அழகுக்கிளிகள் அரோராவையும், ஆதிரையும் ஜெயிலில் தள்ளிப் பூட்டினார்கள். அரோராவை உள்ளே அனுப்புகையில் கூட பூசணிநாயகன் அவரை உரசிகொண்டே நின்றார். ‘யோவ், கொஞ்சம் தள்ளித்தான் நில்லேன்யா, படுத்துறயே’ என்று புலம்பினார் அரோரா.
பொலம்பல் திலகம் கம்ருதீன், தல டாஸ்க்கில் கத்தியால் குத்தி தன்னை வெளியேற்றியதற்கு நேற்று ரம்யாவையும், ஆதிரையையும் போட்டுப் படுத்தியது போதாமல், இன்று சுபியைப் பிடித்து வைத்துக்கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார். அவரும் ’கேப்டனாகணும்னா முதல்ல பொறுமை வேணும், இப்படி பொம்மையைக் குத்தினதுக்கே ஸ்போர்டிவா எடுத்துக்க முடியாம உக்காந்து அழுதுகிட்டிருக்க, நீயெல்லாம் கேப்டனாகி என்னத்தத்தான் பண்ணப்போற’ என்று அவரும் விரட்டிவிட முயன்று கொண்டிருந்தார். கமருவும் விடாமல், ‘அதுக்காக பாத்ரூம் போன டைம்ல போய் கத்தில குத்துவீங்களாடி? இதெல்லாம் கேவலமான டர்ட்டி கேமா இருக்கு! உங்களுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்ல, நீங்கள்லாம் வந்த இடம் சரியில்ல’ என்று மல்லுக்கு நின்றார். ’வந்த இடம் சரியில்லயா? யாரடா சொல்ற நீ?’ என்று சுபி சரியாக பாயிண்டைப் பிடித்ததும், கபால்னு திசைதிருப்பி, ‘கையை இறக்கிப் பேசு, தைரியம் இருந்தா மூக்குக்கு நேரா மோதணும், இப்படி பாத்ரூம் போனப்ப முதுகுல குத்தக்கூடாது’ என்று கத்திக்கொண்டே எழுந்துபோனார். ஆத்திரம் அடங்காமல் ரம்யாவிடமும், ஆதிரையிடமும் வம்பு வளர்த்தார். கமரு சரியான ஆம்பள பாருவா இருப்பார் போலிருக்கிறது.
அடுத்து கடைசியாக வினோத், சபரியைக் குத்தி ஆட்டத்தை முடித்துவைக்க, கனி அடுத்த வார 'தல'யானார். விக்ரம், வியானா, சுபியெல்லாம் ஒரு பக்கம் ஓய்ந்துபோய் படுத்துக்கிடக்க, இந்தப் பக்கம், பாரு, கிரிஞ்சு, பூசணி மூவரும் குரூப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். பாரு, 'கலை, அங்கே குரூப்பாக எல்லோரும் செட்டு சேர்ந்து உட்கார்ந்திருக்காங்க, அந்த விக்ரம் இருக்கான்ல, எல்லோர் மண்டையைக் கழுவிகிட்டிருக்கான், சுபி, வியானாவையெல்லாம் ஈஸியாக மண்டையைக் கழுவிடலாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். என்னடா இந்த வசனத்துக்குப் பூசணி நாயகன் மண்டையை ஆட்டவில்லை என்று கவனித்தால், தூக்கம் சொக்க அவரது தலை தொங்கிக்கொண்டிருந்தது.
விசே வந்தார். நினைத்தது போலவே, இந்த கமருவின் ’பாத்ரூம் போன’ பஞ்சாயத்துதான், விசே முன்னால் முதல் பஞ்சாயத்தாக விசாரிக்கப்பட்டது. ’சபரியும், கனியுமாவது பெஸ்ட் பெர்மார்மர்ஸ் என்று அதிர்ஷ்டத்தில் வந்தார்கள். ஆனால், நான் கஷ்டப்பட்டு உழைச்சி, வின் பண்ணி வந்தேன். என்னை எல்லோரும் நான் - பாத்ரும் போன கேப்பில்- குத்தி அனுப்பிவிட்டார்கள் சார். நியாயத்தைக் கேளுங்க’ என்று முறையிட்டார் விசேவிடம். ’வாடி பார்த்தசாரதி, உனக்காகத்தான் காத்திருந்தேன், வா’ என்பது போல கமருவை வைத்துச் செய்துவிட்டார் விசே. ’நீ பாக்காதப்ப கத்தில குத்துவாங்கன்றதுதான் ரூலே.. அப்ப நீ பாத்ரூம் போறது முக்கியமா? தல டாஸ்க் முக்கியமா’ என்று ஆரம்பித்து, ‘அப்படி என்னத்தை ஜெயிச்சி வந்த? அப்படி ஒண்ணுமில்லயாமே, எல்லாவனும் விட்டுக்கொடுத்துதான வந்திருக்க… இதுக்கென்ன இத்தனை அலப்பறை?’ என்று விளாசினார். நல்ல வேளையாக, ‘வந்த இடம் சரியில்லை’ என்கிற மேஜர் கம்ப்ளைண்டை விசாரிக்காம விட்டுட்டாங்க. இல்லையெனில் அது பற்றிக்கொண்டிருக்கும். அப்படியும் அந்தப் கம்மி கமருவுக்கு எதுவும் மண்டையில் உறைத்தது போல தெரியவில்லை.
இடைவேளை கேப்பில் நேரே பாருவிடம் போய்த்தான் நின்றார். பாருவும், ’இப்படித்தான் எல்லோரும் உன் மண்டையைக் கழுவுவாங்க, பாரு, இங்க இந்தப் பாருவைத் தவிர வேறு யாருமே நல்லவங்க கிடையாது, வெசம், வெசம். ஜாக்கிரதையா இருந்துக்கோ’ என்று கமருவின் மண்டையைக் கழுவிக் கொண்டிருந்தார். ’ஆமாக்கா, கரெக்டா சொன்னீங்க’ என்று சொல்லி மண்டையை வேறு ஆட்டினார். கொஞ்சம் தேறுவார் என்று நினைத்தோம், ஊஹூம், இது பூட்ட கேசு!
விசே, ‘இந்த மாஸ்க் டாஸ்க்கை தல பதவிக்காக சீரியஸா விளையாடச்சொன்னா, என்னடா குருப்பு குருப்பா விட்டுக்கொடுத்து விளையாடிகிட்டு இருக்கீங்க?’ என்று மற்றவர்களையும் காட்டமாகக் கேட்க, பந்தா பாரு எழுந்து, ‘அந்த குரூப்ல விளையாண்ட மாதிரி எங்க டீலக்ஸ் குரூப்புல, எல்லோரும் நான் சொல்வதைக் கேட்டு குரூப்பாக விளையாடாமல், ரம்யா, வியானா, சுபி எல்லோரும், தனித்தனியா, குரூப் குரூப்பா விளையாண்டாங்க சார். அவங்களை எல்லாம் கண்டிச்சு வைங்க சார்’ என்று சொன்னார். ‘இதைத்தான்மா நாங்களும், பிக்பாஸைத் தூக்கிட்டு, உன்னை பிக்பாஸா ஆக்கிடலாமான்னு நிகழ்ச்சி இயக்குநர்களோடு பேசிகிட்டிருக்கோம், நல்ல செய்தி வந்ததும் சொல்றோம், இப்போதைக்கு உட்காருங்க’ என்று அமர வைத்தார்.
கனியும், சபரியும் எழுந்து, ‘அப்படித்தான் ஐயா முதல்ல விளையாடலாம்னு நினைச்சோம், இந்த பிக்பாஸ் டின்னர் தர்றேன்னு சொன்னதும், லைட்டா சிந்தனை தவறிப்போச்சு ஐயா, சோத்துக்காக குருப்பு சேர்ந்து விளையாடிட்டோம் மன்னிச்சிருங்க’ என்று பஞ்சாயத்தை முடித்து வைத்தார்கள்.
‘ஏன் என்னை இப்படிப் போட்டுத் தாளிக்கிறாரு’ என்று கமரு, கிரிஞ்சு கலையரசனிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். ‘வேற ஒண்ணுமில்ல, உன் வாயிதான் காரணம்’, என்றார் கலை. கிரிஞ்சு அவ்வப்போது சரியாகப் பேசக்கூடிய ஆள்.
மீண்டும் வந்த விசே, இரண்டு முகங்கள் கொண்ட ஆள் யாரெல்லாம் என்று ஒரு கேள்வி கேட்டார். பாரு, ரம்யா, சபரி மூன்று பேரையும் அதிகபட்சமாகச் சொன்னார்கள். விசே விடைபெற்றுக்கொள்ள, அவரது மேடைப் பஞ்சாயத்து முடிந்து மூன்று ஓட்டு வாங்கியக் கடுப்பில், பாருவின் பஞ்சாயத்து வீட்டுக்குள் ஆரம்பமானது.
விசே முன் தன்னைப்பற்றி சொன்ன ஒவ்வொருவரிடமும் போய் விளக்கம் கொடுக்கிறேன் என்று பேசி டார்ச்சர் செய்தார். சாப்பிடும்போதும், சாப்பாடே இறங்கல' என்று நெஞ்சம் விம்ம சொல்லிவிட்டு சாப்பாட்டுத் தட்டோடு தனியே போய் உட்கார்ந்து அழுதார்.