெண்களிடம் வழிவதற்கு இது இன்னும் வசதியாகப் போய்விட்டதே என்று, ‘பாரு பொறுப்பையும் நானே சேர்த்துப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அறிவித்துவிட்டு தர்பூசணியும் சின்சியராக வேலையைப் பார்க்கத் தொடங்கினார். சற்று நேரத்துக்கெல்லாம் நம்முடைய முக்கியத்துவம் குறைந்துகொண்டே போகிறது, இது நமக்குத்தான் பிரச்சினையாக முடியும் என்று தனிமையில் ஞானோதயம் அடைந்த பந்தா பாரு, மீண்டும் QC-யாக, தானே பொறுப்பேற்றுக்கொண்டு விளையாட வந்துவிட்டார்.
’யார் பாட்டிலை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் வினோத் பாட்டிலை மட்டும் ரிஜக்ட் செய்ய வேண்டும், ரம்யா பாட்டில் அனைத்தையும் ஓகே செய்ய வேண்டும்’ என்பது பாருவின் திட்டம். ரம்யாவிடம் நாமினேசன் ஃப்ரீ பாஸ் டீலிங் போட்டுக்கொண்டிருக்கிறார், தன்னைக் கடுப்பேற்றியதால் எஃப்ஜேவைப் பழி வாங்க வேண்டும். இந்த இரண்டும்தான் அவரது நோக்கம்! ஆனால், அவரது திட்டப்படி பூசணியை வழிக்குக் கொண்டுவருவது மிகச் சிரமமாக இருந்தது.
நடுவில், சுபியிடமும் நாமினேசன் ஃப்ரீ பாஸுக்கு டீலிங் பேசிப் பார்த்தார் பந்தா பாரு. சுபி சரி என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் நடுவாக மண்டையை ஆட்டிவைத்தார். சுபிக்கு விக்கலோடு, பூசணியோடு, வியானாவோடு, கனியோடெல்லாம் தனித்தனியாக டீலிங் போய்க்கொண்டிருக்கிறது. பாருவுடனான டீலிங்கை பாதியில் அறுத்துவிடப்போகிறார் என்பது தெளிவு.
நடுவில் வீட்டு வேலை செய்கிற பிரச்சினையில், கமருவும், துஷாரும் மோதிக்கொண்டார்கள். பாருவாவது காமெடி பீஸ்தான்! ஆனால், கமருதான் இப்போதைக்கு ஒர்ஸ்ட் டாக்சிக் பிளேயராக இருப்பார் போலிருக்கிறது. விவாதத்தை எளிதாக முடிக்க எவ்வளவோ வழிகள் இருந்தும், எந்த பிரச்சினை ஆனாலும் அதைப் பர்சனலாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அடுத்தவரையும் தரக்குறைவாகப் பேசி சிக்கலைப் பெரிதாக்கவும் செய்கிறார். இந்தப் பிரச்சினையை ஒரு கட்டத்தில் கலைகலப்பாகவும் ஆகிவிட்டது. கமரு ரெட் கார்டு கொடுக்கப்பட வேண்டியவர். சபரி ஊடே புகுந்து அவரது ‘ஒரு நிமிட கான்செப்டை’ புகுத்தி இருவரையும் பிரித்துவிட்டார். அல்லது இது அடிதடியாகவும் மாறியிருக்கும்! சபரி மாதிரி ஓர் ஆள் அவசியம் தேவைதான்!
அதென்னடா ஒரு நிமிட கான்செப்ட் என்று கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். சண்டை போடும் இருவரிடமும் தனித்தனியே போய், 'என்ன பிரச்னை, யாரு என்ன சொன்னானு எதும் கேட்கல. ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்ங்க. ஒரு நிமிஷம் கம்னு இருங்க. ஒரு நிமிஷம்.. ஒரே ஒரு நிமிஷம்' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர்கள் என்ன சொல்ல வந்தாலும், 'அதெல்லாம் ஒண்ணும் கேட்கல நான். ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. ஒரே ஒரு நிமிஷம்...' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்!
டாஸ்க் தொடங்கியது.
’நீ என்னை பத்தி நினைக்கவே மாட்ற, எல்லாரையும் ஒரே நேரத்துல கரெக்ட் பண்ணப் பாக்குற? சுபியை நேத்து எப்படியாச்சும் குறைச்சு விட்டுருக்கணும், இன்னிக்காவது பண்ணித்தொலை’ என்று பாரு, தர்பூசணி நாயகனிடம் மந்திரம் ஓதி வேலையைத் தொடங்கினார். எல்லோருக்கும் ஜூஸை செலக்ட் செய்ய வேண்டிய தகுதிகள் என்று ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து போயிருந்தது. தர்பூசணி மட்டும் கொஞ்சமாக அதை நினைவில் வைத்திருந்தார். ‘அவ ஜூஸ் டேஸ்டா இருந்துச்சு, பாட்டில் கீறல் இல்லாம இருந்துச்சு, நா எப்படி ரிஜக்ட் பண்ண முடியும் பாரு?’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
மதிய உணவு நேரத்தில், ‘சாப்பாட்டை திருடித் திங்கிறியே வெக்கமா இல்ல, சீப்பான ஆளு, முட்டாப்பய’ என்றெல்லாம் பாரு பூசணியைத் திட்ட ஆரம்பிக்க பூசணி, ‘நீ திட்டுறதுக்கு நான் அமைதியா இருக்கேன்னு ஓவரா போகிற… நா பதிலுக்கு ஆரம்பிச்சா நீ அவ்வளவுதான்’ என்று மிரட்டியதும், அதிலிருக்கும் ஆபத்தைப் புரிந்து, அமுக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு விலகினார் பாரு.
நடுவே, மைக்குக்குப் பேட்டரி மாற்றச்சொல்லி பாருவை எச்சரித்தார் பிக்பாஸ். தல கனி, ‘எத்தனை தடவைதான் உனக்கு சொல்றது? பிக்பாஸ் சொல்ற மாதிரி வைச்சிக்குற? டாஸ்க்கையும் ஒழுங்கா செய்ய மாட்டிங்கிற, வீட்டு வேலையும் பாக்க மாட்டிங்கிற, இந்த மாதிரி பர்சனல் வேலைகளையும் செய்ய மாட்டிங்கிற.. மண்டையில் ஏதாச்சும் இருக்கா உனக்கு? ’ என்று டோஸ் விட்டார். பதிலுக்கு, ‘நா இப்பதான் குளிச்சிட்டு வர்றேன், குளிச்சிட்டு பேட்டரி மாற்றலாம்னு இருந்தேன், அதுக்குள்ள ஏன் இப்படி வர்றே’ என்று விவாதம் செய்தார். ஒவ்வொரு தடவையும் இப்படித்தான், ‘இப்பதான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன், வந்து செய்யலாம்னு இருந்தேன், இப்பதான் சாப்பிட்டுட்டு வர்றேன், சாப்பிட்டுட்டு செய்யலாம்னு இருந்தேன்’ இப்படிச் சாக்கு சொல்வதே இவருக்கு வேலையாக இருக்கிறது.
அடுத்து ஜூஸ் சோதனை ஆரம்பமாயிற்று. ஒரு கட்டத்தில், ‘நீயெல்லாம் ஒரு ஆளுன்னு இந்த வீட்டுல ஒரு பய உன்னை மதிக்க மாட்றான், நான் மட்டும் உனக்கு எப்படியெல்லாம் சப்போர்ட் பண்ணிகிட்டிருக்கேன், அந்த நன்றியுணர்ச்சி வேண்டாமா? இங்க வேற யாரு இருக்கா நமக்கு? உனக்கு நான், எனக்கு நீ! உன் கால்ல வேணாலும் விழுறேன், தயவு செஞ்சு புரிஞ்சுக்க தர்பூசணி. உனக்கு இரக்கமில்லையா? இனி நான் உன்னைத் திட்டவே மாட்டேன். என் முட்டை, நூடுல்ஸையெல்லாம் திருடித் தின்னுகிட்டிருக்கியே, அதற்கு ஒரு பரிகாரம் வேண்டாமா? தயவு செஞ்சு ரம்யாவை ஜெயிக்க வைத்து, எனக்கு உதவி செய்’ என்று எப்படி எப்படியெல்லாமோ தர்பூசணியைக் கன்வின்ஸ் செய்யப் போராடிய பந்தா பாரு, லிட்டரலாக மூன்று நான்கு முறை அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டும் ஒரு பலனுமில்லை! பூசணி, அவர் திட்டப்படி, சுபியை ஜெயிக்க வைத்துவிட்டார். தான் நினைத்தது நடக்கவேண்டுமென்றால் காலைப்பிடிக்கவும் தயங்காத ஜென்மம்தான் நான் என்பதைக் காட்டிவிட்டார் பாரு. அப்படியும் அவர் நினைப்பது நடக்கவில்லை என்பதுதான் ட்விட்ஸ். அதைவிட இதில் காமெடி என்னவென்றால், ரம்யா ஜெயித்தால், அவர் பந்தா பாருவுக்கு பட்டை நாமம் போடத் தயாராக இருந்தார். அது நடந்திருந்தால் பார்க்கும் நமக்கு இன்னும் குஜாலாக இருந்திருக்கும். போச்சு!
முதலில் பிரவீனுக்கு நாமினேஷன் ஃப்ரீ கிடைத்தது. அடுத்து சுபிக்கு நாமினேசன் ஃப்ரீயோடு, இன்னொருவரைக் காப்பாற்றும் பவரும் கிடைத்தது. அவர் யாருக்கு அதைத் தரப்போகிறார் என்பது அடுத்த வாரம்தான் தெரியும். அதற்குத்தான் இத்தனை அடிதடி!