டீலக்ஸ் அறையிலிருந்து முதல் தடவையாக சாதா அறைக்கு வந்த 'ஜெனி பாப்பா' வியானாவை, வேலை வாங்குகிறேன் பேர்வழி என்று ஆதிரை வம்பிழுத்துக் கொண்டிருந்தார். போதாத குறைக்கு, ஆதிரையை எதிர்த்துப் பேசியதால் 'வீட்டு தல' கனி வந்து ஜெனிபாப்பாவுக்கு தோப்புக்கரண தண்டனை வேறு கொடுத்தார். ரசிகர்கள்தான் ஜெனி பாப்பா ஆர்மி என்று ஒன்றை ஆரம்பித்து அவரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வரும் போலிருக்கிறது.
இன்னொரு பக்கம், பந்தா பாருவை வேலை வாங்க முயற்சி செய்துகொண்டிருந்த எஃப்ஜேவுக்கு பாரு தண்ணி காட்டிக்கொண்டிருந்தார். ‘ஒரு டீ குடிச்சாத்தாண்டா வேலை பார்ப்பேன், போய் ஸ்ட்ராங்கா ஒரு டீ கொண்டு வா’ என்று அவரையே பதிலுக்கு வேலை சொன்னார். காளை மாட்டிலிருந்து கூட பால் கறந்துவிடலாம், நம்ம பாருகிட்ட வேலை வாங்க முடியுமா? கடைசியில் டீயைக் கொடுத்து வீடு பெருக்கச் சொன்னார்கள். அதன் பின்பும், பெருக்குவேன், ஆனால் டீலக்ஸ்காரர்கள்தான் குப்பையைக் கொண்டு போய் வெளியே போட வேண்டும் என்று வம்பு செய்தார். ஒரு கட்டத்தில் இது பெரிய பிரச்சினையாகி ஊர் ஒன்று கூடி சந்தைக்கடை நிலவரத்தை உருவாக்கியதும் இறங்கி வந்தார். விக்கல்ஸ் விக்ரம் ‘பாப்கார்ன் கிடைக்குமா?’ என்று பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே சண்டையைப் பார்த்து என்ஜாய் செய்யலாம் என்று யாரையோ கேட்டுக்கொண்டிருந்தார்.
பாரு ஆரம்பத்திலிருந்தே சில வேலைகளை இழிவான வேலை என்று டீல் செய்வது பப்பரக்கே என்று பல்லிளிக்கிறது. பிக்பாஸோ, சின்ன பாஸ் விசேவோ இவரது இந்தப் போக்கை கவனித்து ஒரு குட்டு வைப்பது அவசியம்!
கனி முடிந்த அளவு, பிரச்சினையை தொண்டைத் தண்ணீர் வற்ற சரி செய்து, எங்கிருந்தோ ஒரு கையுறையைக் கொண்டு வந்து கொடுத்தார். ‘ஆங், இதுக்காகத்தான் பிரச்சினை செய்தேன், ஹைஜீனிக்தான் முக்கியம், இதை முதலிலேயே தந்திருக்கலாம்ல’ என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டு குப்பையை அள்ளினார் பாரு.
எஃப்ஜே தேவையே இல்லாமல், ‘சோறு வந்தா மட்டும் நல்லா கொட்டிக்கிறீங்க, வேலை செய்ய வலிக்குதோ?’ என்று நக்கல் செய்துவிட்டுப்போக ஜெனிபாப்பா காண்டாகி, ‘என்னடா, எங்கள் வீட்டில் என்னா நாளும் கார்த்திகைனு பாட்டாடா பாடிக்கிட்டிருங்க, பாப்போம்டா உங்க ஆட்டம் எத்தனை நாளைக்குன்னு’ என்று நக்கல் செய்தார். அவருக்கு ஒத்து ஊதிய பாருவைக்கூட ஒத்து ஊதவிடாமல், அவர் வாயை அடைத்துப் பிடித்துக் கொண்டு தன் கருத்தைப் பொரிந்து தள்ளினார். பாப்பாவுக்கு காமெடியெல்லாம் கூட வருதுங்க!
அடுத்து சொந்தக்கதை சோகக்கதை! பாருவும், பிரவீனும்! எங்கப்பா மாதிரி தலைசிறந்த அப்பா யாருமில்லை. எனக்கு 17 வயதான போது இறந்துவிட்டார் என்று சொன்ன பாரு, அடுத்த வாக்கியத்திலேயே நான் அப்பா பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த துரதிருஷ்டசாலி என்று பல்டி அடித்தார். 17 வயது வரை என்ன செய்துகொண்டிருந்தார் என்று தெரியவில்லை. என்னுடைய அறிவு, திறமை, பேச்சு என எல்லாவற்றுக்கும் காரணம் என் அம்மாதான் என்றார். நாம் குறித்துக்கொள்ள வேண்டிய செய்தி. பிரவீனும், ஏழ்மையை முன்வைத்து ஒரு எளிய கதையைச் சொல்லிவிட்டு, மனைவி காதலியாக இருக்கும் போது அவரைச் சந்தேகப்பட்ட தவறை ஒப்புக்கொண்டு பின் அவரால் தான் முன்னேறி வந்ததையும் நன்றி கூர்ந்தார்.
ஜூஸ் பேக்டரி என்று அடுத்தொரு விளங்காத வீக்லி டாஸ்க்கை கொண்டுவந்தார் பிக்பாஸ்! அதில் குழு பிரித்துக் கொண்டார்கள். குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர் என வெற்றி, தோல்வி இல்லாத, பலனற்ற QC வேலைக்கு எல்லோருடைய ஒட்டுமொத்த தேர்வுக்கும் ஆளானார் பந்தா பாரு, கூடவே அவரது அடிப்பொடி பூசணியையும் உதவிக்கு அனுப்பிவைத்தார்கள். எல்லோரும் சொதப்பலான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பேசாமல், ஓட்டமும், சாட்டமுமான பாட்டில் பொறுக்குகிற வேலை தந்திருக்கலாம். இவர்களிருவரையும் க்யூசியில் போட்டு அவர்களுக்கு அவர்களே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நினைத்தது போலவே பத்துக்கு ஒன்பது என்ற அளவில் எல்லா பாட்டில்களையும் சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்து ஆட்டத்தை சவசவவென்று ஆரம்பித்து வைத்தார்கள் இருவரும். இந்த டாஸ்க் என்னவாகிறது என்பதை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்!