
காலையிலேயே கிரிஞ்சுக் கலையை, மோனோலாக் பண்ணச் சொல்லி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நன்றாகவே பண்ணினார். ‘ஐஸ்க்ரீம் மாதிரி பிங்க் டிரஸ், கால் கொலுசு, முடியொதுக்கும் லாகவம், உதடு சுழிக்கும் அழகு’ என அவர் தன்னியல்பில் வர்ணிப்பதைப் பார்த்தால், இவர் எந்த லட்சணத்தில் இடைக்கால சாமியார் வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என்று நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை!
நான் டீலக்ஸ் வீடு, ஃபன் டாஸ்க் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எஃப்ஜேவை இரிடேட் பண்ணிக் கொண்டிருந்தார் ஆதிரை. ஏன் வேறு ஆளே கிடைக்கவில்லையாமா? அவரும் முதலில் டான்ஸ் ஆடிக்கொண்டே தோசை சுட்டார். அப்புறம் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே தோசை சுட்டார். அதன் பின்னும் விடாமல் தலைகீழா பல்டி அடித்துக்கொண்டே தோசை சுடு என்று சொன்னதும் கடுப்பாகி, ‘கிறுக்குப் பயபுள்ள, போயிரு, இல்லைன்னா உன் தலையில தோசை மாவை ஊத்தி தோசை சுட்டுருவேன்’ என்று ஆதிரையை விரட்டிவிட்டார். எதிர்பார்த்தது போலவே, ‘அவனுக்கு என் மேல லவ்வே இல்லை’ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார் ஆதிரை! நடத்துங்கம்மா!
தன்னை சமாதானப்படுத்த அவன் வருவான் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, எஃப்ஜே முந்திக்கொண்டு தனியே போய் உட்கார்ந்துகொண்டு சோக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் சமாதானப்படுத்த ஆதிரை போக வேண்டியதாயிற்று. பிரேக்கப் ஆகப்போகிறது என்று ஆவலோடு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க சமாதானமாகித் தொலைத்தார்கள்.
அடுத்து மாஸ்க் டாஸ்க்! சிலபல அடிதடிகள், கபடி கிடுக்கிப்பிடிகளுக்குப் பின்னர் டாஸ்க் முடிவுக்கு வந்தது. முதலில் சாதா வீட்டினர் குழுவாக வென்றனர். அடுத்து அதிலிருந்து கமருதீன் வென்றார். இந்த வெற்றிக்காக அவருக்கு அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தது. தன் வன்மம் வெளிப்படுகிறது என்று கூட அறியாமல், சபரி வெளியேறியதற்கு பந்தா பாரு குதித்துக் குதித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். பின்னர், டின்னர் போச்சே என்ற வயிற்றெரிச்சலில் பாரு, பூசணி, கலை ரகசியக் குழு கூடி, ‘இங்கே பல ரகசியக் குழுக்கள் ஃபார்ம் ஆகியிருக்கு’ என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த வாரம் யாராரை நாமினேஷன் செய்ய வேண்டும் என்றும் பேச்சு போனது, அது எதையும் இவர்களால் நடத்தமுடியாது என்று தெரியாமல்!
அடுத்து ’லவ் பண்ணி ரொம்ப நேரமாச்சில்ல, வா லவ் பண்ணலாம்’ என்று குளிக்கப்போன துஷாரை தள்ளிக்கொண்டு போனார் அரோரா. அவர் மைக்கை கழற்றி வைத்ததை மறக்க, எதிராக நின்று கொண்டு பேசிய அரோராவுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் மைக்கிலும் அவர் பேசுவது கேட்காத வண்ணம் குசுகுசுவென்று எதையோ பேச, ’என்ன இழவு இது?’ நமக்கே எரிச்சல் வந்தால் பிக்பாஸுக்கு வராதா? மைக்கைப் போடச்சொன்னார். ஓடிப்போய் எடுத்துப் போட்டுக்கொண்டு வந்த துஷார், பாத்ரூமில் தொங்கிக்கொண்டிருந்த கமருதீனின் மைக்கையும் எடுத்து வந்தார். ஆனால் அதைக் கொடுத்தாரா என்றும் தெரியவில்லை. மைக் கிடக்குது ஒரு பக்கம் என்று துஷாரை மீண்டும் இழுத்து உட்கார வைத்து குசுகுசுவென்று பேச, கடுப்பான பிக்பாஸ் லிவிங் ரூமுக்கு எல்லோரையும் அழைத்து, லெஃப்ட் ரைட் வாங்கியதோடு, துஷாரையும் தல பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தார்! அரோராவின் லீலைகளினால் ஏற்பட்ட விளைவு!
சோபாவில் உருண்டு கொண்டிருந்த பூசணியிடம், பந்தா பாரு, ‘நம் இருவரைத் தவிர இந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் விஷம்’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்தார். பூசணியும் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்.
அடுத்து வெற்றியாளர்களான சாதா வீட்டு போட்டியாளர்களுக்கு லக்சுரி டின்னர். டீலக்ஸ் வீட்டாரை டிவியில் பார்க்க வைத்தபடி நடந்தது! இது சற்று சங்கடமான நிலைதான், ஆனால் இந்த உளவியல் வீட்டுக்குள் இது சகஜமான நிலையே!